நடராசா லோகதயாளன்
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தனியார் காணிகளை படைத் தரப்பிற்கு வழங்குவதற்கு அளவீடு செய்வதில்லை என்ற தீர்மானம் நேற்று வியாழக்கிழமை (30-05-2024 ) அன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை காலை சுழிபுரம் பகுதியில் கடற்படைக்கு மேலும் சில ஏக்கர் காணிகளை அபகரிக்கும் முயற்சியில் அரச தரப்பு அளவீடுகளை செய்ய முற்பட்ட வேளை அது அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டது.
இச்சம்பவம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் எதிரொலித்தது.
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் –அதாவது மே மாதம் 30 ஆம் திகதி வியாழக்கிழமை- வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சாள்ஸ் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே படையினருக்கு தனியார் காணிகள் அளவீடு செய்யப்படுவது நிறுத்தபப்ட வேண்டும் என்று கோரும் தீர்மானம் ஒன்றை யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருமான சிவஞானம் சிறிதரன் முன்மொழிந்தார்.
கடந்த 2011 ஆம் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் காலத்திலிருந்தே தனியார் காணிகளை அளவீடு செய்து அதை படையினருக்கு அளிக்கும் முயற்சிகள் தொடர்ந்தவண்ணமே உள்ளன. பல சந்தர்ப்பங்களில் அரசியல் கட்சிகளும், தமிழ் மக்களும் ஒன்றிணைந்து அந்த நடவடிக்கையை முறியடித்திருந்தாலும் அது தொடர்ந்துகொண்டே இருந்தது.
அவ்வகையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுழிபுரம்-திருவடியில் கடற்படையினருக்கு நிலம் சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினர் தனியார் காணிகளை அளவீடு செய்ய முயன்றதனால் அங்கு போராட்டம் இடம்பெற்றது.
எனவே இனி வருத் காலத்தில் படையிடருக்காக நிலம் சுவீகரிப்பதற்கு நில அளவைத் திணைக்களத்தினர் தனியார் காணிகளை அளவீடு செய்ய முயல்வதனை நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கோரக்கை விடுத்த சமயம் படையினருக்கு நிலத்தை சுவீகரிக்க அளவீடு செய்து தருமாறு பிரதேச செயலாளர்கள் தமக்கு கடிதம் அனுப்பிவிட்டு அதனை படையினருக்கும் தெரியப்படுத்துகின்றனர். அதனால் படையினர் எமது அலுவலகத்திற்கு வருகை தந்து அளவீடு செய்து தருமாறு கோருவதனாலேயே நாம் செல்கின்றோம். பிரதேச செயலாளர்கள் கடிதம் அனுப்பினால் அதனை நாம் அளவீடு செய்ய வேண்டியது கட்டாயம். எனவே எமக்கு கடிதம் அனுப்ப வேண்டாம் என பிரதேச செயலாளர்களை அறிவுறுத்துங்கள் என நில அளவைத் திணைக்கள அதிகாரி தர்மபாலன் தெரிவித்தார்.
இதன்போது தனியார் காணிகளை படைத் தரப்பிற்கு வழங்குவதற்கு அளவீடு செய்வதில்லை என்று தீர்மானம் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் முன்மொழிந்தவர் இந்த தீர்மானத்தை அங்கஜன் இராமநாதன் வழிமொழிய தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.