திரை இயக்குனர், நடிகர், நடன இயக்குனர் என பன்முகத்தன்மையோடு இந்திய சினிமாவில் இயங்கி வரும் பிரபுதேவா தமிழ் சினிமாவில் நடிகராக தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி வரிசையாக அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இவர் கடைசியாக நடித்த பகீரா திரைப்படத்தில் பல தோற்றங்களில் மிரட்டியிருபார். தற்போது எஸ்.ஜே.சீனு இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் முழுக்க முழுக்க நடனத்தை மையமாக வைத்து தயாராகி வரும் புதிய படம் ‘ பேட்ட ராப்’. இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக வேதிகா நடித்துள்ளார். மேலும், பாலிவுட் நடிகை சன்னி லியோன் படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருக்கிறார். இப்படத்தில் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், மைம் கோபி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பேட்ட ராப் படத்தில் சுமார் 10 பாடல்கள் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் பேட்டராப் படத்தின் முன்னோட்டம் ஜூன் 21 வெளியாகும் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள இந்த முன்னோட்டத்தில் பாட்டு- அடி – ஆட்டம் – ரிப்பீட்டு என்ற வாசனகங்களுடன் பிரபுதேவாவின் நடனம் இடம்பெற்றுள்ளது. ‘பேட்ட ராப்’ தவிர்த்து பிரபுதேவா நடிப்பில் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜாலியா ஜிம்கானா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை மடோனா செபாஸ்டியன் இணைந்துள்ளார். பிகைன்ட்வுட்ஸ் தயாரிப்பில் பிரபுதேவா – ஏ.ஆர்.ரகுமான் 25 வருடங்களுக்கு பின் இணையும் ‘மூன் வாக்’ படமும் தயாராகி வருகிறது. மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘கோட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
![பிரபுதேவாவின் 'பேட்ட ராப்' முன்னோட்டம் வெளியீடு](https://uthayannews.ca/wp-content/uploads/2024/06/Prabhu-deva-peta-rap-teaser-released.jpg)