– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழரான நவஜீவனால் நிர்வகிக்கப்படும் “புதிய வெளிச்சம்” என்ற செயற்பாட்டு அமைப்பானது, அண்மையில் யாழ்ப்பாணத்தில் மூன்று நாள் வதிவிடக் கருத்தரங்கு ஒன்றை ஒழுங்குபடுத்தியது.
தமிழகத்தின் முன்னணி நல்லெண்ணெய் தயாரிப்பு நிறுவனம் ஆகிய ” இதயம் நல்லெண்ணெய்” நிறுவனத்தின் பங்களிப்பு அக்கருத்தரங்கில் இருந்தது. வளவாளர்களாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பங்குபற்றினார்கள். உலகளாவிய ரோட்டரிக் கழகத்தின் தலைமைத்துவத்துக்கான விருதுகள் அதாவது ஆங்கிலத்தில், RYLA (rotary youth leadership awards)- “ரய்லா” என்று அழைக்கப்படும் ஒரு நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் மேற்படி கருத்தரங்கு நடத்தப்பட்டது. இலங்கையில் உள்ள இளம் தொழில் முனைவோரை வலுப்படுத்துவதே மேற்படி கருத்தரங்கில் நோக்கம்.
இக்கருத்தரங்கில் இதயம் நல்லெண்ணெய் நிறுவனத்தின் இயக்குனரும் பங்குபற்றினார். விருது வழங்கும் நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரோட்டரிக் கழக உறுப்பினருமாகிய சரவணபவன் உள்ளிட்ட உள்ளூர் தொழில் முனைவோர் கலந்து கொண்டார்கள்.யாழ்ப்பாணத்தின் முன்னணி வெதுபகங்களில் ஒன்று ஆகிய தினேஷ் பேக்கரியின் உரிமையாளர், யாழ்ப்பாணத்தில் உள்ள பெரிய திருமண மண்டபங்களின் உரிமையாளர் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்களும் அதில் பங்கு பற்றினார்கள்.
வதிவிடக் கருத்தரங்கும் விருது வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாணம் புங்கங்குளம் சந்தியில் அமைந்துள்ள ஜே.ஹோட்டலில் இடம் பெற்றன. வதிவிடக் கருத்தரங்கில் கலந்து கொண்ட 30க்கும் குறையாத தொழில் முனைவோர் விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றினார்கள். இளம் தொழில் முனைவோராகத் தாம் தமது தாய் நிலத்தில் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களுடைய பேச்சில் காணப்பட்டது.கருத்தரங்கு அவர்களைச் செதுக்கியிருக்கிறது என்பது அவர்களுடைய உரைகளில் தெரிந்தது.
இந்த நிகழ்வுக்கு இரண்டு முக்கியத்துவங்கள் உண்டு. முதலாவது,தொழில் முனைவோரை பலப்படுத்துவது. இரண்டாவது அக்கருத்தரங்கை யார் யார் ஒன்றிணைந்து ஒழுங்குபடுத்தினார்கள் என்பது.
முதலாவதாக,தொழில் முனைவோரை ஏன் பலப்படுத்த வேண்டும் என்று பார்ப்போம். தொழில் முனைவோரைக் கட்டியெழுப்புவது என்பது அதன் இறுதி அர்த்தத்தில் தேசத்தைக் கட்டி எழுப்புவதுதான். தன் சொந்த நிலத்தில் வேர் விட்டு நிமிர்ந்து வரும் தொழில் முனைவோர் தமது தொழிற்துறைகளை பலப்படுத்தும் பொழுது அது தாயகத்தின் பொருளாதாரத்தை பலப்படுத்துகின்றது. தாயகத்தை பொருளாதார ரீதியாக செழிப்பாக்கினால், அது அதன் விளைவாக, தாயகத்தின் அரசியலையும் செழிப்பாக்கும். தொழில் முனைவோரை அதிகமாகக் கொண்ட ஒரு சமூகத்தில் இருந்து புலப்பெயர்ச்சி ஒப்பீட்டளவில் குறைவடையும். நாட்டுக்குள்ளேயே தொழில் உண்டு; வளமான வாழ்வு உண்டு; கை நிறைய உழைக்கலாம்; சமூகத்தில் தனக்குரிய அங்கீகாரத்தோடும் மதிப்போடும் மன நிறைவோடும் வாழலாம்… என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டால், அது தாய் நிலத்தை பௌதீக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் கட்டி எழுப்பும்.
