புலம்பெயர்ந்து வாழும் ஒரு அரசியல் விமர்சகர் என்னோடு கதைத்தார். “தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாகப் பேசும் பலரிடம் ஒரு போக்கு காணப்படுகின்றது. யாரோ ஒரு அரசியல்வாதி அல்லது ஏதோ ஒரு கட்சி அல்லது சில கட்சிகளுக்கு எதிராக அவர்கள் பேசுகிறார்கள். அல்லது அவர்களை நோக்கிக் கேட்கப்படும் கேள்விகளும் அவர்களை அவ்வாறு பேசத் தூண்டுபவைகளாக அமைகின்றன. இது சரியா? தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்பதனை ஒரு தனிப்பட்ட அரசியல்வாதிக்கு அல்லது கட்சிக்கு எதிரான ஒரு போக்காக வடிவமைப்பது சரியா?” என்று.
இல்லை.அப்படிச் சில அரசியல்வாதிகளுக்கு எதிராக அல்லது இரண்டு கட்சிகளுக்கு எதிராக அந்தப் பிரச்சாரத்தை வடிவமைக்கக் கூடாது. ஆனால் யதார்த்தத்தில் அது அப்படித்தான் காணப்படுகின்றது. இது தமிழ் அரசியலில் மட்டுமல்ல, ஆசிய ஆபிரிக்கச் சமூகங்களில் மட்டுமல்ல, தற்பொழுது மேற்கத்திய ஜனநாயகப் பரப்புகளிலும் காணப்படும் ஒரு போக்கு. பொதுவாக ஆசிய ஆபிரிக்க ஜனநாயகங்கள் தனிநபர்களை மையமாகக் கொண்டவை. தனிநபர் வழிபாடு, தனிநபர் துதி, தனிநபர் ஜனவசியம், தனிநபர் வெறுப்பு, தனிநபரை வில்லன் ஆக்குவது, அல்லது தியாகியாக்குவது போன்ற போக்குகள் தமிழரசியலில் வழமையானவை.குறிப்பாக சமூக வலைத்தளங்களின் பெருக்கத்தோடும் யுடியூப்களின் பெருக்கத்தோடும் அந்தப்போக்கு மேலும் அதிகமாகியிருக்கிறது.
சமூகவலைத்தளங்களில் ஒருபுறம் யாரும் கருத்து கூறலாம் என்ற சுதந்திரம் உண்டு. இன்னொருபுறம் கருத்துக் கூறும் ஒருவர் அதற்குரிய தகமையோடு இருக்க தேவையில்லை என்ற ஆபத்தும் உண்டு. தனக்கு விளங்காத ஒன்றைப் பற்றி தனக்கு தெரியாத ஒன்றைப் பற்றி கருத்து கூறும் சுதந்திரத்தை தகவல் புரட்சி கொடுத்திருக்கிறது. இது பல இடங்களில் வெறுப்புப் பேச்சுக்களை பரப்புவதற்கும் துறைசார் அறிவு இல்லாதவர்கள் தங்களுக்கு எல்லாம் தெரிந்ததுபோல கதைப்பதற்கும் மற்றவர்களை இகழ்வதற்கும் விமர்சிப்பதற்கும் காரணமாக அமைகின்றது.
இது அபிப்பிராயங்களின் காலம். அபிப்ராயங்கள் சரியாக இருக்க வேண்டும் என்று இல்லை. அதனால் உண்மை எனப்படுவது யானை பார்த்த குருடர்களின் கதையாகிவிட்டது. இது துறைசார் நிபுணர்களை சமூக வலைத்தளங்களுக்கு வெளியே தள்ளுகிறது என்று அவதானிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த மேதைகளில் ஒருவராகிய ஆதர் கோஸ்லர் உரைத்த தீர்க்கதரிசனத்தைப் போல, “மீடியோக்கர்கள்” அதாவது மந்தமானவர்களே, சராசரிகளே எல்லா இடங்களிலும் மேலெழுந்து வருகிறார்களா?
