”இம்முறை நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வாக்குகள் 3 ஆக பிளவடையப்போகும் நிலையில் தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு,ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவு சஜித் பிரேமதாசாவுக்கான ஆதரவு ,அநுரகுமார திசநாயக்காவுக்கான ஆதரவு, ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்புக்கான ஆதரவு ,ஏனைய வேட்பாளர்களுக்கான ஆதரவு, வாக்களிப்பில் அக்கறையின்மையென 7 வழிகளில் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறப்போவதால் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார்களா என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது”
கே.பாலா
நாட்டில் விரைவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் அரசியல் பலத்தை காட்டுவதற்கான ”தமிழ் பொது வேட்பாளர்”என்ற கோஷம் ஒரு புறம் பலம் பெற்று வரும் நிலையில் மறுபுறம் இந்த வேட்பாளர் கோஷத்தினால் தமிழர்களிடம் தற்போதுள்ள அரசியல் பலம் மேலும் பலவீனமாகும் வகையிலான தமிழ்தேசியக்கட்சிகளின் ”விடாக்கண்டன் கொடாக்கண்டன் ” நிலைப்பாடுகளும் அதிகரித்து வருவதனால் ஜனாதிபதித் தேர்தலுக்கான வடக்கின் வாக்குகள் சிதறப்போகும் தேர்தல் கள நிலைவரம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல்களைப் பொறுத்த வரையில் பிரதான இரு வேட்பாளர்களுக்கிடையில் தான் பலமான போட்டி இடம்பெறுவதுடன் இவ்விருவருக்கும்தான் பெரும்பான்மையான வாக்குகளும் அளிக்கப்படுவதும் வழமை.உதாரணமாக இறுதியாக 2019 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் 15 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் இவர்களில் கோத்தபாய ராஜபக்சவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் தான் கடும் போட்டி ஏற்பட்டது .இவர்களில் கோத்தபாய ராஜபக்ச 69,24,255 வாக்குகளையும் சஜித் பிரேமதாச 55,64,239 வாக்குகளையும் பெற்ற நிலையில் 3 ஆம் இடத்தைப்பெற்ற அநுரகுமார திசாநாயக்க 4,18,553 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.
ஆனால் இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கவுள்ள தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,ஜே .வி.பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆகியோரிடையில் கடும் போட்டி ஏற்பட்டு சிங்கள வாக்குகள் மூவருக்கும் சிதறடிக்கப்படுவதனால் மூவரில் எவருமே அறுதிப்பெரும்பான்மை வாக்குகளை பெற முடியாத சூழல் இருக்கும் நிலையில்தான் சிங்களவர்களின் வாக்குகளை விடவும் தமிழர்களின் வாக்குகளே அதிகளவில் சிதறப்போகும் நிலைமை வடக்கு,கிழக்கு மாகாணங்களில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்றது.
இம்முறை நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வாக்குகள் 3 ஆக பிளவடையப்போகும் நிலையில் தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு,ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவு சஜித் பிரேமதாசாவுக்கான ஆதரவு ,அநுரகுமார திசநாயக்காவுக்கான ஆதரவு, ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்புக்கான ஆதரவு ,ஏனைய வேட்பாளர்களுக்கான ஆதரவு, வாக்களிப்பில் அக்கறையின்மையென 7 வழிகளில் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறப்போவதால் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார்களா என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது.
இறுதி வாக்காளர் கணக்கெடுப்பின்படி வடக்கு மாகாணம் 8,47,103 வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இதற்கமைய கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலில் 6,00,236 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ள நிலையில் இதில் கூட 14545 வாக்குகள் செல்லுபடியற்றதானதால் 5,85,691 வாக்குகள் மட்டுமே வடக்கு மாகாணத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தன. இதில் சஜித் பிரேமதாசவுக்கு 4,87,461 வாக்குகள்,கோத்தபாய ராஜபக்சவுக்கு 49.950 வாக்குகள்,தமிழ் வேட்பாளராக போட்டியிட்ட சிவாஜிலிங்கத்திற்கு 8.140 வாக்குகள், ஏனைய வேட்பாளர்களுக்கு 52.177 வாக்குகள் என வடக்கு மாகாண வாக்குகள் சிதறிப்போயிருந்தன.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழீழ விடுதலை இயக்கம்,தமிழ்மக்கள் விடுதலைக்கழகம் .இலங்கை தமிழரசுக்கட்சி உள்ளிட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் ஓரணியாக இருந்ததால் அதன் ஆதரவாளர்களின் வாக்குகள் அந்தக் கட்சி கை காட்டிய வேட்பாளருக்கே வழங்கப்பட்டன. தற்போது இந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிளவடைந்து அதில் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஓரணி சிங்கள ஜனாதிபதி வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் மற்றைய அணியும் ஏனைய இரு கட்சிகளும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலும் இருப்பதால் இவர்களின் ஆதரவாளர்களின் வாக்குகள் இரண்டாக பிளவடையப் போகின்றன.அது மட்டுமன்றி இந்த 3 கட்சிகளும் ஒன்றிணைந்த தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு தேசியத்தின் அடிப்படையில் கடந்த தேர்தலில் ஒற்றுமையாக வாக்களித்த வடக்கு,கிழக்கு தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் தற்போது அந்தக்கூட்டமைப்பு பிளவடைந்திருப்பதனால் ரணில், சஜித் , அநுர,தமிழ் பொது வேட்பாளர் ,ஏனைய வேட்பாளர்களென தாம் விரும்பியவாறு வாக்களிக்க எதிர்பார்க்கின்றனர்.
