நடராசா லோகதயாளன்
இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. அவர்கள் பாதுகாப்பு படையினரால் விசாரணைகளுக்கு அழைக்கப்படுவது, அவர்களின் உபகரணங்கள் பறிக்கப்படுவது எல்லாம் வாடிக்கையாகியுள்ளது.
அவ்வகையில்13-06-2024 வியாழக்கிழமை சுமார் 12:30 மணியளவில் யாழ்ப்பாணம் அச்சுவேலியில் இருந்து செயல்படும் ஹிரு ஊடகத்தின் செய்தியாளரான தம்பித்துரை பிரதீபன் என்பவரின் இல்லத்தின் மீது இனம் தெரியாத குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
அதிகாலை வேளை தமிழ் செய்தியாளர் ஒருவரின் இல்லம் தாக்கப்பட்டுள்ளது அங்கு மக்களிடையே ஒரு அச்ச உணர்வையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த ஐந்து பேர்கொண்ட குழுவினரால் நடத்தப்பட்ட இத்தாக்குதலல் ஊடகவியலாளரின் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி என்பவற்றுடன் வீடும் எரிந்து சேதமடைந்துள்ளது. அதிகாலை நேரத்தில் வீட்டிற்கு வந்த காடையர்கள் வீட்டிற்குள் பெட்ரோல் குண்டை வீசியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தனது வீட்டின் ஒரு பகுதியாக சிறிய கடை ஒன்றையும் அவரது குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். அந்த கடையும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டனையடுத்து பொலிஸார் மேலதீக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.