யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
கடந்த வாரம் ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட அவர் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனின் வீட்டுக்கும் சென்றார். அது விக்னேஸ்வரனுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதைதான், அதேசமயம் சந்திப்பின்போது அவர் சுட்டிக்காட்டிய முக்கியமான விடயங்களில் ஒன்று, தமிழ்ப் பொது வேட்பாளர் பற்றியதாகும். ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தக்கூடிய அளவுக்கு தமிழ்க் கட்சிகள் ஐக்கியப்படுமா என்று அவர் விக்னேஸ்வரனிடம் கேட்டிருக்கின்றார்.
அணில் அந்தக் கேள்வியை விக்னேஸ்வரனிடம் கேட்டது தற்செயலானது அல்ல. அதுவும் வீடு தேடிப் போய்க் கேட்டது தற்செயலானது அல்ல. விக்னேஸ்வரன் ஏற்கனவே பொது வேட்பாளர் தொடர்பாகப் பேசி வருகின்றார். அவ்வாறு பொது வேட்பாளராக நிற்பதற்குத் தான் தயார் என்றும் அவர் அறிவித்திருந்தார். பொது வேட்பாளராக நிற்கப் போகின்றவர் சிங்களம் தெரிந்தவராக இருப்பது நல்லது என்றும் அவர் பேசியிருக்கிறார். அவர் சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களின் நியாயங்களை எடுத்துகூற வேண்டும் என்பதே அவருடைய எதிர்பார்ப்பு. ஆனால் அவ்வாறு ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்குத் தமிழ்க் கட்சிகள் ஐக்கியப்பட்டு ஒரு முடிவை எடுக்காது என்று ரணில் விக்கிரமசிங்க விக்னேஸ்வரனிடம் கூறியிருக்கிறார். ஏன் அவர் அப்படிக் கூறினார்? ஏனெனில் அந்த முயற்சியை முன்னெடுத்துவரும் அரசியல்வாதிகளில் ஒருவராகிய விக்னேஸ்வரன் அதைத் தனக்கு விடுக்கப்பட்ட ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு மேலும் தீவிரமாக அதில் ஈடுபடலாம் என்று உள்நோக்கம் ரணிலிடமிருந்து இருக்கலாம்.
ஏனெனில்,ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் முன்னிறுத்தப்பட்டால், அவர் பெருமளவுக்கு சஜித் பிரேமதாசாவுக்கு சேரக்கூடிய வாக்குகளை பறித்து விடுவார் என்ற எதிர்பார்ப்பு பொதுவாக உண்டு. ஏனெனில் தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. பொதுவாக தமிழரசுக் கட்சி யுஎன்பிக்குச் சாய்வானது. அடுத்த காரணம்,ரணில் விக்கிரமசிங்க இப்பொழுது ராஜபக்சக்களின் தயவில் தங்கியிருப்பவர். கடந்த 15 ஆண்டுகளிலும் நடந்த மூன்று ஜனாதிபதி தேர்தல்களின் போதும் தமிழ் மக்கள் ராஜபக்சங்களுக்கு எதிராக ஒன்றுபட்டு நின்றார்கள். இந்த முறையும் அவர்கள் அவ்வாறு ஒன்றுபட்டு நின்றால் தமிழ் வாக்குகள் ரனிலுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு. படித்த ஆங்கிலம் பேசும் உயர்வர்க்கம் ரணிலுக்கு வாக்களிக்கக்கூடும். பொருளாதாரம் நெருக்கடியில் இருந்து அவர் நாட்டை மீட்டெடுத்து இருக்கிறார் என்ற அபிப்பிராயம் தமிழ்,சிங்கள,முஸ்லிம் உயர் வர்க்கத்தினர் மத்தியில் உண்டு.
எனவே அந்த வாக்குகள் தனக்கு கிடைக்கும் என்று ரணில் நம்புகின்றார்.விக்னேஸ்வரனும் அந்த உயர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்தான். இந்த அடிப்படையில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டால் அவர் சஜித் பிரேமதாசாவுக்குத்தான் பாதகமாக இருப்பார். அவர் சஜித்தின் வெற்றியை கேள்விக்கு உள்ளாக்குவார். இப்பொழுது கிடைக்கும் ஆகப்பிந்திய புள்ளிவிபரங்களின்படி ஜனாதிபதித் தேர்தலில் சஜித் அதிகம் வெல்லக்கூடிய வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக அனுர. மூன்றாவதாகத்தான் ரணில் காணப்படுகிறார். ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன் அல்லது சில கிழமைகளுக்கு முன் காட்சி தலைகீழாக மாறுவது உண்டு. ரணில் விக்ரமசிங்க என்ற புத்திசாலி, சந்திரசாலி என்னென்ன தந்திரங்களைச் செய்வார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.அதிலும் குறிப்பாக அவர் ஆட்சிக்கு வருவதைத் தான் மேற்கத்திய நாடுகள், ஐநா, பன்னாட்டு நாணய நிதியம் போன்றனவும் விரும்புவதாகத் தெரிகிறது.
