ஆர். என். லோகேந்திரலிங்கம்- கனடா
மகாகவி பாரதியார் தனது ‘உறுதி வேண்டும்’ என்ற கவிதையில் உற்சாகமாகப் பாடுகின்றார்,
மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்; என்று
இந்த கவிதை வரிகளை நாம் உச்சரிக்கின்ற போது. எம் மனக்கண்ணில் முன்பாக பல முகங்கள் தோன்றுவதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு. ஆனால் என் மனதில் உடன் உதிப்பவர்கள். ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையும் அதன் நிறுவனரும் தலைவருமான மரியாதைக்குரிய ஸ்டாலின் குணசேகரன் அவர்களுமே ஆகும்.
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை நிறுவப்பெற்று 25 ஆண்டுகள் கடந்துள்ளன. அதன் குடையின் கீழ் ஆரம்பிக்கப்பெற்ற ‘ஈரோடு புத்தகத் திருவிழா’ இந்த 2024 ல் தனது 20ஆம் ஆண்டைப் பூர்த்தி செய்கின்ற அதே வேளை. உலகெங்கும் பேசப்பெறும் ஒரு புத்தகக் கண்காட்சியாகவும். அது தற்போது உயர்ச்சியை தாண்டிச் சென்று கொண்டிருக்கின்றது.
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை வெறுமனே புத்தகத் திருவிழாவை மாத்திரமே நடத்தி வருகின்றதா? என்ற கேள்வியை யாராவது எழுப்பினால். அதற்கு எவருமே ‘ஆம்’ என்று பதில் சொல்ல மாட்டார்கள். ஆம்! ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையினர் வருடந்தோறும் தொடர்ச்சியாக பல விழாக்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றார்கள்.மகாகவி பாரதிக்கு விழா எடுக்கின்றார்கள். பாரத தேசத்தின் விடுதலைக்காய் போராடி உயிர்துறந்த வீரர்களின் நினைவெழுச்சிநிகழ்வுகளை தவறாமல் ஏற்பாடு செய்து மக்களின் மனங்களில் சுதந்திரத் தீ அணையாமலிருக்க வழி சமைக்கின்றார்கள். இலக்கிய விழாக்களை ஏற்பாடுசெய்கின்றார்கள். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்ற ‘ஈரோடு புத்தகத் திருவிழாவில்’ தமிழ் நாட்டிலிருந்து மாத்திரமல்ல. தமிழ் பேசப்பெறுகின்ற நாடுகளாம் இலங்கை. மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்தும் எழுத்தாளர்களையும் பேச்சாளர்களையும் அழைத்து மரியாதை செய்து அவர்களின் உரைகளை தமிழ்நாட்டு மக்கள் கேட்டுச் சுவைக்கவும் வாய்ப்பளிக்கின்றார்கள். அதற்கு மேலாக, அண்மைக்காலமாக தமிழ் மொழியின் ஆதிக்கம் அதிகரித்துக் காணப்படும் மேற்குலக நாடுகளில் வாழும் புலம் பெயர் தமிழர்களின் மத்தியிலிருந்தும் அறிஞர்களையும் தமிழ் ஆர்வலர்களையும் அழைத்து அவர்களையும் ஈரோடு பெருநகரில் மேடையேற்றி மாண்பு செய்கின்றனர்.
இந்தத் தகவல்கள் எல்லாம் கனடாவில் கடந்த முப்பத்து நான்கு ஆண்டுகளாக வாழ்ந்து வரும் எனக்கு எவ்வாறு தெரிந்திருக்கின்றன என்ற கேள்விகள் பலருக்கு எழலாம். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் நாட்டோடும் அங்கு வாழும் தமிழறிஞர்களோடும் திரைத்துறை பிரபலங்களோம் தொடர்புகளைக் கொண்டுள்ள அடியேனுக்கு. பத்து ஆண்டுகளுக்கு முன்பு சமூக அக்கறை மிகுந்த பாடல்களால் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களை இந்த மண்ணுக்கு ஈன்றளித்த பட்டுக்கோட்டை என்னும் இலக்கியச் செழுமை மிக்க இடத்தைச் சேர்ந்த அன்பர் சுந்தரப்பெருமாள், மரியாதைக்குரிய ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் பற்றியும் அன்னாரது தலைமையில் நீண்ட காலமாக நடத்தப்பெற்றுவரும் ‘ஈரோடு புத்தகத் திருவிழா’ பற்றியும் அறியத்தந்ததுடன் மாத்திரமின்றி ஸ்டாலின் குணசேகரன் அவர்களோடு தொடர்பையும் ஏற்படுத்தித் தந்தார்.