இலங்கைத் தீவைப் பொருத்தவரையிலும் இது புலப்பெயர்ச்சியின் காலம். 2009 ஆம் ஆண்டு எந்த நாட்டை யுத்தத்தின் மூலம் வென்றெடுத்ததாக சிங்கள தலைவர்கள் மார்தட்டிக் கொண்டார்களோ, அதே நாட்டை விட்டு மூழ்கும் கப்பலுக்குள் இருந்து தப்பிச்செல்லும் எலிகளை போல சிங்கள மக்களும் தமிழ் மக்களும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் மக்களை விட அதிக தொகையில் சிங்கள மக்கள் வெளியேறியிருப்பதாக புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. இதுதொடர்பாக உத்தியோகபூர்வமான இனரீதியான புள்ளிவிபரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் இரண்டு இனங்களையும் சேர்ந்த தொழில் முனைவோரும் மூளை உழைப்பாளிகளும் தலைமைத்துவ பண்புமிக்கவர்களும், தொழில்சார் திறன்களைக் கொண்டவர்களும் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் உரையாற்றும் பொழுது கிட்டத்தட்ட 20,000 பேர்வரை அண்மை காலங்களில் விசிட்டிங் விசாவில் கனடாவுக்கு சென்றிருப்பதாகத் தெரிவித்திருந்தார். இது உத்தியோகபூர்வமான தகவல் அல்லவென்று அவர் கூறுகிறார். அதேசமயம் லண்டனுக்கும் ஒரு பெரிய தொகை புலம்பெயர்ந்து விட்டது. இவைதவிர திருமணத்துக்காகச் செல்லும் இளம்பெண்கள் மற்றும் குடும்ப மேல் இணைவின் பொருட்டு செல்லும் குடும்பத் தலைவியர் என்று பார்த்தால் அதுவும் ஒரு தொகை. அவ்வளவும் அடுத்த சந்ததியை உற்பத்தி செய்யப்போகும் கருவளம் கொண்ட பெண்கள்.
அண்மையில் யாழ் போதனா வைத்திய சாலையில் விபத்து பிரிவில் விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரின் குருதியை பரிசோதித்த சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒரு தொழில்நுட்பவியலாளர் சொன்னார், தென்னிலங்கையில் பல ஆஸ்பத்திரிகளில் மருத்துவத்துறைசார் தொழில்நுட்பவியலாளர்களின் வெளியேற்றத்தால் சில ஆஸ்பத்திரிகளில் சில பிரிவுகள் வினைத்திறனோடு இயங்க முடியாத நிலைமை உருவாகி வருவதாக.
ஒரு சிங்களக் கட்டிடப்படக் கலைஞர், அண்மையில் தான் படித்து வெளியேறியவர், சொன்னார் ஒரு மோட்டார் சைக்கிளைக்கூட வாங்க முடியாத நாடு இது. என்னைப் போன்ற பலர் நாட்டை விட்டு வெளியேற துடிக்கிறார்கள் என்று. தென்னிலங்கையில் சில மருத்துவமனைகள் முழுமையாக இயங்க முடியாத அளவுக்கு தொழிற்சார் வல்லுனர்கள் வெளியேறியிருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.அதாவது தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் பெருவாரியாக நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
2009 ஆம் ஆண்டு யுத்த வெற்றியை கொண்டாடிய மக்களும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்; தோற்கடிக்கப்பட்ட மக்களும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஆயின் பெற்ற யுத்த வெற்றியின் பொருள் என்ன?
இவ்வாறு நாட்டை விட்டு தொழில் முனைவோரும் தொழிற்சார் திறன்களை பெற்றவர்களும் மூளை உழைப்பாளிகளும் வெளியேறிக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில், தமிழ்ப் பகுதியில் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு ஒழுங்குபடுத்தப்பட்ட மேற்படி கருத்தரங்குக்குப் பல்பரிமாண முக்கியத்துவம் உண்டு.
அக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்பியவர்கள் தொடர்ச்சியாக நேர்காணல்களின்மூலம் தெரிவு செய்யப்பட்டார்கள். அவர்களிடம் கருத்தரங்கில் பங்குபற்றுவதற்கான கட்டணம் வாங்கப்பட்டிருக்கிறது. அதாவது அதில் கலந்து கொண்டவர்களின் நிதிப் பங்களிப்போடுதான் அக்கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது. இது முதலாவது முக்கியத்துவம்.
இரண்டாவது முக்கியத்துவத்தைப் பார்க்கலாம்.அக்கருத்தரங்கை ஒழுங்குபடுத்தியது கனடாவில் உள்ள புதிய வெளிச்சம் அமைப்பும் இந்தியாவில் உள்ள இதயம் நல்லெண்ணெய் நிறுவனமும் ஆகும். வளவாளர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இங்கே ஒரு முக்கூட்டு முயற்சியைப் பார்க்கலாம்.தாயகம், டயஸ்போறா, தமிழகம் ஆகிய மூன்று முனைகள் இணைந்து முன்னெடுத்த ஒரு முயற்சி இது.