எனவே விக்னேஸ்வரனே வீடு தேடிச் சென்று ரணிலுக்குக்கூறிய செய்தி என்பது சஜித்தை தோற்கடிக்கும் நோக்கிலானது என்றும் எடுத்துக் கொள்ளலாம். ரணில் அதை எந்தத் தந்திர நோக்கத்தோடும் கூறியிருக்கலாம். ஆனால் அதை அவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதுதான் உண்மை. தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் குடிமக்கள் சமூகங்களுக்கு இடையே காணப்படும் ஐக்கியம் கட்சிகளுக்கு இடையே கிடையாது.
சில விவகாரங்களை மையப்படுத்தி தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கலாம். மற்றும்படி கட்சிகள் கட்சிகளாகவே இருக்கின்றன.அவை தங்களுடைய வாக்கு வங்கியை கட்டி எழுப்புவதில்தான் கவனமாக இருக்கின்றன.கடந்த 15 ஆண்டு கால தமிழ் அரசியலானது அப்படி ஒரு அரசியல் கலாச்சாரத்தில்தான் தடம்பதித்து நிற்கின்றது. அதாவது கட்சிமைய அரசியல்.கடந்த 15 ஆண்டுகளாக கட்சிகளின் உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் வாக்கு கேட்கும் பொழுது தங்களுக்கு என்றுதான் வாக்குகளைச் சேகரித்தார்கள். அல்லது ஆகக்கூடியபட்சம் கட்சிக்கென்று வாக்குகளைச் சேகரித்தார்கள் என்றும் சொல்லலாம். ஆனால் விகிதாசார பிரதிநிதித்துவத்தின் கீழ் ஒரு கட்சி வாக்காளரே தனது சக கட்சி வாக்காளருக்கு எதிராக செயல்படும் நிலைமைகளும் அதிகமாகக் காணப்பட்டன.
இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் தனக்கென்று காசு செலவழித்து தனக்கென்று இரவு பகலாக உழைத்து வாக்குத் திரட்டும் ஒரு தேர்தல் மையப் பண்பாட்டில் தேசத்துக்காக வாக்கை திரட்ட எத்தனை அரசியல்வாதிகள் தயார்? ஏனென்றால் தமிழ்ப் பொது வேட்பாளருக்காகத் திரட்டப்படும் வாக்குகள் ஒரு தேசத்துக்கானவை.ஒரு தனி நபருக்கானவை அல்ல. அங்கு ஒரு தனிநபர் வேட்பாளராக நிறுத்தப்படுவார். ஆனால் அவர் எந்த ஒரு கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்த மாட்டார். எந்த ஒரு சமயத்தையோ அல்லது சாதியையோ அல்லது பிராந்தியத்தையோ அவர் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது. அவர் தமிழ்த் தேசிய ஐக்கியத்தின் குறியீடாக நிப்பார்.அவர் ஒரு பிரமுகராகக்கூட இருக்கவேண்டும் என்று இல்லை. அவர் தமிழ் மக்களின் ஐக்கியத்தைப் பிரதிபலிப்பார். அல்லது தமிழ் மக்களின் பொது நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் ஓர் அடையாளம்.அவ்வளவுதான்.
அவ்வாறு தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர் அந்தத் தேர்தல்மூலம் தனக்குக் கிடைக்கும் பிரபல்யத்தையும் பலத்தையும் எதிர்காலத்தில் கட்சித் தேவைகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்ற ஒரு உடன்படிக்கை அவரோடு எழுதப்பட வேண்டும் என்று சிவில் சமூகங்கள் எதிர்பார்க்கின்றன. எனவே ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படக்கூடிய ஒரு தமிழ்ப்பொது வேட்பாளர் எனப்படுகின்றவர், தனக்காக வாக்குக் கேட்கப் போவதில்லை. ஒரு கட்சிக்காக வாக்குக் கேட்கப் போகவில்லை. தமிழ் ஐக்கியத்திற்காகத்தான் வாக்குக் கேட்பார். தமிழ்ப் பொது நிலைப்பாட்டுக்காகத்தான் வாக்குக்குக் கேட்பார். இன்னும் அழுத்தமாகச் சொன்னால் தமிழ்த்தேசிய ஐக்கியத்துக்காக அவர் வாக்குகளைத் திரட்டுவார்.
