”வெறுமனே வந்து பாராளுமன்ற கதிரைகளைச் சூடாக்கிவிட்டு, விவாதங்களில் வீர முழக்கமிட்டு பேசிவிட்டு, சலுகைகளை அனுபவித்து விட்டு சென்றுவிட்டால் மட்டும் போதாது. தமது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க பாராளுமன்றத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதற்கு பாராளுமன்றத்தில் எம்.பி.க்களுக்குரிய சிறப்புரிமைகள்,ஏற்பாடுகள் ,வாய்ப்புக்கள் தொடர்பில் மக்களுக்குச் சரிவர இதுவரை தெரியவராததாலேயே இவர்களில் பலரும் மீண்டும் மீண்டும் எம்.பிக்கள் ஆகிக்கொண்டிருக்கிறார்கள்”
கே.பாலா
நாட்டில் ஜனாதிபதித் தேர்தலா அல்லது பாராளுமன்றத் தேர்தலா முதலில் நடக்கும் என்ற வாதப் பிரதிவாதங்கள் நடக்கும் நிலையில் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள ஜனாதிபதி வேட்பாளர்களும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தற்போதைய எம்.பி.க்கள்,முன்னாள் எம்.பி.க்கள் , தாமும் ஒரு எம்.பி.யாக வேண்டுமென விரும்புவோரும் தயாராகி வரும் நிலையில் பாராளுமன்றத்திற்கு இவர்களை அனுப்பி வைக்கும் வாக்காளர்களான மக்கள் ”’வாக்கு’எனும் தமது ஆயுதத்தை பயன்படுத்தும் போது பாராளுமன்றம் தொடர்பிலும் அங்கு தம்மால் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட எம்.பி.க்கள் தமது மக்களுக்காக செயற்பட்ட விதம் தொடர்பிலும் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
நாட்டில் பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடக்கும் போது தங்களின் கருத்துக்களைத் தேர்தலின் மூலம் பதிவு செய்து, தங்கள் சார்பில் ஒவ்வொரு இன மக்களும் தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்தில் தமது குரலாக ஒலிப்பதற்காக நம்பிக்கையுடன் அனுப்பி வைப்பர். இவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தனிக்கட்சியாகவோ அல்லது மற்ற கட்சிகளுடன் அல்லது அரசுடன் சேர்ந்து தமது மக்களின் நலன்களுக்காக செயற்படவேண்டும். தம்மை மக்கள் ஏன் பாராளுமன்றத்திற்கு அனுப்பினார்கள் என்பதை உணர்ந்தும், தமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்கும் மக்கள் தமக்குக் கொடுத்த உயர்நிலை வாழ்க்கைக்கு பிரதி உபகாரமாகவேனும் அந்த மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளையாவது பாராளுமன்ற சிறப்புரிமைகளுக்கு ஊடாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.ஆனால் அவ்வாறானதொரு தமது மக்களுக்கான செயற்பாடுகளை தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களிடையே காண முடியவில்லை.
மக்களால் தமது பிரதி நிதிகளாக பாராளுமன்றம் அனுப்பப்படுவோர் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கான உரிமைகளை,அபிலாஷைகளை, தேவைகளை ,தமது மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள், நெருக்கடிகளை இப் பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கின்றார்களா? தீர்வுகளை பெற்றுக்கொடுத்திருக்கின்றார்களா என்பது தொடர்பில் மக்கள் கண்டிப்பாக ஆராய ,அறிந்து கொள்ள வேண்டிய தேவையுள்ளது.
இலங்கைப் பாராளுமன்றத்திலுள்ள 225 எம்.பி.க்களில் 196 எம்.பி.க்கள் 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்து பொது வாக்கெடுப்பின் மூலமும், மிகுதி 29 எம்.பி.க்கள் தேசிய அளவில் கட்சிகள் பெறும் வாக்கு எண்ணிக்கைக்கேற்ப கட்சிகளின் தேசியப் பட்டியலிருந்தும் தெரிவு செய்யப்படுகின்றனர்.தற்போது பாராளுமன்றத்தில் உள்ள 15 சிங்கள,தமிழ், முஸ்லிம்,மலையக அரசியல் கட்சிகளை பிரதி நிதித்துவப்படுத்தி 176 சிங்கள எம்.பி.க்களும் 21 முஸ்லிம் எம்.பி.க்களும் 19 தமிழ் எம்.பி.க்களும் 9 மலையக தமிழ் எம்.பி.க்களுமாக 225எம்.பி.க்கள் உள்ளனர்.
