உதயன் விருது விழாவில் சிறப்பு விருந்தினராக வருகை தந்தை கனடாவிற்கான துணைத்தூதுவரிடம் கோரிக்கை
(ரொறன்ரோவிலிருந்து செய்தியாளர் அதிசயா)
“இலங்கையிலிருந்து இராணுவக் கெடுபிடிகளிலிருந்து உயிர் தப்புவதற்காக இந்தியா சென்று அங்கு தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக வாழும் எமது ஈழத்தமிழ் சொல்லொனா துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றார்கள். எனினும் அவர்கள் தங்கள் குடும்பத்தை கவனமாகக் கவனித்து தங்கள் பிள்ளைகளுக்கும் கல்வி அறிவூட்டும் வகையில் தங்களை அர்ப்பணித்துள்ளார்கள். இந்த பெற்றோர்களான அகதிகளின் பிள்ளைகள் அங்கு பரீட்சைசகளில் அதிக புள்ளிகளைப் பெற்றும் பல்கலைக் கழகங்கள் அல்லது கல்லூரிகளில் உயர் கல்வியைப் பெறமுடியாமல் அவர்களது அகதிகள் என்ற அந்தஸ்த்து தடுத்துவருகின்றது. மேற்படி திறமை வாய்ந்த பிள்ளைகளின் உயர்கல்வியைத் தொடரும் வகையில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே மேற்படி கட்டுப்பாடுகள் சிலவற்றை தளர்த்தி எமது உறவுகளின் பிள்ளைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக ஆக்குவதற்கு தங்களால் ஆன உதவிகளைச் செய்யுங்கள்”
இவ்வாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோவில் நடைபெற்ற உதயன் சர்வதேச விருது விழாவில் சிறப்பு விருந்தினராக வருகை தந்தை கனடாவிற்கானஇந்தியாவின் துணைத்தூதுவர் கௌரவ சித்தார்த் அவர்களிடம் கோரிக்கை விடுக்கையில் உதயன் பிரதம ஆசிரியரும் உதயன் விருதுகள் அறக்கட்டளையின் தலைவருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் வேண்டுகோள்விடுத்தார்.
அங்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பெற்றிருந்த கனடாவிற்கான இந்தியாவின் துணைத்தூதுவர் கௌரவ சித்தார்த் அவர்கள் ‘உதயன்’ சர்வதேச விருதுகள் வழங்கும் விழாவில் உரையாற்றும் போது இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழர்கள் கனடாவில் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக்கொள்வதற்காக இயன்றளவு உழைத்து வருகின்றார்கள். அத்துடன் அவர்கள் பல்வேறு துறைகளில் முன்னேற்றத்தை அடைந்துள்ளார்கள்.
அதற்கு மேலாக தமிழ் மொழி சார்ந்த ஊடகங்களின் பங்களிப்பையும் நான் நன்கு அறிவேன். வானொலிகள் மற்றும் அச்சு ஊடகங்கள் தங்கள் பணிகளை சிறப்பாக ஆற்றிவருகின்றன. குறிப்பாக கனடா உதயன் பத்திரிகை மற்றும் அதன் இணையத்தளம் ஆகியவை தொடர்பாக எமது தூதுவராலயத்தில் பணியாற்றும் பலர் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார்கள்’ என்று புகழாரம் சூட்டினார்.
அதன் பின்னர் அவருக்கு நன்றி தெரிவித்து உரையாற்றியபோதே உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் மேற்கண்டவாறு “தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக வாழும் எமது ஈழத்தமிழ் சொல்லொனா துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றார்கள். அவர்கள்பிள்ளைகள் அங்கு பரீட்சைசகளில் அதிக புள்ளிகளைப் பெற்றும் பல்கலைக் கழகங்கள் அல்லது கல்லூரிகளில் உயர் கல்வியைப் பெறமுடியாமல் அவர்களது அகதிகள் என்ற அந்தஸ்த்து தடுத்துவருகின்றது” என்று தெரிவித்தார். அதற்கு பதிலளிக்கையிலும் துணைத்தூதுவர் சாதகமான கருத்துக்களைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.