மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்
(21-06-2024)
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அரிச்சல் முனையில் நடைபெற்ற
யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் சஞ்சீவ் சீத் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ததுடன், இந்திய எல்லையில் உள்ள தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார்.
நாடு முழுவதும் 21-06-2024 அன்று வெள்ளிக்கிழமை சர்வதேச யோகா தினம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் யோகா பயிற்சி 21-06-2024 அன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நேற்று (20) சிறிய ரக ராணுவ விமான மூலம் ஐ.என்.எஸ் பருந்து கடற்படை தளத்திற்கு வந்த மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சஞ்சீவ் சீத் இந்திய கடற்படை மற்றும் கடலோர கடற்படை காவல் படை முகாம் களை ஆய்வு செய்த பின்னர் ராமேஸ்வரம் கடல் பகுதியை ஆய்வு செய்ததுடன், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் குறித்து பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து அன்று வெள்ளிக்கிழமை காலை ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் சாமி தரிசனம் செய்த மத்திய இணை அமைச்சர் பின்னர் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் நடைபெற்ற யோகா தினத்தில் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தார்.
அதனை தொடர்ந்து தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராஃப்ட் கப்பலில் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை வரை சென்று கடலுக்கு மத்தியில் அமைந்துள்ள மணல் திட்டில் இறங்கினார்.
பின்னர் சர்வதேச கடல் எல்லையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, கண்காணிப்புகள் குறித்தும் ஆய்வு செய்தவுடன் கண்காணிப்பு பணிகள் குறித்து பாதுகாப்பு அதிகாரியிடம் கேட்டறிந்தார்.
இதனையடுத்து இந்திய எல்லையில் வைக்கப்பட்டிருந்த இந்தியா என்ற பெயர் பலகைக்கு அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், எல்லையில் உள்ள தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் மீண்டும் ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பல் மூலம் தனுஷ்கோடி வந்து சாலை மார்க்கமாக ஐ என் எஸ் பருந்து கடற்படை தளத்திற்கு சென்றார்.
முன்னதாக முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவகத்திற்கு சென்று அவரது சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ஆய்வின் போது அவருடன் இந்திய கடலோர காவல்படை மண்டபம் முகாமின் நிலைய கமாண்டர் வினைக்குமார் மற்றும் கடற்படை தளத்தின் நிலையை கமாண்டர் கேப்டன் அஸ்வின் மேனன் ஆகியோரும் உடன் இருந்தனர்.