இந்த சராசரிகளின் குழு மனநிலை அல்லது கூட்டு மனோநிலையானது யாராவது ஒரு கதாநாயகரை அல்லது தியாகியைத் தேடுகின்றது. அதேயளவுக்கு யாரையாவது துரோகியாக்க அல்லது வில்லனாக்கப் பார்க்கின்றது. கடந்த நூற்றாண்டில் பனிப்போரில் இது உலகம் முழுவதும் பரவலாகியது. தமிழரசியலில் மட்டுமல்ல உலகம் முழுவதும் அது ஒரு நோயாகப் பரவிக் காணப்படுகின்றது.
பொதுப்புத்திக்கு தீனி போடும் ஊடக ஒழுக்கம் எனப்படுவது, பெருமளவுக்கு சமூக முரண்பாடுகளையும் இன முரண்பாடுகளையும் ஊக்குவிப்பதாக, குழு உணர்வுகளை பரப்புவதாகக் காணப்படுகின்றது. மியான்மரில், ரோஹியங்கா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைக் களத்தில் முகநூல் அப்படி ஒரு பாத்திரத்தை வகித்திருப்பதாக ஐநா குற்றம் சாட்டியிருக்கிறது. தனிமனித வழிபாட்டையும் ஒரு சமூகத்துக்கு எதிரான வெறுப்பையும் தமது அரசியல் ஒழுக்கமாக கொண்டிருக்கும் தரப்புகள் சமூக வலைத்தளங்களையும் இலத்திரனியல் வலை அமைப்புக்களையும் சிறப்பாகப் பயன்படுத்தி வாக்குத் திரட்டுவதைக் காண முடிகிறது.
மார்க்சிய மூலவர்கள் கூறுவார்கள் ” கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது சக்தியாக உருவெடுக்கும்” என்று. ஆனால் கருத்து மக்களைப் பற்றுவதை விடவும் உணர்ச்சிகரமான பேச்சுக்கள்தான் மக்களை எளிதாகப் பற்றிப் பிடிக்கின்றன. அதற்கு சமூக வலைத்தளச் சூழல் அதிகம் வாய்ப்பாகக் காணப்படுகின்றது என்பதனை ஐநாவின் சிறப்பு தூதுவர்களின் வெறுப்பு பேச்சு தொடர்பான விமர்சனங்களிலும் குறிப்புகளிலும் காண முடிகிறது.
இப்படிப்பட்ட ஒரு பின்னணிக்குள் பொது வேட்பாளருக்கு ஆதரவாகவும் எதிராகவும் என்ற துருவ நிலைப்பட்ட போக்கானது வில்லன்களையும் துரோகிகளையும் தேடுகிறது. அதன் வெளிப்பாடாகத்தான் பொது வேட்பாளரை ஆதரித்துப் பேசும் ஒரு பகுதியினர் (எல்லாரும் அல்ல) யாராவது ஒரு அரசியல்வாதியை அல்லது கட்சியை பகை நிலையில் வைத்துச் சித்தரிக்கின்ற ஒரு போக்கைக் காணலாம்.
அதற்கு ஒரு பலமான காரணம் கூறப்படுகிறது. தமிழ் அரசியலில் ஒரு அரசியல் பிரமுகர் அல்லது ஒரு கட்சி, பொது வேட்பாளர் என்ற நிலைப்பாட்டைத் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து வருகின்றது. ஒரு கட்சி கூறுகிறது பொது வேட்பாளரை முன்னிறுத்துகின்றவர்கள் இந்தியாவின் அடிவருடிகள் அல்லது இறுதித் தீர்வுக்காக இந்தியாவை எதிர்நோக்கி காத்திருப்பவர்கள் அல்லது யாரோ வெளிச் சக்திகளின் தூண்டுதலால் அதனைச் செய்பவர்கள் என்று. அதேபோலவே ஓர் அரசியல்வாதி அதனை கோமாளிக் கூத்து என்று கூறி வருகிறார். இவர்களுக்கு எதிராக பதில் கூற முற்படும் ஏனைய தரப்புகள் அவர்களுடைய பாணியிலேயே தாங்களும் விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள்.இதைத்தான் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட அரசியல் விமர்சிகர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற கருத்தை முன்வைத்து அதற்காக உழைத்தவர்கள் மத்தியில் தமிழரசியல் பரப்பில் அதிகமாக எழுதும் அரசியல் விமர்சகர்கள் காணப்படுகிறார்கள். அவர்கள் ஓர் அமைப்பாகத் திரண்டு அந்தக் காரியத்தை முன்னெடுத்தபொழுது தங்களுக்கு இடையே ஒரு உடன்படிக்கைக்கு வந்தார்கள். தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்காக கட்சிகளோடு இணைந்த ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டியிருக்கும். அதனால் எந்தக் கட்சிகளோடு இணைந்து ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டுமோ அதே கட்சிகளை கடுமையாக விமர்சித்தபின் அவற்றுடன் இணைய முடியாது. அதனால் கட்சிகள் மீதான விமர்சனங்களை ஒப்பீட்டளவில் குறைக்கவேண்டும் என்பதே அந்த உடன்பாடு. அதிலும் குறிப்பாக தனி நபர்களுக்கு எதிராகவோ அல்லது ஒரு தனிக் கட்சிக்கு எதிராகவோ விமர்சனங்களைத் தவிர்க்கவேண்டும் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால் அது நடைமுறையில் சாத்தியப்படவில்லை. ஏனென்றால் எதிர்த் தரப்பு விமர்சனங்களை தனிநபர் தாக்குதல்களாகவும் சூழ்ச்சி கோட்பாடுகள் ஆகவும் முன்வைத்தபொழுது,அதனை சமூக வலைத்தளங்களும் யூடியூப்களும் ஊக்குவித்தபொழுது அந்த வெறுப்புப் பொறிக்குள் ஒரு பகுதியினர் இயல்பாகவே விழும் ஆபத்து அதிகரிக்கின்றது.அதன் விளைவுதான் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட விமர்சனம்.
தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் தரப்புகள் அவ்வாறு ஒரு நபரை எதிரியாக அல்லது வில்லனாக காட்டும் பிரச்சார வடிவத்தை முன்வைக்க முடியாது. ஏனென்றால் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் தமிழ் தேசிய ஐக்கியத்தின் குறியீடு.அது தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதை நோக்கமாகக் கொண்டது. அப்படிப் பார்க்கும் பொழுது தேசத்துக்குள் எல்லா வகையான மக்களும் என் கட்சிகளும் கூட வரும். ஒரு தேசம் என்று பார்த்தால் அங்கே எல்லாமே தட்டையாக ஒற்றைப் பரிமாணமாக இருக்காது. அங்கு பல அடுக்குகள் இருக்கும். நுண் அடுக்குகள் இருக்கும். எல்லாவற்றினதும் கூட்டுச் சேர்க்கைதான் தேசம். எனவே ஒரு தேசிய அமைப்பு அல்லது ஒரு தேசியப் பொது நிலைப்பாடு என்பது இந்த எல்லா அடுக்குகளையும் பிரதிபலிப்பதுதான்.
அதிலும் குறிப்பாக தமிழ்ப்பரப்பில் அரசாங்கத்தோடு நிற்கும் அரசியல்வாதிகள் உண்டு. வடக்கு கிழக்கைப் பிரிக்க வேண்டும் என்று கேட்கும் அரசியல்வாதிகள் உண்டு. சாதியை சமயத்தை முதன்மைப்படுத்தும் அரசியல்வாதிகள் உண்டு. இந்த அரசியல்வாதிகள் அல்லது கட்சிகளின் பின் சொல்லும் மக்களும் தமிழ்மக்களே.அவர்களையும் அந்த கட்சிகளையும் பிரித்துப்பார்க்க வேண்டும். அவர்கள் தமிழ்த் தேசிய ஐக்கியத்தின்பால் வென்றெடுக்கப்பட வேண்டிய மக்கள். அவர்கள் பின்பற்றும் கட்சியின் கொள்கைகளுக்காக அவர்களையும் துரோகிகள் என்று முத்திரை குத்த முடியாது. குத்தவும் கூடாது. அவர்களும் எங்களுடைய மக்களே. அவர்களும் நமது தேசத்தின் ஒரு பகுதியே. அவர்களை எப்படி வென்றெடுப்பது? அவர்களை எப்படித் தேசத் திரட்சிக்குள் உள்ளீர்ப்பது? என்று சிந்திப்பது தான் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும் தரப்புகளின் நிகழ்ச்சி நிரல் ஆக இருக்க வேண்டும். மாறாக, தேசத் திரட்சியை உடைக்கும் விதத்தில் தேசத்தை தியாகி – துரோகி என்று பிரிப்பதோ கதாநாயகர்கள் – வில்லர்கள் என்று பிரிப்பதோ பொது வேட்பாளரை முன்னிறுத்தும் தரப்புகளுக்கு பொருத்தமானது அல்ல. குறிப்பாக ஒரு தனி அரசியல்வாதிக்கோ அல்லது ஒரு தனிக் கட்சிக்கோ எதிராக பொது வேட்பாளர் முன்னிறுத்தப்படவில்லை.அவர் ஒரு பொது இலட்சியத்துக்காக ஒரு பொது நிலைப்பாட்டுக்காக தான் நிறுத்தப்படுகிறார்.
