ரொறன்ரோ மாநகரில் நடைபெற்ற 15வது உலகத் தமிழ் ஆசிரியர் மாநாட்டில் மாகாண அரசின் பிரதிநிதி லோகன் கணபதி புகழாரம்
(ரொறன்ரோவிலிருந்து ‘வீணைமைந்தன்’)
“புலம்பெயர் தேசங்களில் தமிழ் மொழியை தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் கற்பிப்பதன் ஊடாக தமிழுக்கு நாம் புத்துயிர் கொடுக்கின்றோம். தங்களின் சொந்த மொழியில் பேசுவதென்பது ஒவ்வொருவரின் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஊட்டச் சத்து போன்றது. தாய்மொழிதான் சிந்திக்கும் திறனின் திறவுகோலாக இருக்கிறது. எந்த மொழியைக் கற்றாலும், எத்தனை மொழிகளைக் கற்றாலும் ஒருவரின் சிந்தனை உருவெடுப்பது தாய்மொழியில்தான். மனித ஆற்றலை வளமையாக்கவும், ஒருவரது படைப்பாற்றலை அதிகப்படுத்தவும் தாய்மொழிக் கல்வியால் மட்டுமே முடியும். இது அறிவியல் பூர்வமாக நிரூபணமான உண்மை. இதனை உணர்ந்துதான் தாய்மொழியில் அறிவியல் கல்வியைக் கொடுப்பதன் மூலம் ஆக்கப்பூர்வ சிந்தனையைக் குழந்தைகள் மத்தியில் கொண்டுவர முடியும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறியுள்ளார். மேலும்ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு ஒரு கிராமம் தேவைப்படுகின்றது’ என்ற ஆபிரிக்க பழமொழியைப் போல. நாம் எமது தமிழை வளர்ப்பதற்கு இந்த உலகமே தேவைப்படுகின்றது”
இவ்வாறு கடந்த 1ம் திகதி சனிக்கிழமையன்று ரொறன்ரோ பல்கலைக் கழகத்தின் ஸ்காபுறோ வளாகத்தில் ஆரம்பமான 15வது உலகத் தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டின் தொடக்கத்தில் சிறப்புரையாற்றிய ஒன்றாரியோ மாகாண அரசின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட மார்க்கம்- தோர்ண்ஹில் தொகுதியின் உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் புகழாரம் சூட்டினார்.
சித்தம் அழகியான் சு. இராசரத்தினம் தலைமையில் அமைக்கப்பெற்ற நிர்வாகக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மூன்று நாள் மாநாடு கடந்த 3ம் திகதி திங்கட்கிழமை நிறைவுற்றது.
முதல் நாள் உரையாற்றிய மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்களின் வேண்டுகோளின்பேரில் மாகாண கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெச்சே அவர்களும் அங்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் லோகன் கணபதி அவர்கள் பின்வருமாறு தெரிவித்தார்.
“இந்த 15-ஆம் உலகத்தமிழாசிரியர் மகாநாட்டிடை ஒழுங்குபடுத்திய கனடிய தமிழ்ச்சங்கம், படிமுறைத்தமிழ்ஒன்றியம், அத்துடன் இணைந்து நடத்தும் உலகத்தமிழாசிரியர் பேரவை, Active Brain Centre, Department of Historical and Cultural Studies of University of Toronto, Scarborough கிளைக்கும் எனது மனமார்ந்த பாராட்டை தெரிவித்துக் கொள்கின்றேன். இங்கு உலகெங்கிலும் இருந்து வருகைதந்திருக்கும் ஆசிரியர்களையும் ,தமிழ் அறிஞர்களையும் , கனேடிய ஒண்டாரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினராக , அத்துடன் ஒன்றாரியோ minister of multiculturalism and PA to the minister of children community and social services சார்பில் நெஞ்சம் நிறைந்த அன்புடன் வரவேற்கின்றேன்.