பொதுவாக எவரோடும் வெளிப்படையாகவும் அறிவுத் தேடலோடும் நட்புடனும் தொடர்பைப் பேணுவதில் மிகுந்த பக்குவம் கொண்ட ஸ்டாலின் குணசேகரன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு நான் முன்னர் குறிப்பிட்டது போன்று பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கிட்டியது. முதற்தடவையாக 2014ம் ஆண்டில் ஈரோட்டில் நடைபெற்ற பாரதிவிழா சிறப்பு விருந்தினராக என்னை அழைத்திருந்தார், மரியாதைக்குரிய ஸ்டாலின் குணசேகரன் அவர்கள். வருடத்திற்கு குறைந்தது மூன்று தடவையாவது தமிழகத்திற்கு சென்று அங்கு கலை இலக்கியத்துறை சார்ந்த பெருமக்களைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த நான். அந்தப் பயணத்தையும் சாதாரணமானதொன்றாகவே கருதி தமிழகம் நோக்கி புறப்படுகின்றேன்.
சென்னை விமான நிலையத்தில் என்னை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்த எமது சென்னைப் பிரதிநிதி நண்பர் பிரகாஸ் அங்கிருந்தே ஈரோடு நோக்கிப் பயணக்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார். 24 மணி நேர விமானப் பயணத்தைத் தொடர்ந்து சென்னையிலிருந்து பாரதி விழா நடைபெறும் ஈரோடு நகரம் நோக்கிய தரை வழிப் பயணம் தொடர்ந்தது.
உதயத்திற்கு சில மணிநேரம் கழிந்த ஒரு பொழுதில் நாம் ஈரோடு என்னும் கொங்குத் தலைநகரை அடைந்து அங்குள்ள ஒரு ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்படுகின்றோம். நாம் சற்று ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தபோது. சற்றும் எதிர்பாராத வகையில் எம்மைச் சந்திப்பதற்காக அங்கு வருகின்றார் மரியாதைக்குரிய ஸ்டாலின் குணசேகரன் அவர்கள். ஒரு பொலிஸ் அதிகாரி போன்ற தோற்றம். பேச்சிலும் அதே கம்பீரம், உச்சரிக்கும் சொற்களில் உள்ள தெளிவு . மனதில் தோன்றும் உற்சாகத்தைக் முகத்தில் காட்டும் புன்சிரிப்பு என அவரிடத்தில் நாம் அவதானித்த சில அம்சங்களை ஒரு சில நிமிடங்களில் எம்மால் உணர முடிந்தது.
“பயணம் எப்படி இருந்தது?” என்ற அன்பான விசாரிப்புடன் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் எம்மோடு உரையாடத் தொடங்குகின்றார்.
தான் அழைத்த ஒவ்வொரு விருந்தினர்களையும் எவ்வளவு வேலைச்சுமைகள் இருந்தாலும் அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளுக்குச் சென்று வரவேற்கும் பக்குவமும் பண்மும் கொண்டவர் தான் அவர் என்பதை அங்கு நின்ற அவரது உதவியாளர் ஒருவர் சிரித்த முகத்துடன் எம்மோடு பகிர்ந்து கொண்டார்
20214ம் ஆண்டு டிசம்பர் 11ம் திகதி மதியத்திற்கு சற்றுப் பின்னர் ‘பாரதி ஜோதி’ என்ற தீபத்தை ஏற்றி வைத்து பின்னர் அந்த தீபத்தை கைகளில் ஏந்திய வண்ணம் பாரதி விழா நடைபெறும் மண்டபம் வரை ஊர்வலமாக நடந்து சென்று அங்கு விழாவில் கலந்து கொள்வது என்று எமக்கு தனது திட்டத்தை விளக்குகின்றார் மரியாதைக்குரிய ஸ்டாலின் குணசேகரன் அவர்கள்.
