யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்…
தமிழ் பொது வேட்பாளர் வேண்டுமா வேண்டாமா என்ற விவாதம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.இந்த விவாதத்தை முதலில் தொடக்கி வைத்தது அரசியல் விமர்சகர்கள் சிலர்,அரசியல்வாதிகளான சுரேஷ் பிரேமச்சந்திரன், விக்னேஸ்வரன்,இவர்களோடு மக்கள் மனு என்று அழைக்கப்படும் ஒரு குடிமக்கள் சமூகம்.யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கும் காணொளி ஊடகம் ஒன்றின் அனுசரணையோடு இயங்கும் ஒரு குடிமக்கள் சமூகம் அது.பொது வேட்பாளருக்கு ஆதரவாக அந்த சிவில் சமூகம் வடக்கு கிழக்கில் இதுவரை மூன்று கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்தியிருக்கின்றது. இக்கருத்தரங்குகளில் பொது வேட்பாளரை ஆதரித்து எழுதிவரும் கருத்துருவாக்கிகள்,அரசியல் செயற்பாட்டாளர்கள்,அரசியல்வாதிகள், ஆர்வலர்கள் பங்குபற்றுவதுண்டு.
அந்தச் சிவில் சமூகம் தமிழ் மக்கள் பொதுச்சபைக்குள் ஒருங்கிணைந்து காணப்படும் சிவில் அமைப்புகளில் ஒன்றாகும்.தமிழ் மக்கள் பொதுச்சபையானது கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் மத்தியில் சந்திப்புகளை ஒழுங்குபடுத்தி வருகின்றது. இச்சந்திப்புகள் யாவும் சிறியவை. ஆனால் இச்சந்திப்புக்களில் ஈடுபடும் அமைப்புக்கள் யாவும் மாவட்ட மட்ட ஒன்றியங்கள் ஆகும்.கடற் தொழிலாளர் ஒன்றியம், கூட்டுறவாளர் ஒன்றியம், பார ஊர்திகள் சங்க ஒன்றியம், வர்த்தக சமூகங்கள் போன்றவற்றுடன் குடிமக்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் கலந்துரையாடி வருகிறார்கள். இந்த உரையாடல் அனைத்திலுமே பொது வேட்பாளருக்கு ஆதரவாகத்தான் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இச்சந்திப்புக்களில் யாரும் ஏன் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கேட்கவில்லை. அல்லது ஏன் ஒரு தென்னிலங்கை வேட்பாளருக்கு வாக்களிக்கக் கூடாது என்றும் கேட்கவில்லை. அல்லது ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தினால் அவர் இனவாதத்தை தூண்டி விடுவார் என்றும் சொல்லவில்லை.
இவ்வாறாக ஒருபுறம் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக சந்திப்புக்களும் கருத்தரங்குகளும் ஒழுங்கு செய்யப்பட்டு கொண்டிருந்த ஒரு பின்னணிக்குள், கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கில் ஒரு கருத்தரங்கு, மக்கள் மன்று என்ற பெயரில் ஒழுங்கு செய்யப்பட்டது. அதை ஒழுங்கு படுத்தியவர் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு நெருக்கமான சாவகச்சேரியை சேர்ந்த ஒரு சட்டத்தரணி ஆகும்.அவர் முன்பு மாகாண சபை உறுப்பினராகவும் இருந்தவர்.
இக்கருத்தரங்கில் 300க்கும் குறையாதவர்கள் கலந்து கொண்டார்கள். கருத்தரங்கில் உரை நிகழ்த்தியவர்களுள் சட்டத்தரணி சிறீகாந்தாவைத் தவிர அனைவரும் தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்த்துக் கருத்துக் கூறினார்கள். இதுபோன்ற கருத்தரங்குகள் எதிர்காலத்தில் வடக்கு கிழக்கில் நடாத்தப்படும் என்றும் தெரிய வருகிறது.
அதாவது தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் தமிழ் அரசியலில் அடுத்த கட்ட வளர்ச்சியை அடைய தொடங்கிவிட்டது.ஒரு பக்கம் தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பானது பொது வேட்பாளரை முன்னிறுத்தும் நோக்கத்தோடு உழைத்து வருகின்றது.அது கட்சிகளோடு இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கவிருக்கின்றது.இன்னொரு பக்கம் தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரன் அணியானது பொது வேட்பாளருக்கு எதிராக உழைத்து வருகின்றது.
தவிர தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஏற்கனவே களத்தில் இறங்கிவிட்டது.சில வாரங்களுக்கு முன் அவர்கள் யாழ் நகரப் பகுதியில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார்கள்.அத்துண்டுப் பிரசுரங்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு எதிரானவை.பகிஸ்கரிப்பை இம்முறை நடைமுறைப்படுத்துவது என்ற நோக்கம் கட்சியிடம் உண்டா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் பலஸ்கரிப்புக்காக உழைப்பது என்பது ஒரு தேர்தல் பிரச்சாரம்தான்.யாருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்வது.