இது கடந்த 15 ஆண்டுகளாகப் பெரிய அளவில் காணப்படாத ஒரு போக்கு. ஒரு தனி நபருக்காக,தனி அரசியல்வாதிக்காக,தனி நாடாளுமன்ற உறுப்பினருக்காக,அல்லது மாகாணசபை உள்ளூராட்சிசபை உறுப்பினருக்காக, வாக்குத் திரட்டும் ஒரு பண்பாட்டில் இருந்து இது முற்றிலும் மாறானது. தேசத்துக்காக வாக்குத் திரட்டுவது. அப்படியென்றால்,இங்கு செலவழிக்கப்படும் காசு தை செலவழித்தவருக்குத் திரும்பி வராது. ஒவ்வொரு தேர்தலின்போதும் அரசியல்வாதிகள் காசைச் செலவழிக்கும் பொழுது, அந்தக் காசு எப்படித் தங்களுக்கு லாபமாக வரும் என்றுதான் சிந்திப்பார்கள். அதை ஒரு முதலீடாகத்தான் அவர்கள் பார்ப்பார்கள்.அது ஒரு தனிநபர் தனக்காக முதலீடு செய்யும் காசு. தனக்காக முதலீடு செய்யும் உழைப்பு.
ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது வேட்பாளருக்காகத் திரட்டப்படும் வாக்குகள் அத்தகையவை அல்ல அவை தேசத்துக்காகத் திரட்டப்படும் வாக்குகள். எனவே தன் சொந்தக் காசைச் செலவழித்து,அர்ப்பணித்து, இரவு பகலாக உழைத்து ஒரு பொது வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய வேண்டும். அவர் தேர்தலில் வெற்றி பெற மாட்டார். அவர் ஜனாதிபதியாகவும் வர மாட்டார். ஆனால் அவர் இரண்டு விடயங்களைச் செய்வார்.ஒன்று, பிரதான தென்னிலங்கை வேட்பாளர்களின் வெற்றியை சவால்களுக்கு உட்படுத்துவார். அதைவிட முக்கியமாக, அவர் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவார். தமிழ் மக்கள் ஒரு தேசமாகத்திரண்டு விட்டார்கள் என்ற செய்தியை தமிழ் மக்களுக்கும் உலகத்துக்கும் அவர் உணர்த்துவார்.
அவ்வாறு தேசத்துக்காக வாக்குத்திரட்டும் ஒரு தேர்தல் மையப் பண்பாடு என்பது,தமிழ் அரசியலில் கடந்த 15 ஆண்டுகளாக மிகக்குறைந்த அளவே மிகப் பலவினமான ஒரு போக்காகவே காணப்பட்டது.ஆனால் தமிழ்ப் பொது வேட்பாளர் என்று தெரிவு அதனை ஒரு பொதுப் போக்காகவும் பலமான போக்காகவும் மற்றும் நோக்கத்தைக் கொண்டது.இந்த விடயத்தில் கட்சிகள் தமது கட்சி நலன்களைக் கடந்து,தனிநபர் ஆதாயங்களை கடந்து, ஒரு தேசத்துக்காக ஒன்றுதிரளவும் உழைக்கவும் வேண்டியிருக்கும்.ஒரு தேசத்துக்காகத் தங்கள் சொந்தக் காசைச் செலவழிக்கவும் தியாகம் செய்யவும் அர்ப்பணிப்புகளுக்கு தயாராகவும் இருக்கவேண்டும். அவர்கள் அப்படித் தயாராக இருந்தால்,சிவில் சமூகங்களின் வேலை இலகுவாகிவிடும், சிவில் சமூகங்கள் திட்டமிடுவதுபோல கட்சிகளும் குடிமக்கள் சமூகங்களும் இணைந்த ஒரு பொதுக் கட்டமைப்பை வெற்றிகரமாக உருவாக்கலாம். அந்த பொதுக் கட்டமைப்பு,கட்டமைப்புரீதியாக ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே ரணில் விக்னேஸ்வரனிடம் முன்வைத்த சவால் என்பது அவருடைய தனிப்பட்ட வெற்றி இலக்கை நோக்கமாகக் கொண்டது.தன் எதிரியைத் தோற்கடிக்கும் தந்திரங்கள் மிகுந்தது. ஆனால் தமிழ் மக்கள் அதனை எதிர்கொள்ளும்போது அது யாரையும் தோற்கடிப்பது அல்லது யாரையும் வெற்றி பெற வைப்பது அல்லது யாரோடும் பேரம் பேசுவது என்ற நோக்கங்களைக் கொண்டதாக இருக்கக்கூடாது.மாறாக தமிழ்மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது; சிதறிக் கிடக்கும் தமிழ் மக்களை ஓரணியில் திரட்டுவது என்ற உயர்ந்த நோக்கத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
இதுவரையிலும் தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆகிய கட்சிகள்தான் பொது வேட்பாளர் என்ற சிவில் சமூகங்களின் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றன. ஏனைய கட்சிகளும் கூட்டுக்களும் இனிமேல்தான் தங்களுடைய நிலைப்பாட்டை வெளிப்படையாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கக்கூடும்
ஆனால் அதற்காக அதிக காலம் எடுத்தால்,அது தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற பொது நிலைப்பாட்டைக் கட்டியெழுப்புவதைச் சவால்களுக்கு உள்ளாக்கும். ஏனென்றால் தேசத் திரட்சியைப் பாதுகாப்பது என்பது எப்பொழுது தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.