தமிழ் சினிமாவில் அடுத்து வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் நடிகர் கவின். கவின் விஜய் டி.வியில் புகழ் பெற்ற கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் சின்னத்திரை பயணத்தை துவங்கினார். பின் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் வேட்டையனாக வந்து மக்கள் அனைவரையும் கவர்ந்தார். இதனால் கவினுக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. பின்னர், கவின் ‘நட்புனா என்ன தெரியுமா’படத்தில் கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகினார். கவின் பிக்பாஸ் மூன்றாம் சீசனில் பங்கேற்றார். பிக் பாஸ் கவினுக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
பிக்பாஸிற்கு பிறகு ‘லிஃப்ட்’ என்ற படத்தில் நடித்தார். ஓடிடி யில் மட்டும் வெளியான லிஃப்ட் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இளன் இயக்கத்தில் கவின் நடித்து வெளியான ஸ்டார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக பல சுவாரசியமான திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் கவின். அடுத்து நடன இயக்குனரான சதீஷ் இயக்கும் கிஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் தயாரிப்பில் சிவபாலன் இயக்கத்தில் ப்ளடி பக்கர் என்ற திரைப்படத்திலும் நடிக்கவிருக்கிறார். வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அசோசியேட்டான விஷ்னு எடவன் இயக்கும் முதல் படத்தில் கவின் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நயன்தாரா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கவுள்ளது.