இன்றைய நிகழ்வு கனடாவிற்கும் இங்கு வாழும் தமிழ் மக்களுக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். மாணவர்களின் மொழித்திறன், கலை, கலாசார சமூக விழுமியங்கள், 21ஆம் நூற்றாண்டுத் நூறாண்டின் வினைத்திறன்னுடன்கூடிய திறன்கள் என அவர்களை முழுமையாக வளர்க்கும் அரும்பணியில் ஈடுபடும் தமிழ் ஆசிரியர்கள் முன்னேறுவதற்கு இன்று கனடாவில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. வருங்காலத் தலைமுறையை தமிழ் மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்களாக உருவாக்குவதற்கான ஆர்வமும் உழைப்பும் உள்ளோருக்கு ஆதரவு வழங்க ஒண்டாரியோ மாகாண கல்வி அமைச்சின் உதவிகள் பல உள்ளன. இத்தகைய சிறப்பு நாளில், சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த துன்பத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். 1981 மே 31 அன்று, யாழ்ப்பாணம் பொதுநூலகம் எரிக்கப்பட்டது, இது 20-ம் நூற்றாண்டின் மோசமான இன அழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகும். இது தமிழர் பிரச்னையின் ஒரு முக்கியமான பகுதியைக் குறிக்கிறது. 97,000 க்கும் மேற்பட்ட அரிய நூல்களுடன், தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாக இருந்தது. உலக தமிழர்களின் பொக்கிஷமாக இருந்த அந்த நூலகம், தமிழின் பண்பாட்டு அடையாளமாக இருந்தது.
மேலும் இன்றைய மாநாட்டை நடத்தும் இராஜரத்தினம் சுப்பிரமணியம் அவர்களின் அர்பணிப்புக்கும் அவர் தமிழின்பால் கொண்டிருக்கும் பற்றுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மாணவர்களின் உலகை அறிந்து அவற்றில் தமிழைக் கொண்டுசேர்க்க விழையும் திருவாளர் இராஜரத்தினம் சுப்பிரமணியம் , மாணவர்களின் கற்றல் தேவைகளை நன்கு உணர்ந்து, அவர்கள் விரும்பும் வகையிலும் அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டும் வகையிலும் மாணவர்களது கற்றல் அனுபவங்களை வடிவமைக்கும் நோக்கில் பாடத்திட்டங்களை வடிவமைக்கிறார். அவற்றில் அர்த்தமுள்ள வகையில் மெய்நிகர் தொழில் நுட்பம் உள்ளிட்ட தகவல் தொடர்புத் தொழில் நுட்பங்களை கூடவே ஒருங்கிணைத்தும் வருகிறார். இதன் மூலம் எதிர்கால தலைமுறைகளுக்கான பலமான அடித்தளத்தை உருவாக்கியுள்ளார் என்று கூறலாம் எமது மொழிதான் எமது பலம். தமிழில் மாதா, பிதா, குரு தெய்வம் என்று இறைவனுக்கு முன்னதாக ஆசிரியரை குறிப்பிடுவதே அவர்கள் சமூகத்தில் வணங்கப்பட வேண்டியவர்கள் என்பதற்காக தான்.
எமது தேசத்தில் தமிழ் மொழியை பேசுவதே தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகின்றது. அந்த வேளையில் இப்படி ஓர் பிரமாண்டமான கருதரங்கமாக ஓர் இடத்தில் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் மொழி பற்றாளர்களை ஒன்றிணைத்து எப்படி எம் மொழியை பேணி வளர்க்கலாம் என்பதை உரையாடுவதற் கொண்டிருக்கிறோம் என்பதே எங்களுக்கு ஓர் வெற்றி.
தமிழ், உலகின் பழமையான மொழிகளில் ஒன்றாக, பெரும் வரலாற்றுமுக்கியத்துவத்துடன் நிறைந்தது. இந்த தலைமுறையினருக்கு தமிழை எளிய முறையில் நாம் கற்பித்தால்தான் தெடர்ந்து நிலைநிற்கும் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்
படியமுறை தமிழ் அதை மொழியியல், ஒலியியல் ,மற்றும் இலக்கியத்தின்அடிப்படையில்; படிப்படியான நுண் அணுகுமுறை மூலம் திறமையாக செயல்படுத்துகிறது.
இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், அவர்கள் முத்தமிழின் ஒன்றான இசைத்தமிழின் மூலம் எங்கள் பாரம்பரியத்தின் முக்கியகலாசார விழுமியங்களை எடுத்துசெல்வதற்கு பாராட்டுகள்.
ஒன்றாரியோ கல்வி அமைச்சின் நிதி அறிவிப்பு, கனடிய தமிழ் சங்கத்தின் படியமுறை தமிழ் அமைப்பின் வளர்ச்சியைத் தொடரும் திட்டங்களை ஆதரிக்கிறது. ஒன்றாரியோவில் சிறந்தமற்றும் எளிமையான முறையில் தமிழ் கல்வி மாணவர்களுக்கு கிட்ட வேண்டு என்ற நோக்கத்தோடு, நீண்ட காலமாக பொதுநலத்துடன் தமிழ் கல்வியை மேம்படுத்த செயல்பட்டு கொண்டு இருக்கும் படிமுறை தமிழ் கல்வித்திட்டத்திற்கு நிதித் தொகை வழங்கியுள்ளனர் எமது ஒன்றாரியோ கல்வி அமைச்சு” என்று விரிவான உரையை ஆற்றினார் லோகன் கணபதி அவர்கள். தொடர்ந்து அங்கு கலந்து சிறப்பித்த ஒன்றாரியோ கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெச்சே அவர்களும் சிறப்புரையாற்றி அனைவரையும் பாராட்டினார்.
”திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்” என்னும் மகாகவி பாரதியாரின் கனவு மெய்பட்டது போன்று இம்மாதம் 1ம், 2ம், 3ம் திகதிகளில் ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபுறோ வளாகத்தில் அமைந்துள்ள மாபெரும் அரங்கில் 15வது உலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு முதன்முதலாக கனடாவில் தமிழர்கள் அதிகளவில் வாழும் பெருநகரில் ஆரம்பமாகிய நிறைவுற்றது.
கனடாவில் தமிழ் மொழிக்கும். தமிழ் மொழி கற்பித்தலுக்கும் தொண்டாற்றிய பெருமக்களான அமரர்கள் நாராயணர் முருகையா. கவிநாயகர் கந்தவனம். ‘அதிபர்’ பொ. கனகசபாபதி. கவிஞர் சபா அருள்சுப்பிரமணியம் மற்றும் பண்டிதர் ம. செ. அலக்சாண்டர், தமிழறிஞர் சிவபாதசுந்தரம் ஆகிய பெருந்தகைகளின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த பிரதான அரங்கிலும் ஏனைய சிறிய அரங்கங்களிலும் உலகத் தமிழ் அறிஞர்கள் பலர் கலந்து கொண்டு ஆராய்ச்சி கட்டுரைகளையும் ஆக்கங்களையும் வாசித்தமை தமிழ் மொழியின் தரத்தை மேலும் உயர்த்திக் காட்டியது.
மேற்படி மாநாடு நடைபெற்ற மூன்று நாட்களும் காலை மதியம் மற்றும் மாலையென கலை நிகழ்ச்சிகளும் பார்வையாளர்ளை கவரும் வகையில் மேடையேற்றப்பட்டன. அங்கு மேடையேற்றப்பெற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ் மணம் வீசி நின்றது. எம் மொழியின் கம்பீரத்தைக் காட்டியது.
கனடாவில் தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கு உதவிய பெருந்தகைகளுக்கான வணக்க நிகழ்வு மங்கல ஒளித்தீபம் ஏற்றல். . தமிழ்த்தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம் இசைத்தல் என ஆரம்ப நிகழ்வுகள் அரங்கத்தை மேலும் மெருகூட்டி நின்றன. ஶ்ரீமதி நிரோதினி பரராஜசிங்கம் அவர்களது நிருத்திய கலாஞ்சலி நிறுவனத்தின் மாணவிகள் வழங்கிய வரவேற்பு நடனமான ‘வந்தனம்’ மிகவும் பாராட்டுக்குரிய கலை விருந்தாக அமைந்தது.
