நடராசா லோகதயாளன்.
இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய சமயம் பிடிக்கப்பட்ட நான்கு இந்திய மீனவர்களின் ட்ரோளர் விசைப்படகுகள் கடலில் மூழ்கி விட்டதாக நீதிமன்றிற்கு கடற்படையினர் அறிக்கையிட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவும் இந்தியப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவதும் சில விடுவிப்பதும் எஞ்சியவை அரச உடமையாக்கப்பட்டு ஏலத்தில் விடுவதும் வழக்கமாகிவிட்டது. இருந்தபோதும் இரண்டு ஆண்டுகளிற்கு முன்பு ஏலம் விடப்பட்டபோதும் பல படகுகளை காணவில்லை என்ற சர்ச்சை ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது மன்னாரில் நிறுத்தி வைத்திருந்த நான்கு இந்திய இழுவைப் படகுகள் கடலில் மூழ்கி விட்டதாக கடற்படையினரால் நீதி மன்றத்திற்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய சமயம் மன்னார் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட படகுகள் மன்னார் கடற்படை முகாம்களில் உள்ள இறங்கு துறைகளிலேயே தரித்து வைக்கப்படுகின்றன.
இவ்வாறு தரித்து நின்ற இந்திய இழுவைப் படகுகளில் இருந்தே நான்கு படகுகள் கடலில் மூழ்கிவிட்டதாக தலைமன்னார் கடற்படையினரால் மன்னார் நீதிமன்றிற்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாழ்வுப்பாடு மற்றும் தலைமன்னார் பகுதிகளில் தரித்து நின்ற தலா இரு படகுகள் வீதம் நான்கு படகுகளே மூழ்கியதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் இவற்றில் ஓர் படகு மட்டும்
அரச உடமை ஆக்கப்பட்ட படகாகவும் எஞ்சிய மூன்று படகுகளும் தற்போதும்
வழக்கு நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் காணப்படுகின்றன.
இவ்வாறு வழக்கு இடம்பெறும் படகுகள் மூன்று கடலில் மூழ்கிவிட்டதானால் எவ்வாறு வழக்கை நடாத்துவது என மாவட்ட கடற்றொழில் நீரியல்த் திணைக்கள அதிகாரிகள் தலையை பிய்க்கின்றனர்.
இதன் காரணமாக ரோளர் படகுகள் கடலில் மூழ்கியிருப்பின் அவற்றின் ஒளப்படங்களை மன்றில் சமர்ப்பிக்குமாறு கடற்றொழில் நீரியல்த் திணைக்கள அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு கடற்றொழில் நீரியல்த் திணைக்கள அதிகாரிகளின் கோரிக்கைக்கு அடுத்த தவணை வழக்கின்போது கடற்படையினர் வழங்கும் ஆதாரங்களே பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில் இந்த விடயம் மீண்டும் இலங்கை, இந்திய மீனவர்களின் பேசு பொருளாக மாறும் எனக் கருதப்படுகின்றது.