இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா, மீசல் கிராமத்தில் சுமார் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை சுமார் 85 மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால் இப்பள்ளியில் போதிய வகுப்பறை வசதியின்றி மாணவர்கள் மரத்தடி நிழலில் அமர்ந்து கல்வி பயின்று வந்தனர். அரசுப்பள்ளியின் இந்நிலை குறித்து மீசல் கிராமத்தை சார்ந்தவரும், இப்பள்ளியில் படித்து மலேசியாவில் தொழிலதிபராக உள்ள டத்தோ முஹம்மது ரபிக்கு, கிராம மக்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 19.20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதில் தொழிலதிபர் டத்தோ முஹமம்து ரபி தனது பங்களிப்பாக 10 லட்சம் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று, திறப்பு விழா நிகழ்ச்சி 19 ஜூன் 2024 புதன்கிழமை அன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள மீசல் கிராமத்துக்கு வருகை தந்த, தொழிலதிபர் டத்தோ முஹம்மது ரபிக்கு கிராம மக்கள் சார்பில் ஆரத்தி எடுத்து, கும்ப மரியாதையுடன் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து புதிய வகுப்பறைக்கட்டங்களை அவர் திறந்து வைத்து ஏற்புரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தீபா நீதிராஜன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி வளர்ச்சி துறை அதிகாரிகள் முருகேஸ்வரி, இந்திரா காந்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கிளைமன், மீசல் கிராம வளர்ச்சி குழு தலைவர் செந்தூரான், ஆடிட்டர் அப்துல் ரகுமான், ஏர்வாடி மதரசத்துல் மக்தூமியா பெண்கள் அரபி கல்லூரி நிறுவனர் வருசைக் கனி ஆகியோர் முன்னிலை வைத்தனர். தலைமை ஆசிரியை அன்பரசி அனைவரையும் வரவேற்றார். அனைத்து சமுதாய தலைவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மாணவ மாணவிகள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இறுதியாக ஆசிரியர் ஜெயமுருகன் நன்றி கூறினார்
இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் குணரேகா, இன்ஜினியர் சுதாகர், முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பூபதி மணி, ஹேப்பி குழுமம் செய்யது இப்ராகிம் கனி, வர்த்தக காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் சேக் அப்துல்லா கிராம வளர்ச்சி குழு உறுப்பினர்கள், ஜமாத்தார்கள், கிராம பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதனை தொடர்ந்து கிராமத்தில் உள்ள அனைவருக்கும் மதிய உணவு, தொழிலதிபர் டத்தோ முகமம்து ரஃபி அவர்களால் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.