இவ்வாறாக தமிழ்ப் பரப்பில் ஜனாதிபதித் தேர்தலையொட்டி மூன்று போக்குகள் துலக்கமாக மேல் எழத் தொடங்கி விட்டன.இதனால் தமிழ் வாக்குகள் மூன்றாக உடையக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
தென்னிலங்கையில் ஏற்கனவே வாக்குகள் மூன்றாக உடையும் வாய்ப்புகள் அதிகரித்துவிட்டன.இந்த மூன்று தென்னிலங்கை வேட்பாளர்களில் யாருக்காவது தமிழ் மக்கள் வாக்களிப்பார்களாக இருந்தால் அதிலும் தமிழ் வாக்குகள் சிதறும்.
எனவே இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம். சுமந்திரன் அணியானது தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்க்கின்றது. அதே சமயம் தென்னிலங்கையில் உள்ள யாரோ ஒரு வேட்பாளருக்கு தமிழ் வாக்குகளை சாய்த்து கொடுக்கப் போகிறது என்பதும் தெரிகிறது. இது ஒரு பகுதி தமிழ் வாக்குகளை உடைக்கும்.
தமிழரசு கட்சிக்குள் இப்பொழுது மொத்தம் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு.இந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுமந்திரன் அணி என்று கூற முடியாது. கட்சிக்குள் நடந்த தலைமைப் பதவிக்கான தேர்தலில் இந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் சிறிதரனின் அணிக்குள் நின்றார்கள். ஆனால் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தில் அவர்கள் சுமந்திரனுடன் இருப்பதாகத் தெரிகிறது.இதில் சிறீதரன் அணி மட்டுமே தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கின்றது.ஆனால் தேர்தல் நடக்குமாக இருந்தால் சிறீதரனின் அணி தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக களமிறங்கி வாக்குகளைத் திரட்டுமா? ஏனெனில் கட்சியின் மையக் குழுவானது பொது வேட்பாளருக்கு எதிராக காணப்படுகிறது.அதனால் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு பெரும்பாலும் யாராவது ஒரு தென்னிலங்கை வேட்பாளருக்கு ஆதரவாகத் திரும்பக்கூடிய வாய்ப்பே அதிகமாகத் தெரிகிறது.இது தமிழ் வாக்குகளில் ஒரு பகுதியை உடைக்கும்.
அடுத்ததாக,பொது வேட்பாளருக்கு ஆதரவான கட்சிகள் தமிழ்ப் பொதுச் சபையோடு இணைந்து ஒரு வேட்பாளரை முன்னிறுத்தினால், அதுவும் தமிழ் வாக்குகளை உடைக்கும்.பொது வேட்பாளரை ஆதரிக்கும் அணிக்குள் டெலோ அமைப்பிடம் மூன்று நாடாளுமன்ற ஆசனங்கள் உண்டு.புளட் அமைப்பிடம் ஒரு நாடாளுமன்ற ஆசனம் உண்டு.விக்னேஸ்வரனின் கட்சியிடம் ஒரு நாடாளுமன்ற ஆசனம் உண்டு.மொத்தம் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆறு கட்சிகள் பொது வேட்பாளரை ஆதரிக்கின்றன.இவை தவிர ஐங்கரநேசனின் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்,அனந்தி சசிதரனின் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் போன்றனவும் ஆதரிக்கின்றன.கூட்டிப் பார்த்தால் எட்டுக் கட்சிகள் பொது வேட்பாளருக்கு ஆதரவாக நிற்கின்றன. இக்கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபையும் இணைந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தும்போது அதுவும் தமிழ் வாக்குகளை உடைக்கும்.
மூன்றாவதாக,அனுர. அவருக்கு சிறு தொகுதி தமிழ் வாக்குகள் கிடைக்கலாம். அவரைப் போலவே ரணில் விக்கிரமசிங்கவுக்கும் படித்த ஆங்கிலம் பேசும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒரு சிறு தொகுதியினர் வாக்களிக்கக்கூடும்.எனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வாக்குகள் நான்கு திசைகளில் உடையும் வாய்ப்புகள் இப்போதைக்கு தெரிகின்றன.
ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடக்குமாக இருந்தால் அது இந்த ஆண்டின் இறுதிக்குள் நடத்தப்பட வேண்டும். அதில் தமிழ் வாக்குகள் நான்கு தரப்புகளை நோக்கிச் சிதறும். இது தமிழ் அரசியலை எங்கே கொண்டு போய்விடும் ?
ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டு நடந்தால் அநேகமாக அடுத்தடுத்த ஆண்டுகளில் மாகாண சபைகளுக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்தல்கள் நடக்கும். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் வென்ற கட்சியானது நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி தன்னுடைய பலத்தை மேலும் உறுதிப்படுத்த விளையும். எனவே ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின் ஒரு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கக்கூடிய வாய்ப்புகளே அதிகமாகத் தெரிகின்றன. அப்படி ஒரு தேர்தல் நடந்தால், ஜனாதிபதித் தேர்தலில் நான்குக்கு மேற்பட்ட தரப்புகளால் சிதறடிக்கப்பட்ட தமிழ் வாக்குகள் அடுத்துவரும் தேர்தலில் சிதறுமா அல்லது திரளுமா?
நிச்சயமாகத் திரளாது. சிதறும் வாய்ப்புக்களே அதிகம். எப்படியென்றால் ஜனாதிபதித் தேர்தலையொட்டி தமிழ் மக்களைத் திரட்டத் தவறினால் அடுத்த கட்டம் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டும் திடீரென்று திரட்டிவிட முடியாது. மக்களைத் திரட்டும் நடவடிக்கைகள் ஒரு தேர்தலில் மட்டும் செய்து முடிக்கக் கூடிய ஒரு செய்முறை அல்ல. அது ஒரு நீண்ட கால நடவடிக்கை. அதை அதன் சரியான வார்த்தைகளில் சொன்னால், தேசத்தைக் கட்டியெழுப்புவது. தமிழ்ப் பொது வேட்பாளரை முன்நிறுத்தும் தமிழ் மக்கள் பொதுச் சபையானது, அதைத்தான் கூறுகின்றது. தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கட்டி எழுப்ப வேண்டும் என்று.
இப்பொழுது தமிழ் வாக்குகள் சிதறிப் போய் உள்ளன. சிதறிக் கிடக்கும் தமிழ் வாக்குகளைத் திரட்டி,கூட்டிக்கட்டி ஒரு தேசமாக நிமிர்த்த வேண்டும் என்று தமிழ் மக்கள் பொதுச்சபை கேட்கின்றது.
தமிழ் மக்கள் இப்பொழுது வடக்காய் கிழக்காய்; கட்சிகளாய், கொள்கைகளாய், தியாகிகள் துரோகிகளாய், சாதியாய் சமயமாய் இன்னபிறவாய் பிளவுண்டு போய் இருக்கிறார்கள். நவீன யாழ்ப்பாணத்துக்கு அடித்தளமிட்ட திருச்சபை நீதிமன்றத்தில் நிற்கின்றது.உள்ள கட்சிகளில் பெரியது நீதிமன்றத்தின் நிற்கின்றது. பிரபல ஆலய அறங்காவலர் சபைகள் நீதிமன்றத்தில் நிற்கின்றன. பழைய மாணவர் சங்கக்களுக்குள்ளும் மோதல். ஊர் சங்கங்களுக்குள்ளும் மோதல். புலம் பெயர்ந்த பரப்பிலும் ஐக்கியம் இல்லை. மயிலத்தமடு, குருந்தூர் மலை,வெடுக்குநாறி மலை போன்ற போராட்டப் பரப்புகளை விலத்திப் பார்த்தால்,தமிழர்களே தமிழர்களோடு மோதிக் கொண்டிருக்கும் பரப்புகள்தான் அதிகம்.கட்சியும் நீதிமன்றத்தில்;திருச்சபையும் நீதிமன்றத்தில்.அறங்காவல் சபைகளும் நீதி மன்றத்தில்.
இப்படிப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் இருந்து படித்த பொறுப்பான பதவிகளை வகித்த ஆளுமை மிக்க தொழிற்பிறன் மிக்க ஒரு பகுதியினர் தொடர்ச்சியாகப் புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படியே போனால் ஒரு கட்டத்தில் ஆளில்லா ஊர்களில் விகாரைகளைக் கட்டுவது பிக்குகளுக்கும் படையினருக்கும் இலகுவாகிவிடும்.தமிழ் பிரதிநிதித்துவம் சுருங்கிக் கொண்டே போய்விடும்.
இவ்வாறு சிதறிக்கொண்டு போகும், சிறுத்துக் கொண்டு போகும் ஒரு மக்கள் கூட்டத்தை ஜனாதிபதித் தேர்தல் என்ற ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி சேர்த்துக் கட்டத்தவறினால் அடுத்த ஆண்டு என்ன நடக்கும்? இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு கட்சிக்குள் நடந்த தேர்லானது தமிழ் மக்கள் கேவலமான விதங்களில் சிதறிப்போய் இருக்கிறார்கள் என்பதனை நிரூபித்தது.இந்த ஆண்டின் இறுதியில் நடக்கக்கூடிய ஒரு ஜனாதிபதித் தேர்தல் எனப்படுவது, தமிழ் மக்கள் தோல்விகரமான விதங்களில் சிதறிப் போய் இருக்கிறார்கள் என்ற செய்தியை வெளிக் கொண்டு வருமாக இருந்தால் அதன் விளைவுகள் எப்படி அமையும்?