ஊர்வலம் ஆரம்பமாகும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றோம்.. அங்கு வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, என் மனதில் ஒரு உற்சாகம் எழுகின்றது. பாரதியின் கவிதைகளை வாசித்தும் அதன் கருத்துச் செறிவுகளை மாத்திரமன்றி கவிதைச் சுவையையும் அனுபவித்து வந்த எமக்கு பாரதி பிறந்த தேசத்தில் அவருக்காக எடுக்கப்படும் விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பெறும் ஒரு ஈழத் தமிழனாக கலந்து கொள்ளக் கிடைத்த பாக்கியம் பற்றி எண்ணி பரவசத்தோடு ஊர்வலம் ஆரம்பமாகும் இடத்தை அடைகின்றோம்.
எனது முன்னைய ஒரு தமிழகப் பயணத்தின் போது நாம் நண்பர்கள் சகிதம் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சுப்பிரமணிய பாரதியார் வாழ்ந்த எட்டயபுரத்தை கடந்து சென்ற பொது ‘மஹாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம்’ என்ற அடையாளம் இடப்பட்ட ஒரு வீட்டைக் எனக்கு நண்பர்கள் காட்டிய போது வாகனத்தின் ஆசனத்திலிருந்து சற்று எழுந்து நின்று அந்த புனிதரின் அடையாளச் சின்னமாக விளங்கும் அந்த இடத்திற்கு நான் மரியாதை செலுத்திய அந்த நாள் எனக்கு அப்போது ஞாபகத்திற்கு வந்தது.
பாரதி ஜோதி ஏற்றப்பட்டு ஊர்வலம் ஆரம்பமாகும் இடத்தில் ஆர்வத்துடன் பலர் கூடியிருந்தனர். பெரியோர்கள் அன்னையர்கள். சிறுவர்கள் மற்றும் மாணவ மாணவிகள் என கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தேன். சிறிது நேரத்தில் சீருடை தரித்த இளைஞர்கள் யுவதிகள் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் அங்கு கைகளில் பாரத தேசத்தின் கொடியுடன் அணிவகுத்து வந்தார்கள். சற்று நேரத்தில் ‘பாரதி தீபத்தை’ ஏற்றும் நிகழ்வு நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தார் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள்.
எனக்குள் ஒரு வேட்கை பிறக்கின்றது. அந்த இடத்தில் எழுச்சிக் கவிஞன் பாரதியை நாம் கொண்டாடுவதற்காக நாம் கூடியிருந்தாலும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் தலைவராக விளங்கிய சுபாஸ் சந்திரபோஸ் அவர்களும் எமது ஈழ விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு தங்கள் உயிர்களை மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணித்த விடுதலைப் போராட்ட வீரர்களும் ஞாபகத்திற்கு வந்தார்கள். அந்தளவிற்கு நாம் நின்று கொண்டிருந்த இடம் விடுதலைப் போராட்டங்களை நினைவுகூரும் தலமாகத் தோன்றியது. சுதந்திர உணர்வு அங்கிருந்தவர்களை சுற்றிச் சுற்றி சூழ்ந்திருப்பது போன்ற ஒரு உத்வேகம் எழுந்தது.
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மேன்மையை மக்களுக்கு இன்றும் உணர்த்தும் ஒரு கருவியாகச் செயற்படுகின்றது என்பதையும் நான் அந்த இடத்தில் நின்று கொண்டிருப்பதை ஒரு கடமையாகவும் எண்ணிக்கொண்டேன்
சீருடை தரித்த இளையவர்கள் இரண்டு பக்கமும் அணிவகுத்து நிற்க. பாரதியாரின் சிறியதோர் உருவச் சிலைக்கு முன்பாக நின்று வீர முழக்கத்தின் ஒலி நாற்திசையும் கேட்க விழாவிற்கு யுஆர்சி. தேவராஜன் அவர்கள் தலைமை வகிக்க. மரியாதைக்குரிய ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் அறிமுக உரையாற்ற தொடர்ந்து நான் ‘பாரதி தீபத்தை’ ஏற்றி வைக்கின்றேன்.
