நடராசா லோகதயாளன்.
இலங்கையில் சில அரசியல்வாதிகள் அரசியல் ரீதியான செல்வாக்கைப் பயன்படுத்தி குறிப்பிட்ட இடங்களிலே கல்வி மற்றும் பிரதேச நிருவாகத்தினைச் சீரழித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு உதாரணம் அம்பாறை மாவட்ட தமிழ் கல்வி வலயங்களும், கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயமும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் 05-06-2024 தினம் இடம்பெற்ற கல்வியில் இருக்கும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்ற ஒத்திவைப்புப் பிரேரணை மீதான உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
”நாடாக இருக்கலாம் பிரதேசமாக இருக்கலாம் எதுவாக இருப்பினும் கல்வியால் மாத்திரமே அவற்றின் முன்னேற்றத்தை அடைய முடியும் என்பது எங்கள் எல்லோரது கருத்தாகும். அந்த அடிபபடையில் கல்வியை மேம்படுத்த வேண்டியது அனைவரின் கடமையுமாகும். ஆனால் எமது நாட்டில் கல்வியிலே அரசியல் அதிகளவிலான ஆதிக்கத்தைச் செலுத்துகின்றது. நான் அதன் பாதிப்பை உணர்ந்தவன் என்ற ரீதியில் இந்த விடயத்தைச் சொல்லுகின்றேன்.
குறிப்பாக எமது அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறைப் பிரதேசத்திற்கு அண்டியுள்ள எல்லைக் கிராமத்தில் இருப்பவன். கடந்த கால யுத்தத்தில் அதிகளவிலான பாதிக்கப்பட்ட பிரதேசமாகவும் இருக்கின்றது. அந்த அடிப்படையிலேதான் கடந்த 03ம் திகதி சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் வழங்கப்பட்டது. இங்கு 71 பாடசாலைகள் இருக்கின்றன. அதில் 27 பாடசாலைகள் தமிழ் பாடசாலைகளாகவும், 44 முஸ்லீம் பாடசாலைகளாகவும் இருக்கின்றன. கிழக்கு மாகாணம் முறையாக அதற்கு ஒரு வலயக் கல்விப் பணிப்பாளரை நியமிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பொருத்தமான ஒருவரை நியமனம் செய்திருந்தது. ஆனால் அவர் தமிழராக இருந்த ஒரே காரணத்தினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் சென்று அவருக்கு எதிர்ப்புக் காட்டியதன் பேரில் அங்கு ஒரு மோசமான சூழல் நிலவியது.
உண்மையிலே இந்த நாட்டின் கல்வியைச் சீரழிப்பதற்கு அரசியல் பயன்படுத்தப்படுகின்றது என்பதற்கான உதாரணங்களில் ஒன்றாக இதனையும் எடுத்துக் கொள்ளலாம். இந்த அடிப்படையிலே தான் நாங்கள் கடந்த காலங்களில் கல்வி அமைச்சரையும், இராஜாங்க அமைச்சரையும் சந்தித்து எங்களுக்கு ஒரு தனியான கல்வி வலயம் வேண்டும் என்பதை கூறியிருந்தோம். ஏனெனில் இந்த நியமன விடயம் மாத்திரமல்ல கடந்த காலங்களில் வழங்கப்பட்ட வளங்கள் கூட எமது பாடசாலைகளைப் புறந்தள்ளியே வழங்கப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக இந்த நாட்டிலே அரசில் ரீதியான செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் குறிப்பிட்ட இடங்களிலே கல்வியைச் சீரழித்திருக்கின்றார்கள் என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்கள் கல்வியிலே படிப்படியான வளர்ச்சியினை அடைந்து கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் தடைகள் பல ஏற்படுகின்றன.
வளப்பகிர்வு தொடர்பில் இங்கு பேசப்பட்டது. உண்மையிலே சில பாடசாலைகளில் இன்று வரைக்கும் கணிதம். விஞ்ஞானம், ஆங்கிலம் ஆசிரியர்கள் நியமனம் இல்லாத நிலைமைகள் இருக்கின்றன. எமது பிள்ளைகள் நகர்ப்புறங்களுக்குச் சென்று தான் தங்கள் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் இருக்கின்றன. ஆனால் தற்போது படிப்படியான வளர்ச்சியின் மூலம் எமது பிரதேசங்களிலும் அந்தக் கல்வியைப் பெற்றுக் கொள்ளக் கூடிய மாற்றங்களும் சிறய அளிவில் ஏற்பட்டுள்ளன. இந்த நிலைமை இன்னும் அதிகரிக்கப்பட்டு எமது பிரதேசங்களுக்கு வளங்கள் சரியான முறையில் பகிரப்பட்டு கல்வி நிலை உயர்த்தப்பட வேண்டும் என்பதைக் கல்வி அமைச்சரிடம் நான் கேட்;டுக் கொள்கின்றேன்.
