“தனது அரசியல் அனுபவம், சட்டப்புலமை, ஆளுமை என்பவற்றைப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கக்கூடிய எதனையும் பெற்றுக் கொடுக்காது, தமிழ் மக்களை மீண்டும் எதிர்பார்ப்பில் ஆழ்த்திச்சென்ற தலைவர்”
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய இரா.சம்பந்தன் கடந்த 30.06.2024 அன்று இயற்கை எய்தினார். பொதுவாக ஒருவர் இயற்கை எய்திவிட்டால் அவர் தொடர்பில் இரங்கல் தெரிவிப்பது தமிழர் நம் பண்பாடு. எனினும் உண்மையைக் கடந்து நாம் புகழாரம் சூட்டுவது எற்புடையது அல்ல.
இவரின் மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள். பொதுவாக ஒரு இனத்தின் தலைவன் இறந்தால் மக்கள் மனங்களில் கவலை அல்லது துயரம் ஒன்றை ஏற்படுத்துவது வழக்கம் ஆனால் சம்பந்தன் ஐயா அவர்கள் நம் தமிழினத்தின் தலைவராக இருந்தபோதிலும் அவரின் இறப்புச் செய்தி எவரையும் (தென்னிலங்கை தேசத்தைத் தவிர) கவலைகொள்ள வைக்கவுமில்லை, அதற்கான எந்தச் சாத்தியப்பாடுகளும் காணப்படவில்லை. ஆனால் சம்பந்தன் ஐயா அவர்கள் இறந்தது தொடர்பாக எந்த சமூக ஊடகத்தினை பார்க்கின்ற போதிலும் அவர் தொடர்பான எதிர்மறையாக கருத்துக்களே அதிகம் பகிரப்படுகின்றன. இதனை உற்றுநோக்கும் போது தமிழ் மக்கள் எவ்வளவு தூரம் தமது எதிர்பார்ப்புக்களை அவர் மீது கொண்டிருந்தார்கள் என்பதற்கும் அதனால் ஏற்பட்ட வலியை வெளிக்காட்டுவதாகவே உள்ளது.
ஏனெனில் அனைத்து தரப்பிரனரையும் நம்பக்கூடிய வகையில் செயற்பட்டதுடன் மட்டுமன்றி பல்வேறு தரப்பினரும் இவரால் மட்டுமே இதைச் செய்ய முடியும் என்று நம்பும் அளவிற்கு கருத்துக்களை காலத்திற்கு காலம் முன்வைத்தும் வந்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் அவர்கள் ஒன்றிணைக்கக் கூடிய தமிழ்க் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி அதற்கு பொருத்தமான தலைவர் என்ற எண்ணப்பாட்டில் இவரை தலைவராக நியமித்தபோதிலும் இவர் தென்னிலங்கை தேசத்தின் விசுவாசியாகவே செயற்பட்டார். எனினும் காலப்போக்கில் இவரின் செயற்பாடுகளில் விரக்தியுற்ற பலர் அதிலிருந்து விலகிக் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமன்றி தானும் விடுதலைப்புலிகளின் கொலைப் பட்டியலில் இருந்ததாக பாராளுமன்றத்தில் தெரிவித்ததன் மூலம் அவர் தான் தமிழினத்தின் தலைவர் அல்ல தென்னிலங்கை தேசத்தின் ஆதரவில் அவர்களைக் காப்பாற்ற வந்த தூதுவன் என்பதை பறைசாற்றியுள்ளார்.
இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு ஒரு கருணாநிதி போல் எமது இலங்கை தேசத்தின் தமிழ் இனத்திற்கு ஒரு தலைவராக இரா.சம்பந்தன் அவர்கள் செயற்பட்டுள்ளதைக் காணலாம்.
இவர் அரசியல் தந்திரசாலி என்று குறிப்பிடுவதில் மிகையில்லை ஆனால் அவர் தான் சார்ந்தவர்கள் வாழ தன்னுடைய அரசியல் நலன்களைப் பயன்படுத்தியதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தன்னை விட எதிர்காலத்தில் சிறந்த தலைவர்கள் எவரும் உருவாகக் கூடாது என்பதுடன் தென்னிலங்கை தேசத்திற்கு தனது விசுவாசத்தை காட்டும் நோக்குடன் தனது அரசியல் வாரிசாக சுமந்திரனை விட்டுச் சென்றுள்ளார்.
அத்துடன்; இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் ஆற்றல் மிக்கவர், அரசியல் அனுபவசாலி, வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சிறந்த முறையில் கையாளக்கூடியவர். ஒரு அரசியல் கட்சியை வழிநடத்தக் கூடிய தலைமைத்தவப் பண்புகளைக் கொண்டவர்.
இவையனைத்தும் இருந்தும் அவர் தனது ஆற்றலை – அரசியல் அனுபத்தை தமிழ்மக்களுக்காக – தமிழ் இனத்துக்காக பயன்படுத்தவில்லை.
உண்மையில் ஓர் இனத்தில் அரசியல் தலைவன், அல்லது வழிகாட்டி இறந்து விட்டால், அந்த இன மக்கள் கண்ணீர்விட வேண்டும், அல்லது கவலை கொள்ள வேண்டும் அல்லது அனுதாபத்தை தெரிவிக்க வேண்டும், அந்த இனம் சார்ந்த தேசம் தனக்கு ஏற்பட்ட இழப்பை – சோகத்தை ஏதோவொரு வகையில் வெளிப்படுத்த வேண்டும், ஆனால் அவை எதுவும் இங்கு நடப்பாதாக தெரியவில்லை.
இரா.சம்பந்தன் காலமாகிவிடால் என்ற செய்தி ஒரு சாதாரண செய்தியாகக் கடந்து சென்றதைப் பார்த்தபோதுதான் இரா.சம்பந்தன் அரசியல் செயற்பாட்டால் தமிழ் மக்கள் எத்துணை தூரம் விரக்தியும் வெறுப்பும் கொண்டுள்ளனர் என்பது தெரிய வந்தது.
ஆம் தமிழ் மக்கள் இரா.சம்பந்தனை நம்பினர். அவர் தனது அரசியல் ஆளுமையைப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுத்தருவார் என எதிர்பார்த்தனர்;. எனினும் தமிழ் மக்கள் இரா.சம்பந்தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை அவர் இம்மியளவும் புரிந்துகொள்ளவில்லை. அன்றி அந்த நம்பிக்கைக்கு விசுவாசமாகச் செயற்படவும் இல்லை.
மாறாக இரா சம்பந்தன் தன்மை ஒரு கொழும்பு வாசியாகக் காட்டிக் கொண்டதுடன் தனக்குக் கிடைத்த கட்சித் தலைமை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அடிப்படையாகக் கொண்டு சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து சலுகைகளைப் பெற்று சுகபோகமாக வாழ்ந்தாரேயன்றி, எல்லாம் இழந்து கண்ணீரும் கம்பலையுமாக நிற்கின்ற தமிழ் மக்களை அவர் கிஞ்சித்தும் நினைக்கவில்லை.
சுருங்கக்கூறின் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யாத அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கந்தறுத்து ஈற்றில் இலங்கை தமிழரசுக்கட்சிக்குள் உள்ளக முரண்பாடுகளை ஏற்படத்தி தனக்குப் பின் தமிழனுக்கு அரசியல் தலைமையே இருக்கக் கூடாது என்பது போல எல்லாவற்றையும் நிர்மூலமாக்கி சிங்களப் பேரினவாதத்துக்குப் பேருதவி செய்துவிட்டு மறைந்து விட்டார்.
அத்துடன் தனது செல்வாக்கினைப் பயன்படுத்தி அவர் தென்னிலங்கை தேசத்திற்கு செய்த நன்றிக்கடன்களுக்கு கைமாறாக தென்னிலங்கை தேசம் அவரை எதிர்க்கட்சித் தலைவர் எனும் கதிரையில் அமர்த்தி அழகுபார்த்தது. அத்துடன் தனது இன மக்களின் துன்ப துயரங்களைக் கூடக் கண்டுகொள்ளாது ஒவ்வொரு முறையும் பொங்கலுக்கு தீர்வு பெற்றுத் தருகிறேன் தீபாவளிக்கு தீர்வு பெற்றுத் தருகிறோம் என்று ஒவ்வொரு முறையும் மக்களை ஏமாற்றி வந்துள்ளார். இவரின் வருகையினால் கதிர்காமர், நிலன் திருச்செல்வம் போன்றவர்கள் புனிதர்களாக எண்ணுமளவுக்கு சூழ்நிலை தோன்றியுள்ளது.