தொடர்ந்து என்னை உரையாற்ற அழைக்கின்றார்கள். “ஒரு சுதந்திர வேட்கை கொண்ட போராட்ட வீரர்கள் சீருடைகளுடன் அணிவகுத்து நிற்கும் ஒரு போராட்டக்களத்தில் நிற்பது போன்ற உணர்வோடு நான் எனது உரையை ஆரம்பிக்கின்றேன்” என்ற முதல் வரியோடு எனது உரை தொடர்கின்றது. இந்திய சுதந்திரப் பொராட்டத்தின் வலிகள் இழப்புக்கள் அனைத்தையும் உணர்ந்து கொள்ளும் வகையில் அந்த இடத்திற்கு ஏற்ற ஒரு உரையை வழங்கிய நான் அதில் எமது மண்ணின் விடுதலைப் போராட்டத்திற்காக தங்களை அர்ப்பணித்த விடுதலைப் போராளிகளையும் எனக்கு ஞாபகப்படுத்தும் அளவிற்கு நான் நெகிழ்ந்து போனேன் என்று உரையை நிறைவு செய்தேன்.
தொடர்ந்து ஊர்வலம் ஆரம்பமாகின்றது. வீதியின் இருமருங்கிலும் மக்கள் கூடி நின்று பாரதிக்கு மரியாதை செய்கின்றார்கள். தொடர்ந்து பாரதி விழா நடைபெறும் மண்டபத்திற்கு நாம் சென்று அங்கு எழுச்சி மிகு வரவேற்பு பாரதிக்கும் என் போன்ற அழைக்கப்பெற்ற விருந்தினர்களுக்கும்.
பாரதி விழாவில் நானும் ஒரு உரையாளன். ஆனால் நான் அன்று ஒரு பார்வையாளனாகவும் ஏனைய உரையாளர்களிடமிருந்து பல விடங்களைக் கற்றுக் கொண்ட ஒரு பயனாளியாகவும் இருந்து, முழுமையான திருப்தியுடன் அன்றைய நாளைக் கழிக்கின்றேன். ஒரு பூரண திருப்தி என்னிடத்தில். தொடர்ந்து சென்னையை நோக்கி பயணிக்கின்றோம். திரும்பிச் செல்கின்றபோது. எனக்கருகில் அமர்ந்திருந்த நண்பர் பிரகாஸிடம் நாம் வெளிப்படையாகச் சொல்ல நினைத்தேன்.. இத்தனை ஆண்டுகள் பல அறிஞர்களையும் பெரியோர்களையும் எழுத்தாளர்களையும் கனடாவிற்கு அழைத்த நாம் ‘இவரை’ அழைக்கத் தவறிவிட்டோமே! என்ற ஆதங்கத்தோடு எனது மனது நினைத்துக் கொள்ள எனது நா அதை வெளிப்படுத்தியது.
கனடாவிற்கு திரும்பி வந்து 2015ம் ஆண்டு நடைபெறவுள்ள எமது கனடா உதயன் பத்திரிகையின் 1000வது இதழ் வெளியீட்டு விழாவிற்கு எமது மரியாதைக்குரிய ஸ்டாலின் குணசேகரன் அவர்களை அழைக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினோம். ஒரு பக்கம் 1000வது இதழுக்குரிய வேலைகள், மறுக்கம் கனடாவின் ரொறன்ரொ நகரத்தில் 20215 யூன் மாதம் 6ம் திகதியும். மொன்றியால் நகரத்தில் 6ம் திகதியும். தொடர்ந்து சென்னையி 27ம் திகதியும். என திட்டமிடப்பெற்று. பணிகள் குவிந்து கிடக்க, ஸ்டாலின் குணசேரன் அவர்களை விழாக்களின் சிறப்பு விருந்தினராக அழைப்பதற்கான வேலைகளை செய்யத் தொடங்கினோம்.