கல்வியில் மாத்திரமல்ல எமது பிரதேசங்கள் நிருவாக ரீதியிலும் முடக்கப்பட்டே வருகின்றது. கல்முனை வடக்கு பிரதேச மக்கள் இன்று 70 நாட்களாக சூழற்சி முறையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நாட்டிலே இருக்கின்ற பொது நிருவாகம் தங்களுக்கு அநீதியை விளைவிக்கின்றது என்ற காரணத்தினால் பாதிப்புறுகின்ற அப்பிரதேசத்து மக்கள் தாங்களாக முன்வந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றார்கள். ஆனால் பொது நிருவாகத்திற்குப் பொறுப்பான அமைச்சரோ, அமைச்சின் செயலாளரோ இந்த விடயத்தில் பாராமுகமாக இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
குறிப்பாக முஸ்லீம் அரசியல்வாதிகள் தமிழ் அரசியல்வாதிகள் கல்முனை வடக்கு விளக்கம் தெரியாமல் பேசிக்கொண்டிருக்கின்றார்கள் என்று இந்த சபையிலே தெரிவிக்கின்றார்கள். இது தொடர்பில் வேதனையுடன் ஒரு விடயத்தை நான் கூறி வைக்க விரும்புகின்றேன். கல்முனை 1சி என்கின்ற கிராம சேவையாளர் பிரிவினை ஊடறுத்துச் செல்லுகின்ற கழிவு நீர் வழிந்தோடுகின்ற பகுதியை தனிநபர் வழிமறித்து அந்த அரச காணியை மண்இட்டு நிரப்புகின்ற நிலைமை இருக்கின்றது. இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர், நில அளவைத் திணைக்களம் போன்றவற்றிற்குத் தெரிவித்து அவற்றினூடாக அறிக்கையும் பெறப்பட்டிருக்கின்றது.
மாகாணசபை இதனைக் களஆய்வு செய்து இது கழிவு நீர் வழிந்தோடும் இடம் எனவும் சட்டவிரோதமாக இங்கு தடுப்புச் சுவர் கட்டப்பட்டிருப்பதாகவும் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதே போன்று நில அளவைத் திணைக்களமும் இது அரசுக்குச் சொந்தமான காணி என்ற ஆவணங்களையும் தந்திருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல் அப்பிரதேச கிராம அபிவிருத்திச் சங்கம் நீதிமன்ற நடவடிக்கைகைகளையும் மேற்கொண்டிருக்கின்றது. ஆனால் இவ்வாறு இந்தப் பிரச்சனை சென்று கொண்டிருக்கின்ற நிலையிலும், கல்முனை மாநகரசபைக்குச் சொந்தமான வாகனங்களைப் பயன்படுத்தி தொடர்ந்தும் அந்த இடத்தை மண் இட்டு நிரப்பும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டே வருகின்றது.
இவ்வாறு தொடர்ச்சியாக கல்முனை வடக்குப் பிரதேச செயலக பிரிவிலே தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கின்ற செயற்பாடு நடந்து கொண்டிருக்கின்றது. இது தொடர்பில் நான் பொது நிருவாக அமைச்சரிடம் நேரடியாக களவிஜயமொன்றினை மேற்கொள்ளுமாறு கேட்டிருந்தேன் அதுவும் நடைபெறவில்லை. அம்பாறை மாவட்ட செயலாளரும் கூட இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றத்திலே இந்த விடயம் இருக்கின்றபோதும் கூட கல்முனை மாநகர ஆணையாளரால் மாநகரசபை வாகனங்களைப் பயன்படுத்தி இந்த மண் இட்டு நிரப்பும் வேலைதிட்டம் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இது மிகவும் மோசமான ஊழலாகும்.
எனவே இந்த உயரிய சபை இந்த விடயங்களில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.