புதிய வெளிச்சம் அமைப்பானது இதற்கு முன்னரும் இதுபோன்ற வதிவிடக் கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்தியிருக்கின்றது. உளவியல் ஆற்றுப்படுத்துகை, ஆசிரியைகளுக்கு மற்றும் அதிபர்களுக்கான பயிற்சி பட்டறைகள், தலைமைத்துவ பண்ணையாளர் உள்ளக வதிவிட வசதியுடன் பயிற்சி, இயற்கை விவசாயம், இளையோர்களின் வாழ்க்கை தொடர்பான தரிசனத்தையும் நம்பிக்கைகளையும் கட்டியெழுப்பும் கருத்தரங்குகள் போன்ற பல செயல்திட்டங்களை புதிய வெளிச்சம் அமைப்பு கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக முன்னெடுத்து வருகின்றது.
இந்த செயல் திட்டங்கள் அனைத்தும் தமிழகம் தாயகம் டயஸ்போறா ஆகிய மூன்று பரப்புக்களையும் இணைக்கும் முக்கோண முயற்சிகள்தான். நிதிப்பலமிக்க தமிழ் டயஸ்போறாவும் இந்தியாவின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்று ஆகிய தமிழகமும் இணைந்து இதை ஒழுங்குபடுத்தியுள்ளன.
தமிழ் டயஸ்போறாவானது புலம்பெயர்ந்த நாடுகளில் தன்னை ஒரு கவர்ச்சி மிக்க; முதலீட்டுச் சக்தி மிக்க; துடிப்பான ஒரு டயஸ்போறாவாக வெளிப்படுத்தி வருகிறது. அதேசமயம் தாயகத்தைப் போலவே அங்கேயும் ஒற்றுமை இல்லை. எனினும் 2009க்குப் பின்னரான தமிழ் கூட்டு உளவியலை பலப்படுத்தியதில், தாயகத்தில் வாழும் மக்களை தமது சொந்தச் சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை போல மீண்டெழ வைத்ததில் தமிழ் புலம்பெயர்ந்த சமூகத்துக்கு பெரிய பங்கு உண்டு.
அதேசமயம்,மற்றொரு தமிழ் பரப்பாகிய,தமிழகமானது மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்தபடியாக இந்தியாவில் வேகமாக வளரும் பொருளாதாரமாக எழுச்சி பெற்று வருகிறது.
இவ்வாறு மூன்று வேறு புவியியல் பரப்புகளில் காணப்படும் மூன்று தமிழ்ச் சமூகங்களையும் ஒரு முக்கோண வடிவில் இணைத்து, முதலீட்டுத் திட்டங்கள் உட்பட அறிவுப்பரிமாற்றம்;வளப் பரிமாற்றம்;போன்றவை தொடர்பான திட்டங்களையும் வகுக்கும்பொழுது அது வினைத்திறன் மிக்கதாக அமைய முடியும்.
தமிழ் டயஸ்போறாவானது இலங்கையில் முதலீடு செய்யும் பொழுது நிச்சயமின்மைகளும் ஆபத்துக்களும் உண்டு என்ற பயம் இப்பொழுதும் உண்டு. ஆனால் அதே முதலீடு தமிழகத்தோடு கூட்டிச் சேர்ந்து இலங்கைக்குள் வரும்பொழுது, அதற்கு ஒப்பீட்டளவில் பாதுகாப்பு அதிகம். எனவே தாயகம்; டயஸ்போறா; தமிழகம் ஆகிய மூன்று சமூகப், பொருளாதார,அரசியல் பரப்புகளும் இணைந்து ஒரு முக்கோண பொருளாதாரத் திட்டவரைவு ஒன்றை ஆராய வேண்டும். அதனை முக்கியமாக தாயகத்தின் நோக்கு நிலையிலிருந்து, தமிழ் மக்கள் தமது தேசத்தைக் கட்டி எழுப்புவது என்ற நோக்கு நிலையிலிருந்து வரைய வேண்டும்.
இக்கட்டுரையில் முன்பு சொல்லப்பட்ட மூன்று நாள் வதிவிட கருத்தரங்கை அவ்வாறான தேசத்தை கட்டி எழுப்பும் ஒரு செய்முறையில் ஒரு பகுதியாகக் கருதலாம். தேசத்தைக் கட்டியெழுப்பும் செய்முறையில் தமிழ் டயஸ்போறா ஒரு சக நிர்மாணி தான். இந்த அடிப்படையில் டயஸ்போறாவிலிருந்து முதலீடுகளை தாயகத்துக்குக் கொண்டு வர வேண்டும். அதுபோலவே அறிவையும் ஆற்றலையும் கொண்டு வர வேண்டும். தாயகமும் டயஸ்போறாவும் தமிழகமும் இணைந்து தமிழ் மக்களின் தேசத்தைக் கட்டியெழுப்பலாம் என்ற நம்பிக்கையைப் பலப்படுத்த வேண்டும்.