இதனை விட வடக்கை மட்டும் பிரதிநிதித்துவம் செய்யும் இரு எம்.பி.க்களைக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் அதேவேளை ஒரு எம்.பி.யைக் கொண்ட நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கின்றது. அதேவேளை வடக்கில் வன்னி மாவட்டத்தில் தெரிவான இரு முஸ்லிம் எம்.பி.க்களில் ஒருவர் ஜனாதிபதி ரணிலையும் இன்னொருவர் சஜித் பிரேமதாசவையும் ஆதரிக்கின்றனர்.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கஜன் இராமநாதன் இதுவரை யாருக்கு ஆதரவென அறிவிக்கவில்லை. அவருக்கும் வடக்கில் கிட்டத்தட்ட 50,000 வரையிலான வாக்குகள் உள்ளன.
எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஓரணி சிங்கள ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் தமிழீழ விடுதலை இயக்கம்,தமிழ் மக்கள் விடுதலைக்கழகம் ,தமிழ் மக்கள் தேசிய கூட்டணி,ஈ.பி.ஆர்.எல்.எப்.போன்ற கட்சிகள் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் ஈ.பி.டி.பி.யும் முஸ்லிம் எம்.பி.க்களில் ஒருவரும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் இன்னொரு முஸ்லிம் எம்.பி.யின் கட்சி சஜித் பிரேமதசாவை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் உள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் எம்.பி. யான அங்கஜன் இராமநாதன் எந்தப்பக்கமும் சாராதுள்ள . அதேவேளை ஜே .வி.பி. தலைவர் அநுரகுமார திசநாயக்காவுக்கான ஆதரவுதளமும் வடக்கில் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது .
கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் இலங்கை தமிழரசுக்கட்சியை சேர்ந்த எம்.பி.யான இரா.சாணக்கியன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் பொது வேட்பாளருக்கும் எதிரான கருத்துக்களையே வெளியிட்டு வருகின்றார்.அதே நேரம் தமிழரசுக்கட்சியின் கிழக்கு முக்கியஸ்தர்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். கலையரசன் எம்.பி நடு நிலை வகித்துவரும் நிலையில் கோவிந்தன் கருணாகரம் எம்.பி. தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கின்றார். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கின்றது .இவ்வாறாக கிழக்கு மாகாணத்திலும் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறத்தான் போகின்றன
இவ்வாறு வடக்கு, கிழக்குமாகாணங்களில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஒவ்வொரு தமிழ் கட்சிகளும் ஒவ்வொரு நிலைப்பாட்டில் இருப்பதாலும் இதனால் வாக்காளர்களான மக்களும் குழம்பிப் போயுள்ளதாலும் வாக்குகள் சிதறுவதுடன் வாக்களிப்பு வீதமும் குறைவடையவே அதிக வாய்ப்புக்கள் உள்ளன. எனவே இன்னும் காலம் பிந்திவிட வில்லை என்பதனால் தமிழ் தேசியக்கட்சிகள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்து தமிழ் மக்களை ஓரணியில் திரட்ட வேண்டும் . இல்லையேல் தமிழர்களின் அரசியல் இருந்த இடத்திலிருந்து இன்னமும் கீழ் நோக்கியே செல்லும். அதற்கான வழியை ஏற்படுத்தியவர்கள் என்ற வரலாற்றுப் பழியை தமிழ் தேசியக்கட்சிகளே சுமக்க வேண்டி ஏற்படும்.