அவர்களை விடுதலை செய்ய கோரி கடலில் இறங்கி போராட்டம்:-
ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து ஸ்தம்பிதம்.
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 4 நாட்டு படகுகளையும் அதிலிருந்து 25 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைதுசெய்துள்ளமை யை கண்டித்து பாம்பன் மீனவர்கள் 01-07-2024 திங்கட்கிழமை காலை கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
மேலும், மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரி பாம்பன் சாலை பாலத்தில் மீனவர்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 50 க்கும் மேற்பட்ட நாட்டு பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
நாட்டுப் படகு மீனவர்கள் 01-07-2024 திங்கட்கிழமை அதிகாலை இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையினர் 4 நாட்டு படகுகளையும் அதிலிருந்து இருதயராஜ், கிரேசியான், லயோனஸ் உள்ளிட்ட 25 மீனவர்களையும் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.
இந்நிலையில் பாம்பன் பகுதி நாட்டுப்படகு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தமை யை கண்டித்து மீனவர்களின் உறவினர்கள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் சாலை பாலத்தின் முகப்பு பகுதியில் அமர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
மீனவர்களின் இந்த சாலை மறியலால் மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மீனவர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ள நிலையில் மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் மீனவர்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மீனவரின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.