ஒன்ராறியோ அமைச்சர் விஜய் தணிகாசலம்
“ஒன்ராறியோ முழுவதிலும் உள்ள வாகன ஓட்டுநர்களுக்கு குறைந்த செலவுடனான மேம்படுத்தப்பட்ட வசதிகளைச் செய்துகொடுப்பதற்கு எமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது” என ஒன்ராறியோ அமைச்சர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டில், பயணிகள் வாகனங்களுக்கான உரிமத் தகடுகளுக்கான ‘ஸ்டிக்கர்’ கட்டணத்தை நாம் நீக்கி உரிமையாளர்கள் வாகனமொன்றுக்கு ஆண்டுக்கு 120 டொலர்களை சேமிக்க உதவியிருந்தோம்.
தானாகவே வாகன உரிமத் தகடுகளைப் புதுப்பிக்கும் முறையை இப்போது அறிமுகப்படுத்தியிருப்பதன் மூலம், வட அமெரிக்காவிலேயே நாம் முன்னணி வகிப்பதுடன், ஆண்டொன்றுக்கு வாகன உரிமையாளர்களின் 900 மணித்தியால நேர விரயமும் தவிர்க்கப்படும். ஜூலை 1 முதல், முறையான வாகனக் காப்பீடு உள்ளதுடன், அபராதத் தொகை அல்லது நெடுஞ்சாலைக் கட்டணங்கள் நிலுவையில் இல்லாத பட்சத்தில், வாகன உரிமத்தகடு காலாவதியாவதற்கு 90 நாட்களுக்கு முன்னதாக அவை தாமாகவே புதுப்பிக்கப்படும். இப்புதுப்பித்தல் முறையில் சிக்கல்களை எதிர்நோக்குவோர், ‘சேவிஸ் ஒன்ராறியோ’வின் சேவையை அணுகலாம்.