(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)
(13-06-2024)
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை சோழமண்டல குளத்தின் கீழ் கடந்த 30 ஆண்டுகளாக காணியற்ற நூறு ஏழை விவசாயிகள் பயிர் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை காணிக்குரிய ஆவணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
எனவே எதிர்வரும் 16 ஆம் திகதி மன்னார் மாவட்டத்திற்கு வருகை தருவதற்கு முன்னதாக அவர்களுக்கு காணி வழங்கும் உத்தரவை வழங்கி விட்டு வருகை தருமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை(13) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,
கடந்த 30 ஆண்டுகளாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை சோழமண்டல குளத்தின் கீழ் காணியற்ற நூறு ஏழை விவசாயிகள் பயிர் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு இதுவரை காணிக்குரிய ஆவணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. நான்கு ஜனாதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடைபெறவில்லை. எதிர்வரும் 16 ஆம் திகதி ஜனாதிபதி மன்னார் மாவட்டத்திற்கு வருகை தர இருப்பதாக அறிகிறோம்.
எனவே மன்னார் மாவட்டத்திற்கு வருகை தருவதற்கு முன்னதாக இவர்களுக்கு காணி வழங்கும் உத்தரவை வழங்கி விட்டு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
காணி சீர்திருத்த அதிகார சபை லஞ்சம் வாங்குபவர்களுக்கு மட்டும் காணி வழங்கி வருகிறது. பல ஆண்டுகளாக பல வழிகளிலும் வேண்டுகை விடுத்தும் அதிகாரிகள் செவி சாய்ப்பதாக இல்லை. தங்களுக்கும் ஏற்கனவே மூன்று தடவை கடிதம் எழுதியிருந்தோம் .அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. இந்த நாட்டில் சமூக சம நீதி என்பது எந்த விடயத்திலும் நடைமுறைப்படுத்திய தாகத் தெரியவில்லை. இலஞ்சமும் ஊழலும் வியாபித்துள்ளது.
அதனால் தான் இந்த நாடு இவ்வளவு மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் மீள முடியாமல் சிக்கித் தவிக்கிறது. எனவே மன்னாருக்கு வருவதற்கு முன்னர் இக்காணி வழங்குவதற்குரிய அனுமதியை அதிகாரிகளுக்கு வழங்கி விட்டு வருமாறு கேட்டுக் கொள்வதோடு, இந்த காணி வழங்குவதில் எந்த விதமான சட்ட ரீதியான தடைகளும் இல்லை.
குறிப்பாக வனத்திணைக்களத்தினதோஇ வனவிலங்குகள் திணைக்களத்தினதோஇ தொல்பொருள் திணைக்களத்தினதோ இல்லை. அலுவலக நிர்வாக நடைமுறைகளுக்கு அமைவாக சகல ஆவணங்களும் பல வருடங்களுக்கு முன்பே காணி சீர்திருத்த அதிகார சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே இதற்கு தாங்கள் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகின்றோம்.என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.