(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)
(31-05-2024)
இவ்வாண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டை தனக்கும் ஒதுக்கித் தருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
2024ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும், மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட போதும் எனக்கு வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வுக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதியிடம் மன்னார், வவுனியா மாவட்டங்களுக்கென தன்னால் முன்மொழியப்பட்ட திட்டங்களுக்கு ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கியது போல் தனக்கும் அனுமதி வழங்குமாறு நேரில் கோரியிருந்தேன்.
அதன்போது நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதியின் உதவிச் செயலாளரை அழைத்து ஏன் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனக் கேட்டதுடன், நிதி ஒதுக்கீட்டுக்கு ஏற்பாடு செய்யுமாறும் அறிவுரை வழங்கியிருந்தார்.
இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐம்பது மில்லியன் ரூபா நிதி அபிவிருத்தி திட்டங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட போதும் சில எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.