நடராசா லோகதயாளன்
இலங்கையில் காணி சீர்த்திருத்தம் என்பதும் அதற்காக அமைக்கப்பட்ட ஆணக்குழுவும் அதன் நோக்கத்தை எட்டியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. காணிச் சீர்திருத்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டதன் நோக்கமே தலைகீழாக மாறுகின்றதா என எழுப்பப்படும் கேள்விக்கு பதிலளிக்கக்கூட யாருமில்லாதது பெரும் கவலையான விடயமாகவுள்ளது.
காணி உச்ச வரம்புச் சட்டத்தின் கீழ் தனி ஒருவர் 50 ஏக்கர் நிலத்திற்கு மேல் வைத்திருக்க முடியாது என்ற சட்டம் உருவானபோது பெரும் நிலச்சுவாந்தர்கள் தம் வசம் இருந்த மேலதிக நிலத்தை அரசிடம் கையளித்தபோது அந்த நிலங்கள் காணிச் சீர் திருத்த ஆணைக் குழுவின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இவ்வாறு 50 ஏக்கரை வைத்துக்கொண்டு மிகுதியை அரசிடம் கையளிக்கப்பட்ட நிலங்களில் அரசு மட்டும் எப்படி 50 ஏக்கருக்கும் அதிகமாக தனியாருக்கு வழங்குவதனை எவ்வாறு எற்றுக்கொள்ள முடியும் எனக் கேள்வி எழுப்பப்படுகின்றது.
நிறுவனங்கள், கொம்பனிகளின் பெயரில் பல நூறு ஏக்கர்களும் தனிப்பட்ட நபர்களிற்கு 60 முதல் 70 ஏக்கரும் வழங்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபர்களிற்கு 70 ஏக்கரை அடையாளம் காண்பித்துவிட்டு அந்த இடம் ஆணைக்குழுவின் அனுமதி இன்றி சிலர் அடாத்தாக பிடித்துள்ளதாக்கூறி தப்பிக்கின்றனர் எனவும் குற்றம் சாட்டப்படுகின்றது.
இதற்கு சிறந்த உதாரணமாக மன்னார் அடம்பனில் 72 ஏக்கர் நிலத்தை அடாத்தாக பிடித்துள்ளவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்ட சமயம் வடக்கு ஆளுநரின் தலையீட்டினால் சட்ட நடவடிக்கை தடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டம் அடம்பன் நெடுவரம்பு பிரதேசத்தில் சாளம்பன் என்னும் பகுதியில் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆளுகையில் உள்ள நிலத்தில் 72 ஏக்கர் நிலத்தை தாமோதரம்பிள்ளை யோகராசா என்னும் நகைக் கடை உரிமையாளர் அடாத்தாக பிடித்து வைத்துள்ளார் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. இவ்வாறு அடாத்தாக அந்த காணியை பிடித்து வைத்துள்ள நபரை அங்கிருந்து வெளியேற்ற சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரியினால் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் இந்தாண்டு ஏப்ரல் மாதம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இந்த முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் நடவடிக்கை எடுக்க முற்பட்ட சமயம் வடக்கு மாகாண ஆளுநரின் தனிப்பட்ட செயலாளர் ஆணைக்குழுவின் ஆணையாளருடன் கொழும்பில் நேரில் சென்று முறைப்பாட்டை மீளப்பெறுமாறு கூறியுள்ளார்.
இதற்கமைய ஆணைக்குழுவின் ஆணையாளர் முறைப்பாட்டை பதிவு செய்த உத்தியோகத்தரை தொடர்புகொண்டு முறைப்பாட்டை மீளப்பெறுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதன் மூலம் 72 ஏக்கரை அடாத்தாக பிடித்து வைத்திருக்கும் நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு
அதிகாரிகள் தடுக்கப்படுவதாக விசணம் தெரிவிக்கப்படுகின்றது.
இதே மன்னார் மாவட்டத்தில் வெறும் 112 ஏக்கர் நிலத்தை 20 பேச் விதம் ஆயிரம் குடும்பங்களிற்கு வீடு அமைத்து குடியிருக்க முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வழங்கினார் என்ற ஒரே காரணத்திற்காக அந்த மக்களிற்கு 20 பேச்சிற்கான உறுதியை வழங்க மறுக்கும் ஆணைக்குழு தனி ஒரு மனிதன் 72 ஏக்கரை அடாத்தாக பிடித்து வைத்திருப்பதனை கண்டும் காணாதது போன்று வாய் மூடி மௌனியாக இருப்பது ஏன் என்று பொதுமக்கள் வினா எழுப்புகின்றனர்.
பிரச்சனை இவ்வளவு தீவிரமாக இருக்கும் போது வடக்கு மாகாண சபை ஆளுநர் ஏன் மௌனமாக இருக்கிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தனது தனிப்பட்ட செயலாளர் தனக்கே தெரியாமல் ஆணைக்குழுவிடம் பேசினார் என்று கூறி ஆளுநர் தப்பிக்க முயல்கிறார் என்றும் அவர் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.
ஆனால் இரண்டு அல்லது மூன்று பரப்பு நிலத்தில் குடியிருப்பவனிற்கு மட்டுமே சட்டம் தன் கடமையைச் செய்யும், அரசின் நிலங்களை ஏக்கர் கணக்கில் அபகரிப்பவர்கள் தொடர்பில் வாய்மூடி இருக்கும் என்ற நிலை நாட்டில் உள்ளதா என்ற கவலைகள் மேலோங்கி வருகின்றன.
இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து காணி சீர்திருத்த ஆணையம் இதுவரை எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை.