கஞ்சா மற்றும் இலங்கை ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)
(26/06/2024)
தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்துவதற்காக ராமேஸ்வரம் தங்கும் விடுதியில் பதுங்கி இருந்த இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் இலங்கை ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு போலீசார் தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் தனுஷ்கோடி கடல் வழியாக நாட்டுபா படகுகளில் இலங்கைக்கு கஞ்சா,ஐஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராமேஸ்வரத்தில் தங்கி தனுஷ்கோடி கடல் வழியாக போதைப் பொருள் கடத்தல் தொழில் செய்வதற்கு இலங்கை புத்தளம் மாவட்டம் கல்பிட்டி யைச் சேர்ந்த அந்தோணி பிரவீன் (35) என்பவர் கடந்த மே மாதம் 31ஆம் தேதி விமான மூலம் கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஜூன் ஒன்றாம் தேதி காலை சென்னை வந்து இறங்கி பின்னர் அங்கிருந்து ராமேஸ்வரம் வந்து தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.
பின்னர் இலங்கையை சேர்ந்த அந்தோணி பிரவீன் பெங்களூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள கஞ்சா வியாபாரிகள் பலரை சந்தித்து கஞ்சா கொள்முதல் செய்வதற்காக விசாரித்ததாக சொல்லப்படுகிறது.
பின்னர் ராமேஸ்வரம் புதுரோடு பகுதியைச் சேர்ந்த உமா செல்வம்(45) என்பவர் மூலம் பேக்கரும்பு பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி தியாகராஜன்(57) என்பவரை சந்தித்து அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்துவதற்கு முயற்சி செய்து வந்துள்ளார்.
மேலும் அந்தோணி பிரவீனுக்கு இலங்கை மன்னாரைச் சேர்ந்த சுதாகர் என்பவர் இரண்டு தவணையாக கஞ்சா கொள்முதல் செய்ய 2 லட்சம் பணம் அனுப்பியுள்ளார்.
அந்த பணத்தில் அந்தோணி பிரவீன் கஞ்சா தரம் குறித்து தெரிந்து கொள்வதற்காக முதல் கட்டமாக 2 கிலோ கஞ்சா பொட்டலத்தை ரூ.35 ஆயிரத்திற்கு தியாகராஜனிடம் வாங்கியுள்ளார்.
இதனிடையே இது குறித்து தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு ராமேஸ்வரம் சர்பு ஆய்வாளர் நல்லுசாமி மற்றும் காவலர் பால முரளி தலைமையிலான போலீசார் அந்தோணி பிரவீனை சுற்றி வளைத்து கைது செய்து அவர் தங்கி இருந்த அறையை சோதனை செய்த போது அவரிடம் இருந்து சுமார் ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் இலங்கை ரூபாய் 50,000 உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து அந்தோணி பிரவீனை தனுஷ்கோடி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில் தியாகராஜனிடம் கஞ்சா பொட்டலங்களை வாங்கி உமா செல்வம் என்பவர் மூலம் நாட்டுப்படகில் இன்னும் ஓரிரு நாட்களில்; சுமார் 400 கிலோ கஞ்சா பொட்டலங்கள் அடங்கிய மூட்டையை இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து தியாகராஜன், உமா செல்வம் இருவரையும் கைது செய்த போலீசார் இலங்கையை சேர்ந்த அந்தோணி பிரவீன் உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைக்கு பின்னர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி மூவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்து ராமேஸ்வரத்தில் தங்கி கஞ்சா கடத்தலில் ஈடுபட இருந்த இலங்கையைச் சேர்ந்த நபர் உட்பட மூவரை தனிப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்ததை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தனிப்பிரிவு போலீசாரை வெகுவாக பாராட்டியுள்ளார்.