(கனகராசா சரவணன்)
மக்கள் இல்லாத மண்ணை நேசிக்கவில்லை , மக்களுக்காகவே மண்ணை நேசிக்கின்றோம் எனும் தொனிப்பொருளில் சத்துருக்கொண்டான், காத்தான்குடி கொக்கட்டிச்சோலை, அருந்தலாவ, வெருகல் படுகொலை என கொல்லப்பட்டவர்களை நினைவு கூறும் வகையில் தோழர் பத்ம நாபா 34 வது தியாகிகள் தினம் ஜூன் 19 நினைவேந்தலும் பெண்கள் தலைமைதாங்கும் 200 குடும்பங்களை கௌரவிக்கும் நிகழ்வு 23-06-2026 அன்று ஞாயிற்றுக்கிழமை (23) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் இடம்பெற்றது.
பத்மநாபா மக்கள் முன்னணி கொக்கொட்டிச்சோலை அமைப்பின் ஏற்பாட்டில் பத்மநாபா மக்கள் முன்னணி தலைவர் தோழர் யோகி என்றழைக்கப்படும் முருகையா யோகராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் மற்றும் பெண் தலைமைதாங்கும் குடும்பங்களை கௌரவிக்கும் நிகழ்வில் அதிதிகளாக நன்கொடையாளர்களான கனடாவைச் சேர்ந்த கனகசபை சபேசன், இங்கிலாந்தைச் சேர்ந்த கனகசபை சிவசுந்தரம்,
மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு சபை தலைவரும் மாவட்ட பல.நோக்கு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான எம். உதயராஜ், மட்டக்களப்பு தபால்கந்தோர் தபால் அதிபர் த.இந்திரன், சமாதான நீதவானும் மட்டக்களப்பு ப.நோ.கூட்டுறவு சங்க முன்னாள் தலைவரும் எல்லை வீதி சிந்தாமணி பிள்ளையார் ஆலைய போசகருமான சிவலிங்கம் கனகசபை,
மட்டு அம்பாறை செயலாளர் தோழர் சலீம், சமூக செயற்பாட்டாளர் செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன், உட்படவர்கள் கலந்துகொண்டு (ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவர் பத்மநாபாவின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி சுடர் ஏற்றியதுடன் கொக்கட்டிச்சோலை, காத்தான்குடி, வெருகல், சத்திருக்கொண்டான், அரந்தலாவையில் படுகொலை செய்யப்பட்டவர்களையும் நினைவு கூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்
இதனை தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட கொக்கட்டிச்சேலை பிரதேசத்தைச் சேர்ந்த 200 பெண்தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு பணம் வழங்கி கௌரவித்தனர்.