இந்த நான்கு வகை மக்கள் பிரதிநிதிகளான எம்.பி.க்களில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான எம்.பி.க்களே மிகவும் பலவீனமான நிலையிலும் செயற்படாத் தன்மையிலும் தமது சுய தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொள்ளும் குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்களாகவும் தமது மக்கள் பற்றிய அக்கறையற்றவர்களாகவும் வெறுமனே உணர்ச்சிகரமான உரைகளை மட்டும் ஆற்றுபவர்களாகவும் உள்ளனர். சரி இவர்கள் எந்த வகையில் தமது மக்கள் தொடர்பில் அக்கறையற்று செயற்படுகின்றனர் என்பதனை பார்ப்போம்.
பாராளுமன்றத்தை பொறுத்தவரையில், எம்.பி.க்களுக்கு பல்வேறு சிறப்புரிமைகள் உள்ளன. தம்மைத் தெரிவு செய்த மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை, நியாயங்களைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய வசதி வாய்ப்புகள் பல இருக்கின்றன. பாராளுமன்ற அமர்வுகளின் போது மனுக்கள் சமர்ப்பணம் அல்லது வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான நேரம் அல்லது சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை, தனி உறுப்பினர் பிரேரணை அல்லது 27/2 இன் அடிப்படையில் முன்வைக்கப்படும் விசேட கூற்று அல்லது பிரதமரிடத்திலான நேரடிக் கேள்வி நேரம் என தமது மக்களின் பிரச்சினைகளை சபையின் கவனத்திற்கு கொண்டுவர பல வாய்ப்புகள் உள்ளன .
தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் எதிர்நோக்கும் நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்கு பாராளுமன்ற உறுப்பினராக உள்ள ஒருவர் பாராளுமன்றத்திற்கு அவ்வாறான நிர்வாக ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நபர் தொடர்பான மனுக்களைச் சமர்ப்பிக்க முடியும். அது காணிப் பிரச்சினை, நஷ்டஈட்டுப் பிரச்சினை, ஓய்வூதியப் பிரச்சினை. இடமாற்றப்பிரச்சினை,பதவி உயர்வுப்பிரச்சினை , அரசியல் பழிவாங்கல் பிரச்சினை என எதுவாகவும் இருக்க முடியும். அவ்வாறு மனுவைச் சமர்ப்பிக்கும் போது அந்த மனு பரிசீலனைக்காக பொது மனுக்கள் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வுகள் அல்லது அதற்கான பதில்கள் அதனுடன் தொடர்புபட்ட அமைச்சரினால் பெற்றுக் கொடுக்கப்படும்.
அதேபோன்று, வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது பிரதமர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சர்களிடம் தமது மக்களின் பிரச்சினை அல்லது தமது பிரதேசத்தின் பிரச்சினை அல்லது தமது மாவட்ட , மாகாணத்தின் பிரச்சினை அல்லது ஏதாவது ஒரு விடயம் தொடர்பில் ஒரு எம்.பி.பாராளுமன்றம் கூடும் நாட்களில் ஒரு நாளில் இரண்டு வினாக்களை எழுப்ப முடியும். இந்த இரண்டு வினாக்களிலும் துணை வினாக்களாக தலா இரு வினாக்களை எழுப்ப முடியும். இவ்வாறான வினாக்களுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சரோ இராஜாங்க அமைச்சரோ பிரதி அமைச்சரோ கண்டிப்பாகப் பதில் வழங்க வேண்டும். சில வேளைகளில் கால அவகாசம் கோரினாலும் அக்கேள்விக்கு அவர்கள் பதிலளித்தே ஆகவேண்டும். பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட கேள்வியாக இருந்தால் மட்டும் சில வேளைகளில் பதில் வழங்கப்படமாட்டாது.
இதேபோன்றுதான் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை. பாராளுமன்ற சபை அமர்வு மீண்டும் அடுத்து வருகின்ற ஒரு திகதிக்கு சபை ஒத்திவைக்கப்படும் போது கொண்டு வரப்படுவதே சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை. இது பொது முக்கியத்துவம் வாய்ந்த, அவசரம் கருதிய விடயம் ஒன்றின் மீது குறுகிய அறிவித்தலில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் கொண்டுவர முடியும்.இதற்கு சம்பந்தப்படட அமைச்சர் பதில் அல்லது தீர்வு வழங்க வேண்டும்.
தனிநபர் பிரேரணையும் இதுபோன்ற ஒன்றுதான்.இப் பிரேரணையும் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு அதற்குச் சம்பந்தப்பட்ட அமைச்சரினால் பதிலும் தீர்வுகளும் வழங்கப்படும்.இவற்றைவிட கட்சித் தலைவர் ஒருவரினால் 27/2 இன் அடிப்படையில் முன்வைக்கப்படும் விஷேட கூற்று மிகமுக்கியமானது. பொதுமக்களின் ,நாட்டின் முக்கியம் கருதிய விடயங்கள் தொடர்பில் சபையில் கவனத்திற்குக் கொண்டுவந்து அது தொடர்பான பதிலையும், தீர்வையும் இதன்மூலம் பெற்றுக் கொள்ள முடியும்
ஆனால் இவ்வாறான எந்தவொரு சிறப்புரிமைகளையும், வாய்ப்புகளையும் தமிழ் எம்.பி.க்கள் பயன்படுத்துவது அரிதிலும் அரிதாகவே உள்ளது.சில வேளைகளில் வாய் மூல விடைக்காண வினாக்களில் இவர்கள் கேள்விகளைக் கேட்டிருந்தாலும் கேள்விக்கான நேரத்தின் போது சபையில் இருப்பதில்லை.தற்போது பாராளுமன்ற அமர்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதால் மக்களால் இதனை நன்றாக அவதானிக்க முடியும் .
முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான எம்.பி.க்களை பொறுத்த வரையில் அவர்கள் பலமான நிலையிலேயே உள்ளனர். அவர்கள் அமைச்சரவை அமைச்சர்களாகவும்,இராஜாங்க அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் இருந்து கொண்டு தமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கின்றனர் .
பாராளுமன்றத்தைப் பொறுத்தவரை தமிழ் எம்.பி.க்கள் 19 பேர் இருந்தாலும் இவர்களில் ஒரு அமைச்சரவை அமைச்சரும் [டக்ளஸ் தேவானந்தா ] 3 இராஜாங்க அமைச்சர்களும் [வியாழேந்திரன் -சந்திரகாந்தன் -சுரேன் ராகவன் ] மட்டுமே உள்ளனர். முஸ்லிம் பிரதிநிதிகள் 21 பேர் உள்ள நிலையில் இவர்களில் ஒருவர் அமைச்சரவை அமைச்சராகவும் ஒருவர் இராஜாங்க அமைச்சரா கவும் உள்ளனர். மலையக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் 9பேர் உள்ள நிலையில் இவர்களில் ஒருவர் அமைச்சரவை அமைச்சராகவும் ஒருவர் இராஜாங்க அமைச்சராகவும் உள்ளனர்.
தமிழ் எம்.பிக்கள் சார்பில் அமைச்சரவை அமைச்சராகவும் இராஜாங்க அமைச்சர்களாகவும் இருப்பவர்கள் தமிழ் தேசியத்துக்கு விரோதமானவர்களாகவும் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு உரத்து குரல் கொடுக்க முடியாதவர்களாகவுமே உள்ளனர். இதன் மூலம் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் எந்தளவுக்கு பலவீனமான நிலையில் உள்ளனர் என்பதனை தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறான நிலையில் இருந்தும் எம்.பி.க்கள் என்ற வகையில் தமக்கு கிடைக்கும் மேற்கூறியுள்ள வாய்ப்புகளைக் கூட தமது மக்களுக்காக பயன்படுத்தாத,பயன்படுத்த விரும்பாத அல்லது பயன்படுத்தத் தெரியாத தமிழ் எம்.பி.க்களை என்ன செய்வது?
இனப்பிரச்சினைக்கான தீர்வு, காணாமல் போனோர் பிரச்சினை , இராணுவ ஆக்கிரமிப்பு .காணிப் பிரச்சினை ஆகிய 4விடயங்கள் மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சினை என்ற நினைப்பிலேயே பாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி.க்களின் கண்துடைப்பு செயற்பாடுகள் அமைந்துள்ளன. தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் ,வாழ்வாதாரப் பிரச்சினைகள், அன்றாடப் பிரச்சினைகள் ,தமிழ் இளைஞர் ,யுவதிகளின் வேலை வாய்ப்பின்மைப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அவர்கள் அக்கறை காட்டாத நிலையே உள்ளது.
வெறுமனே வந்து பாராளுமன்ற கதிரைகளைச் சூடாக்கிவிட்டு, விவாதங்களில் வீர முழக்கமிட்டு பேசிவிட்டு, சலுகைகளை அனுபவித்து விட்டு சென்றுவிட்டால் மட்டும் போதாது. தமது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க பாராளுமன்றத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். பாராளுமன்றத்தில் எம்.பி.க்களுக்குரிய சிறப்புரிமைகள், வசதிவாய்ப்புகள் தொடர்பில் மக்களுக்குச் சரிவர இதுவரை தெரியவராததாலேயே இவர்களில் பலரும் மீண்டும் மீண்டும் எம்.பிக்கள் ஆகிக்கொண்டிருக்கிறார்கள்.தமது அடிப்படை,வாழ்வாதார பிரச்சினைகளுக்குப் பாராளுமன்றத்தின் ஊடாக இலகுவாகத் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடிந்தும், அதுதொடர்பில் தமது பிரதிநிதிகள் அக்கறையின்றி இருப்பது மக்களுக்குத் தெரிய வந்தால், இவர்கள் மீண்டும் எம்.பி.க்களாவது குதிரைக் கொம்பாகவே இருக்கும்.