அந்த நாளும் வந்தது. சென்னையிலிருந்து 4ம் திகதி புறப்பட்டு 5ம்திகதி வெள்ளிக்கிழமையன்று கனடாவின் ரொறன்ரோ விமான நிலையத்தில் வந்திறங்கினார்கள் மரியாதைக்குரிய ஸடாலின் குணசேகரன் அவர்களும் அவரது பாரியார் அவர்களும். அவரது வருகை பற்றி அவ்வாரத்தின் உதயன் பத்திரிகையில் தலைப்பு செய்தி பிரசுரமாகியது. சென்னை விமான நிலையத்திலிருந்து அவருக்கு பொன்னாடை அணிவித்து ஸ்டாலின் தம்பதியை கனடாவிற்கு அனுப்பிவைக்கும் புகைப்படம் பிரசுரமாகின்றது. பல வாசகர்கள் எமது ‘உதயன்’ அலுவலகத்திற்கு அழைத்து விழாவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த பின்னர் ” இந்த விழாவிற்கு பொருத்தமான ஒருவரை அழைத்திருக்கின்றீர்கள்.நல்ல தொரு இடதுசாரிச் சிந்தனை கொண்ட ஒரு அன்பர்” என்று மரியாதைக்குரிய ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் பற்றி புகழந்துரைக்கும் பலர் தொடர்ந்து அழைத்தக் கொண்டே இருந்தார்கள்.
எமது உதயன் நண்பர்களின் மனமுவந்த வரவேற்பில் மனமகிழ்ந்து நின்ற ஸடாலின் குணசேகரன் தம்பதியைப் பார்த்து நாமும் மகிழந்தோம். தொடந்து இரண்டு நாள் விழாக்கள், தனிப்பட்ட பயணங்கள். கனடிய அரசியல்வாதிகளோடு சந்திப்பு என ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் கனடிய விஜயத்தால் எமது கனடா உதயன் குழுவின் நண்பர்கள் அனைவரும் திளைத்துப் போயிருந்தார்கள். அமெரிக்கா தமிழகம் என பல இடங்களிலிருந்து வந்த வாழ்த்துத் தெரிவிக்கும் அழைப்புக்களையும் ஸ்டாலின் துணைசேகரன் அவர்களும் அவரது துணைவியாரும் மகிழ்ச்சியோடு ஏற்று புன்னகையுடன் காணப்பெற்றார்கள்.
ரொறன்ரோவிலும் மொன்றியால் நகரத்திலும் எமது சிறப்பு விருந்தினர் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் ஆற்றிய உரைகளை செவிமடுத்த பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்த வண்ணம் இருந்தார்கள். குறிப்பாக, இடதுசாரிக் கருத்துக்களை கொண்ட பலர் அவரது உரைகளால் கவரப்படடார்கள். “தான் குறிப்பிட எண்ணும் ஒவ்வொரு விடயத்தையும் தகுந்த ஆதாரத்துடன் திகதிவாரியாக குறிப்பிட்டு உரையாற்றும் ஆற்றலை இவரிடத்தில் மாத்திரமே நாம் அவதானித்தோம் என்றார்கள்.
இவ்வாறாக தமிழகத்திலிருந்து வருடா வருடம் அழைக்கப்பெறும் பேச்சாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் வரிசையில் 2015ம் ஆண்டின் உதயன் பத்திரிகையின் 1000வது இதழ் வெளியீட்டு விழாக்களில் கலந்து கொண்டும் கனடா என்னும் ஒரு அற்புதமான தேசத்தின் மண்ணை மிதித்தும் மாண்புமிகு பெருமக்கள் பலரைச் சந்தித்தும். சிறியதும் பெரியதுமான விழாக்களில் பங்கெடுத்தும் உரையாற்றியும் கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர்களில் எழுத்தாளர்களையும் கல்வியாளர்களையும் வாசகர்களையும் சந்தித்து உரையாடிய திருப்தியோடும் ஸ்டாலின் குணசேரன் தம்பதி கனடாவின் அயல்நாடாம் அமெரிக்கா நோக்கிய பயணத்தை தொடரும் நாளும் வந்தது. நண்பர்கள் சூழ்ந்திருந்து எமது அவ்வருடத்தின் சிறப்பு விருந்தினர் தம்பதியை பிரிய மனமின்றி விமான நிலையம் வரை சென்று கைகளை இறுகப் பற்றி அணைத்தும். அவர்களுக்கு பிரியாவிடை கொடுத்து வழி அனுப்பி வைத்து விட்டு திரும்பி வந்தோம்.