ஆனால் நடைமுறை உணர்ச்சிகரமானதாக இருக்கிறது. பொது வேட்பாளரை எதிர்க்கும் கட்சிகளும் நபர்களும் அந்த கருத்துக்கு எதிராக முன்வைக்கும் விமர்சனங்கள் கீழ்த்தரமானவர்களாக சூழ்ச்சி கோட்பாடுகளாக தனி நபர் தாக்குதல்களாக அமையும் பொழுது, பொது வேட்பாளர் ஆதரிக்கும் தரப்புகள் பொறுமை இழக்கின்றன. அவ்வாறு பொறுமை இழந்ததன் விளைவை அண்மை வாரங்களாக பார்க்க முடிகிறது. நேர்காணல்களிலும் கட்டுரைகளிலும் அவ்வாறான விமர்சனங்களைக் காணமுடிகிறது.
பொதுத் தமிழ்ப் புத்தி அதை ஆதரிக்கின்றது. அதை ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றது. ஒரு சமூகத்தின் பொதுப் புத்தியானது பெரும்பாலும் கதாநாயகன் எதிர் வில்லன் என்ற மோதலை ரசிப்பது. சமூக வலைத்தளச் சூழல் அதற்கு வேண்டிய அளவு வாய்ப்புகளை கொடுக்கின்றது. செய்தித் தாகத்தோடு அலையும் ஊடகங்கள் அந்த மோதலை ஊக்குவிக்கின்றன; ரசிக்கின்றன. ஆனால் தேசத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் என்று சிந்திக்கும் எவரும் அந்த பொதுப் புத்திப் பொறிக்குள் விழுந்து விட முடியாது.தமிழரசியலை இனமான உணர்ச்சிச் சூழலில் இருந்து விடுவித்து அறிவியல் மையப்படுத்தினால்தான் தமிழ் வாக்காளர்களை விமர்சனப்பூர்வமாக சிந்திக்கும் வாக்காளர்களாக மாற்றலாம். விமர்சன பூர்வமாகச் சிந்திக்கும் வாக்காளர்களைப் பெருக்குவது என்பது தமிழரசியலை அகக்கூடியபட்சம் அறிவியல் மயப்படுத்துவதுதான். உணர்ச்சிகரமான வாதப்பிரதிவாதங்களோ விவாதம் இடைகளோ அல்லது சுழலும் சொற்போர்களோ ஒரு சமூகத்தின் அரசியலை அறிவியல் மயப்படுத்த உதவப்போவதில்லை.
ஒரு சமூகம் உணர்ச்சி வசப்படும் பேச்சாளர்களின் பின் போகிறது என்றால் அங்கே அரசியல் அறிவியல் மையப்படுத்தப்படவில்லை என்று பொருள்.எங்கே அரசியலை அறிவு பூர்வமாக அல்லது ஓர் அறிவியல் ஒழுக்கமாக அணுகும் தரப்புகளுக்கு மதிப்பில்லாமல் போகின்றதோ அங்கே உணர்ச்சி வசப்படுத்தும் மேடைப்பேச்சாளர்கள் பெரிய ஆட்கள் ஆகிவிடுகிறார்கள். இப்படிப்பட்டதோர் அரசியல் சூழல் தேசத்தைக் கட்டியெழுப்ப உதவாது. மாறாக,பொது வேட்ப்பாளரை முன்னிறுத்தி தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அறிவியல் பாரம்பரியத்தையும், ஊடகப் பாரம்பரியத்தையும், அரசியல் விவாதப் பாரம்பரியத்தையும் வளர்த்தெடுக்க வேண்டும்.