ஏதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையில் எதிர்கால ஜனாதிபதியாக வருவதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பான ஆய்வு
இலங்கை ஜனநாயக தேசியக் குடியரசின் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இடம்பெறும் என எதிர்வு கூறப்படுகின்றது. இத் தேர்தலில் தற்போது பல்முனைப் போட்டி ஒன்று ஆரம்பித்துள்ளது. தேர்தல் தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாத நிலையில் அரசியல் அமைப்பின் பிரகாரம் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இடம்பெற வேண்டும் என கூறப்படுகின்றது.
கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்று அதன்பின் ஏற்பட்ட அரசியல் பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியிறேயதைத் தொடர்ந்து பிரதமராக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க அதன்பின் ஏற்பட்ட மக்கள் புரட்சியின் காரணமாக கோட்டாபய ராஜபக்ச வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்களிப்பின் மூலம் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.
அப் பதவிக்காலம் இவ்வருடம் செப்டெம்பரில் முடிவடைவதால் இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள் சூடுபிடித்துள்ளன. இதன்படி இம்முறை தேர்தலில் பேட்டியிடுவதற்கு பொதுவேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவும் அவருக்கு எதிராக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் போட்டியிட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளிவரவில்லை.
இதற்குக் காரணம் பொதுஜன பெரமுன (மொட்டு கட்சி) வின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடுவதா அல்லது ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை இணைத்துக் கொண்டு அனைவரின் ஆதரவுரன் பொது வேட்பாளராக போட்டியிடுவதா என்ற குழப்பமே இதற்குக் காரணமாகும்.
ஏனெனில் பொதுஜன பெரமுன கட்சியினர் ரணில் விக்கிரமசிங்கவை தமது கட்டுப்பாட்டில் அல்லது தமக்குச் சர்பானவராக செயற்பட வைப்பதற்கு எதிர்பார்க்கின்ற போதிலும் அது அவரின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கின்றனர். எதிர்கட்சி வேட்பாளர்கள் ரணில் விக்கிரமசிங்க கடந்த காலத்தைப் போல் எதிர்காலத்திலும் ராஜபக்சர்களை பாதுகாக்கவே போட்டியிடுகிறார் என்ற பிரச்சாரத்தின் மூலம் அவரின் வாக்கு வங்கியில் குறிப்பிட்ட வீதத்தினை குறைக்க முயற்சிக்கலாம் என்ற அச்சமும். அத்துடன் பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்தவர்களின் ஆதரவை இழக்க நேரிடும் என்ற அச்சமுமே இதற்கு காரணமாகும்.
மேலும் சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவினை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் பொதுஜன பெரமுனவின் தயவில் இருந்து செயற்பட முடியாது. அத்துடன் தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே தற்போது தமிழ் மக்கள் சார்பில் தனியொரு வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஏனெனில் பெரும்பாலான தமிழ்க் கட்சிகளும் பொது அமைப்புக்களும் அதனையே விரும்புகின்றன. அத்துடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சியானது தேர்தலை புறக்கணிக்குமாறு கூறி வருகின்றது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இரா. சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பிரதான கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஒருவரை ஆதரிக்க வேண்டும் என்றும் அதன் மூலமே தமிழ் மக்களின் உரிமைகளை பேரம்பேசி பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலைப்பாட்டிலும் உள்ளனர். இதன்மூலம் நாம் காலம் காலமாக ஏமாற்றப்படுவதாக எதிர்த்தரப்பினர் கூறி வருகின்றனர்.
முஸ்லிம் காட்சிகளின் நிலைப்பாடும் பெரும்பாண்மை கட்சிகளை ஆதரிப்பதாகவே அமைந்துள்ளது. எனினும் அரசியல் சதுரங்க விளையாட்டில் மதிநுட்பவாதியான ரணில் விக்கிரமசிங்க எதிர்காலத்தில் எவ்வாறு காய் நகர்த்துவார் என்பதை பெறுத்தே இத் தேர்தலின் கட்சி தாவல்களும், ஆதரிப்புக்களும் உறுதியாக தெரியவரும்.