அடுத்து நாம் ஏற்கெனவே திட்டமிட்ட வகையில், சில நாட்களில் (யூன் 27. 2015) சென்னையில் நடைபெறவுள்ள உதயன் பத்திரிகையின் 1000வது இதழ் வெளியீட்டு விழா தொடர்பான பணிகளைக் கவனிக்கத் தொடங்கினோம்
இவ்வாறாக ஒரு முழுமையான மனிதராகவும் மக்கள் தொண்டனாகவும் எழுச்சி மிக்க பேச்சாளனாகவும் இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின் போது களத்தில் நின்று போராடிய தியாகிகளை போற்றியும் புகழ்ந்தும் தன் வாழ் நாளில் பெரும் பகுதியைக் கழித்து வரும் ஒரு தமிழ் நாட்டுத் தமிழ்த தேசிய உணர்வுமிக்க ஒருவரின் நட்பு கிட்டிய நிறைவான மகிழ்ச்சியில் நான் மூழ்கியவனாகவே என்னை எனக்குத் தெரிகின்றது. தொடர்ச்சியாக மரியாதைக்குரிய ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகளை நேரடியாகவும் செய்திகள் மூலமாகவும் பார்த்தும் படித்தும் ஆச்சரியப்படுகின்றவர்களில் நானும் எனது குடும்பத்தினரும் அடங்கியுள்ளோம்.
இவ்வாறு தொடர்ந்து வரும் கலை இலக்கிய மற்றும் அரசியல் தொடர்புகளின் காரணமாக 2023ம் ஆண்டின் ஈரோடு புத்தகத்திருவிழாவிற்கும் என்னை ஒரு பேச்சாளராக அழைத்து மதிப்பளித்தார் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள். அந்த விழாவின் போதும் புத்தகக் கண்காட்சியின் போதும் நான் பார்த்தும் உணர்ந்தும் வியந்த விடயங்களோ எழுத்தில் வடிக்க முடியாதைவை.
ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் தொடர்பும் நட்பும் கிடைத்ததால் அவர் வழி நடத்திச் செல்லும் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை என்னும் மக்கள் பணி சார்ந்த அமைப்பின் கட்டமைப்பையும் அதன்தொடர்ச்சியான செயற்பாடுகளையும் வருடா வருடம் மானுடர்களை செழுமைப்படுத்தும் வகையில் பல்வேறு தலைப்புக்களில் அந்தந்த துறைகள் சார்ந்தவர்களை அழைத்து மேடையில் மதிப்பளித்து மக்கள் அவர்களின் கருத்துக்களை செவிமடுத்துச் செல்ல சந்தர்ப்பங்கள் வழங்குவதும் உலகத் தமிழர்களை இணைக்கும் முயற்சியில் வெற்றிகளை ஈட்டிவருவதுமாக தமது பணிகளைத் தொடர்ந்து வரும் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் பற்றியும் அவருக்கு பக்கத்துணைகளாகவும் தூண்களாகவும் விளங்கும் நண்பர்களையும் தொண்டர்களையும் சந்திக்கும் அரிய வாய்ப்புக்களை பெற்றவனாக மக்கள் சிந்தனைப் பேரவையின் வெள்ளிவிழாவிற்கு எனது வாழ்த்துக்களை இந்த கட்டுரையின் ஊடாக தெரிவிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன்.
இறுதியாக தற்காலத்தில் மாத்திரமல்ல சங்க காலத்திலும் அதற்குப் பின்னரான சுதந்திரப் போராட்டக் களத்திலும் முக்கிய நகரமாகத் திகழந்த ஈரோட்டின் பெருமைகளை என்றும் மரியாதையோடு உணர்ந்து கொண்டவன் என்றவகையிலும் என்னிடத்தில் ஒரு இரட்டிப்பு மகிழ்ச்சி தவழ்வதையும் காணமுடிகின்றது.