யாழ்ப்பாணத்தில் தற்போது இளைஞர்கள் மத்தியில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு சட்டவிரேத செயற்பாடுகள் அதிகரித்து வருவதற்கு காரணம் இளைஞர்கள் மத்தியில் வேண்டுமென்றே தென்னிலங்கையினால் கட்டவிழ்த்து விடப்பட்டதாக பல்வேறு தரப்பினரும் குறிப்பிட்டு வருகின்றனர். அங்கு இராணுவத்தினரே வேண்டுமென்று இளைஞர் மத்தியில் கஞ்சா, அபின், கெரோயின், மற்றும் மது பழக்கங்களை தூண்டியதாகவும் மேலும் தென்னிலங்கை பெண்களை அழைத்து வந்து விடுதிகளில் சட்டவிரேத செயற்பாடுகளுக்கு உட்படுத்துகின்றமை என குறிப்பிடப்படுகின்றது. இதனை முற்று முழுதாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் தென்னிலங்கையில் காணப்படும் தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் தினத்தினம் தமது வாழ்க்கையினை சிறப்பாக கொண்டு செல்வதைக் காணலாம்.
பல்வேறு கஷ்டங்கள் ஏற்பட்ட போதிலும் பெற்றேரின் கண்டிப்புடன் காணப்படும் பெரும்பாலான பிள்ளைகள் இவ்வாறன நடத்தைகளை மேற்கொள்வதில்லை. இதற்கு காரணம் பெற்றோர் தமது பிள்ளைகளின் நடவடிக்கை தொடர்பாக அவதானமாக இருப்பதாகும். இங்கு அனைத்து பெற்றோரும் அவதானக் குறைவாக இருப்பதில்லை. ஒட்டுமொத்தமாக அனைவரையும் குறைசெல்ல முடியாது.
பொதுவாக வடமாகாணத்தில் காணப்படும் குடும்பங்களில் எவராவது ஒருவர் ஐரோப்பிய நாடு ஒன்றில் தொழில் புரிபவராகவோ அல்லது நிரந்தரமாக வசிப்பவராகவோ கணப்படுகின்றார். அவர் அந்த நாட்டில் பனி, மழை, குளிர், வெப்பம் போன்ற பல காரணிகளுக்கு மத்தியில் பெரும்பாடுபட்டு தாம் உழைக்கும் பணத்தில் ஒரு பகுதியை தமது உறவுகளுக்கென அனுப்புகின்றார்கள். அவ்வாறு அனுப்பப்படும் தொகையானது இலங்கையில் ரூபா மதிப்பில் கணிப்பிடும் போது அது பெரிய தொகையாக அமைகின்றது. யாழ்ப்பாணத்தில் கூலி வேலை செய்யும் ஒருவர் ஒரு நாளுக்கு 3000 ரூபா முதல் 4000 ரூபாவரை பெறுகின்றனார். ஆனால் வெளிநாட்டில் இருந்து வரும் தொகை பெரியதாக காணப்படும் போது அவர்கள் அத் தொகை பணத்தினை ஆடம்பரமாக செலவு செய்வதுடன் தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து அனாவசியமான முறையில் செலவிடுகின்றார்கள்.
அத்துடன் சில பெற்றோர் தமது பிள்ளைகளை அங்கு படிப்பிப்பதில் ஆர்வம் காட்டாது அவர்களையும் லண்டன், பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளுக்கு அனுப்பப் போகின்றோம் அவர்களுக்கு படிப்பு முக்கியம் இல்லை என்ற எண்ணத்தில் செயற்படுவதை காணக்கூடியதாக உள்ளது. இதற்கு காரணம் வெளிநாட்டில் அதிகமாக சம்பாதிக்க முடியும் இங்கு படித்து முடித்தால் கிடைக்கும் அரச உத்தியோகத்தின் மூலம் குறைவான பணமே கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பாகும். அத்துடன் பிள்ளைகளை அனுப்பிவிட்டால் தாமும் வெளிநாடு சென்று வரலாம் என்ற ஆசையும் தான்.
எனவே, இவர்களின் இவ்வாறான செயற்பாடுகளால் சுற்றித்திரியும் இளைஞர்கள் ஏதோ ஒரு வகையில் தறவான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு தூண்டப்படுகின்றார்கள். தாம் கஷ்டப்பட்டு உழைத்தால் அதன் வலி அவர்களுக்கு தெரியும் ஆனால் வெளிநாட்டு காசு என்பதால் அவர்களுக்கு அதன் வலி புரிவதில்லை. எனவே, பணத்தை அனுப்பும் புலம் பெயர்ந்த உறவுகள் அதன் வலியை அங்குள்ளவர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும். அதேபோல் இலங்கையில் வசிக்கும் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு கஷ்டம் ஒன்றால் என்ன என்பதையும் ஒழுக்கத்தையும் கல்வியின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறி எதிர்கால சந்ததியினர் தவறான திசையில் செல்வதை தடுப்பதற்கு தம்மாலான பங்களிப்பினை வழங்குவதன் மூலம் சிலந்த எதிர்கால சமூதாயத்தை உருவாக்கலாம்.