மேற்படி 15வது உலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு முதன்முதலாக கனடாவில் தமிழர்கள் அதிகளவில் வாழும் பெருநகரில் ஏற்பாடு செய்த பெருமைக்குரிய பொறுப்பாளர் ” சித்தம் அழகியான்’ திரு. சு. இராசரத்தினத்தின் தலைமையுரையை அடுத்து தமிழுக்கு இலக்கணம் வகுத்த அறிஞர் பெருமான் தொல்காப்பியர் அவர்களது உருவப்படம் திரை நீக்கம் செய்யப்பெற்று மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து அழைக்கப்பெற்ற சிறப்பு விருந்தினர்கள் தொடர்ச்சியாக பல பயனுள்ள கருத்துக்களை சபையோரோடு பகிர்ந்து கொண்டார்கள்.
இந்த அற்புதமான உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளிலிருந்து வந்து ஆசிரியப் பெருந்தகைகள் கலந்து கொண்ட மாநாடானது மிகவும் விசாலமானது. இதன் மூன்று நாள் நிகழ்ச்சிகளையும் மூன்று வாரங்களுக்கு தொடர்ச்சியாக எழுதலாம். அந்தளவிற்கு புலம்பெயர்ந்து வாழும் நமது பெற்றோர்களின் பிள்ளைச் செல்வங்கள் தமது தாய்மொழியான தமிழை இலகுவில் கற்று எமது மொழியில் தேர்ச்சி பெற்றவர்களாக வளர்ந்து வர வேண்டும் என்ற நோக்கோடு படிமுறைத் தமிழ் வகுப்புக்கள் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் அறிமுகம் செய்யப்பட்டதை கொண்டாடும் ஒரு விழாவாகவும் நாம் மூன்று நாள் கொண்டாட்டங்களையும் கருத்தரங்குகளையும் நாம் பார்க்கலாம்.
எனது 37 வருட கனடிய பெருவாழ்வில் இவ்வாறான ஒரு உலகளாவிய மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு உழைத்த சுப்பிரமணியம் இராசரத்தினம் அவர்களுக்கும் அவரோடு நட்புடனும் உரிமையோடும் உடனிணைந்து உழைத்த அன்பர்கள் மற்றும் பெருமக்கள் அனைவரையும் பாராட்டுவதற்கான வார்த்தைகளின்றி தடுமாறுகின்றேன். அந்தளவிற்குங அவர்களது ‘உழைப்பு’ மிகப்பெரியது.
இவ்விழாவின் முக்கிய அம்சமாக முதல் இரண்டு நாட்களும் மாலையில் அழகிய முறையில் ஏற்பாடு செய்யப்பெற்று நடைபெற்ற பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களது நெறியாழ்கையில் இடம்பெற்ற ‘தமிழோசை’ என்னும் சங்கத் தமிழ் இசை நிகழ்ச்சியில் நமது இளைய தலைமுறை மாணவ மணிகள் கலந்து கொண்டு தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தியமையும் எமது கனடிய தமிழர் சமூகத்தின் சாதனையென்றே நாம் கூறலாம்.
அதைக் கண்டு ரசித்த மக்கள் ஆரவாரம் செய்து வரவேற்றார்கள்.
இறுதியாக இயல்-இசை- நடன நிகழ்ச்சிகளும் தமிழ் மொழியைக் கற்பித்தல் தொடர்பான ஆய்வுரைகளும் விருந்தினர்களின் உரைகளும். மூன்று நாட்களும் மூன்று வேளை விருந்துபசாரமும் வழங்கி தமிழ் மக்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்துள்ள ‘ ‘சித்தம் அழகியான்’ சு இராசரத்தினம் அவர்கள் வாழிய பல்லாண்டு!