என்.புவியரசன்.
இலங்கைக் கடற்பரப்பிற்குள் ஊடுருவிய சமயம் பிடிக்கப்பட்ட மூன்று இந்திய மீனவர்களின் ட்ரோலர் விசைப்படகுகள் கடலில் மூழ்கி விட்டன என நீதிமன்றிற்குக் கடற்படையினர் அறிக்கையிட்டுள்ளனர்.
இலங்கைக் கடற்பரப்பிற்குள் ஊடுருவும் இந்தியப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்படுவதும் சில விடுவிக்கப்படுவதும் எஞ்சியவை அரச உடமையாக்கப்பட்டு ஏலத்தில் விடப்படுவதும் வழக்கமாகிவிட்டது.
இருந்தபோதும் இரண்டு ஆண்டுகளிற்கு முன்பு படகுகள் ஏலத்திற்கு வந்த போது பல படகுகளைக் காணவில்லை என்ற பெரும் சர்ச்சையும் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது மன்னாரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் கடலில் மூழ்கி விட்டன எனக் கடற்படையினரால் மன்னார் நீதிமன்றத்திற்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.
இலங்கைக் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய சமயம் மன்னார் மாவட்டத்தில் பிடிக்கப்பட்ட படகுகள் மன்னார் கடற்படை முகாம்களில் உள்ள இறங்கு துறைகளிலேயே தரித்து வைக்கப்படுகின்றன.
இவ்வாறு தரித்து நின்ற இந்திய இழுவைப் படகுகளில் இருந்தே மூன்று படகுகள் கடலில் மூழ்கிவிட்டன எனத் தலைமன்னார் கடற்படையினரால் மன்னார் நீதிமன்றிற்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாழ்வுப்பாடு மற்றும் தலைமன்னார் பகுதிகளில் தரித்து நின்ற இந்த மூன்று படகுகளும் மூழ்கியதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தப் படகுகளிற்கு தற்போது வரையில்
வழக்கு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதனால் அந்த வழக்குகளை தொடரவதில நெருக்கடி நிலை காணப்படுகின்றது.
இவ்வாறு வழக்கு இடம்பெறும் படகுகள் மூன்று கடலில் மூழ்கிவிட்டதானால் எவ்வாறு வழக்கை நடாத்துவது என மாவட்ட கடற்றொழில் நீரியல்த் திணைக்கள அதிகாரிகள் தலையை பிய்க்கின்றனர்.
இங்கே கடலில் மூழ்கியதாக கடறபடையினரால்
IND/TN/10/mm/933
IND/TN/10/MM/966
IND/TN/10/MM/379 ஆகிய மூன்று இலக்கங்களும் குறிப்பிட்டே அறிக்கை வழங்கப்பட்டுள்ளன. இந்த இலக்கப்படகுகளில் 933 மற்றும் 379 ஆகிய இலக்க இரு படகுகள் 20.3.2024 அன்றும் 966 இலக்கப் படகு 5.11.2022 அன்றும் பிடிபட்ட படகுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ரோளர் படகுகள் கடலில் மூழ்கியிருப்பின் வழக்கு நடவடிக்கைகளைத் தொடர அவை மூழ்கிய நிலையில் உள்ள ஒளிப்படங்களை மன்றில் சமர்ப்பிக்குமாறு மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் விடுத்துள்ள கோரிக்கைக்கு எதிர்வரும் செபரெம்பர் மாதம் இடம்பெறவுள்ள அடுத்த தவணை வழக்கின்போது கடற்படையினர் வழங்கும் ஆதாரங்களே பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில் இந்த விடயம் மீண்டும் இலங்கை, இந்திய மீனவர்களின் பேசு பொருளாக மாறும் எனக் கருதப்படுகின்றது.
இதேநேரம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பிடிக்கப்படும் இந்திய மீனவர்களின் படகில் இலங்கை கடற்படையினர், திணைக்கள அதிகாரிகள், மீன்பிடி சங்கங்கள் வரையில் இலாபம் பார்ப்பதாகவும் சுட்டிக் காட்டப்படுகின்றது.
அதனை மயிலிட்டித் துறைமுகத்தில் அனைவரும் கண்கூடாகவும் பார்க்க முடிகின்றது. யாழ்ப்பாணக் கூடாநாட்டு கடற்பரப்பில் பிடிக்கப்படும் படகுகள் முதலில் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கே கொண்டு செல்லப்படும். அங்கே மீனவர்கள் இறக்கப்படுகின்றார்களோ இல்லையோ படகுகளில் இருந்து 3 அல்லது 4 பரல் டீசல்கள் இழுத்தெடுக்கப்படும். அத்தோடு படகில் இருக்கும் தரமான மீன் வகைகள் முதல் இறால் நண்டு வரையில் கடற்படையினர் எடுத்து விடுவர் அதன் பின்பே மீண்டும் படகு மயிலிட்டித் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது.
மயிலிட்டித்துறைமுகத்திற்கு படகு வந்த்தும் திணைக்கள அதகாரி மற்றும் உள்ளூர் மீனவ அமைப்பின் பிரதிநிதி மற்றும அவரது உதவியாளர்கள் ஓர் உள்ளூர் படகில் சென்று படகில் இருந்து பிடுங்க வேண்டியவற்றை பிடுங்குகின்றனர். இதில் மினகலம் முதல் நயிலோன் கயிறு முதல்கொண்டு நல்லநிலை மீன்கள் வரையில் அடங்குகின்றன.
இதனால் துறைமுகத்தின் உள்ள ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்படுவது கிடையாது.
இதன்பின்பு படகு வெறும் கோதாகவே துறைமுகங்களில் இருந்து பழைய இரும்பு வியாபாரிகளின் வருகைக்காக காத்திருக்கின்றன.
எமது நாட்டின் வளத்தை அழிக்கும் இந்திய மீனவர்களின் படகுகளை கைப்பற்றினால் அதன் வருமானம் நாட்டிற்கே சேர வேண்டும். ஆனால் இங்கே சிலரின் விசுவாசிகளிற்கே செல்வதாக மீனவர்கள் சிலர் ஆதங்கம் தெரிவிப்பதோடு இந்திய மீனவர்கள் செய்யும் செயலும் அதில் இருந்து பிடுங்குபவர்கள் செயலும் ஒரே வகையிலேயே காணப்படுவதனால் இவற்றை சுட்டிக் காட்டிவிடுவோம் என்றே மீனவ அமைப்புக்களில் இருந்து பலர் நீக்கப்படுகின்றனர் என மானவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் குறிப்பிட்டார்.
இதேநேரம் 2021 ஆம் ஆண்டு தமது பாவனைக்கென கடற்படையினரின் கோரிக்கையின் பெயரில் இந்திய மீனவர்களின் 6 படகுகள் ஊர்காவற்றுறை நீதிமன்றம் வழங்கியது.
இவை இவ்வாறு இருக்க 25 ஆம் திகதி அதிகாலை ஓர் இந்தியப் படகை 10 மீனவர்களுடன் பிடிக்கும்போது ஏற்பட்ட படகு விபத்தின்போது கடற்படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளமை புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பல விபத்துக்களின்போது இந்திய மீனவர்கள் பலர் உயிரிழந்தாலும் இம்முறை முதல்முறையாக கடற்படையைச் சேர்ந்தவர் உயிரிழந்திருப்பதோடு இது தொடர்பில் பொலிசார் மூலம் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கின் முடிவு பல திருப்பங்களை உண்டுபண்ணக்கூடும் எனவும் கருதப்படுகின்றது.