சிங்களத் தலைவர்கள் இரங்கல்
இரா. சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்துவதில் தமிழ்த் தரப்பினை காட்டிலும் சிங்கள அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் தமது இரங்கல்களையும் அவர் இலங்கை தேசத்திற்கு ஆற்றிய விசுவாசத்தையும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சொல்லி வருகின்றார்கள்,
அந்தவகையில், இரா.சம்பந்தனின் மறைவு தொடர்பில் பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தி இரங்கலைத் தெரிவித்த ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கையில்,
மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன், ஒருமுறை என்னுடன் உரையாற்றும் போது, “ரணில், நான் நாட்டைப் பிரிப்பேன் என்று நினைக்கிறீர்களா? நான் சிறுவனாக இருந்த போது, 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கை சுதந்திரம் பெறுவதைப் பார்க்கச் சென்றிருந்தேன்” என குறிப்பிட்டார். அதனைக் காணும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. நம்மில் பலர் அப்போது பிறக்கவே இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும், அவர் எப்போதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றினார் என குறிப்பிட்டார்.
மீண்டும் ஏமாற்றப்படாமை சென்றார்
மற்றுமொரு ஜனாதிபதியுடனும் கதைத்து ஏமாறுவதற்கு முன்பாகவே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காலமாகிவிட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு – கிழக்கு இணைந்த சம~;டி தீர்வு தரப்பட வேண்டும் என்பதில் இலங்கையின் எட்டு ஜனாதிபதிகளுடன் பேசி, நம்பி ஏமாந்த தலைவராகவே சம்பந்தன் பார்க்கப்படுகின்றார்.
அத்தோடு, சம்பந்தன், அரசியலுக்கு வருகின்ற போது தான் முன்னிலையாகி இருந்த வழக்குகளை முடித்து விட்டே வருவேன் எனக் கூறி மக்களின் உரிமைக்காகவே தனது தொடர் போராட்டத்தினை அகிம்சை வழியில் முன்னெடுத்தார் என்ற தோற்றப்பாடும் உண்டு.
கட்சிக்குள் வந்த எதிர்ப்பு
“கட்சியின் தலைமைப் பதவியில் இருக்கும் சம்பந்தன் விலக வேண்டும் எனவும், வயது முதிர்ச்சியின் காரணமாக தொடர்ச்சியாக சம்பந்தனுக்கு நாடாளுமன்றத்திற்கு வர முடியாது. இதனால் அவர் பதவி விலக வேண்டும்” என அவரால் வளர்த்தெடுக்கப்பட்ட – அறிமுகப்படுத்தப்பட்ட அவரின் விசுவாசியினாலேயே கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதை அடுத்து அவருக்கு பாரிய ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியதாக கட்சி உறுப்பினர்களால் முன்னர் குறிப்பிடப்பட்டது. அத்துடன் அவருடன் கதைத்து அவரை பதவி விலகச் செய்வதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
இதற்கு முன்னர் இருந்த தந்தை செல்வா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வயது முதிர்ந்தாலும் கூட கட்சிக்குள் மிகவும் மரியாதையாக நடத்தப்பட்டிருக்கின்றனர். இவ்வாறான நிலையில், நீண்ட அரசியல் வரலாற்றைக் கொண்ட சம்பந்தன் பதவி விலக வேண்டும் என்று கூறி அவரின் இறுதிக் காலத்தில் அரசியல் ரீதியாக பாரிய அழுத்தங்கள் முன்வைக்கப்பட்டன. எனினும் அதற்கு இணங்கவில்லை.
“இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரே~;ட தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமையின் பொருட்டு நடைமுறை அரசியலில் பங்களிப்புச் செய்யமுடியாதிருப்பதனால் அவர் தனது பதவியைத் துறக்க வேண்டும் என்று நாங்கள் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றோம். விசேடமாக நான் அந்த விடயத்தில் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றேன் என்றும் சுமந்திரன் தெரிவித்திருந்தார். அதற்கு சம்பந்தன் ஐயா அவர்கள் பின்வருமாறு கூறியிருந்தார்.
2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது திருகோணமலை மக்கள் தன்னை அந்த மாவட்டத்தின் முதலாம் நபராக தெரிவு செய்திருக்கின்றார்கள். அவர்கள் எனது உடல்நிலைமைகளை அறிந்தே தெரிவு செய்திருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டு தன்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்து பதவி விலகாது தனது பதவியைக் காத்துக் கொண்டார்.
எனினும், திருகோணமலை மக்களை பிரதிநிதித்துவம் செய்து செயற்படுத்தப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளன. பிறிதொரு பிரதிநிதியை நியமித்தாலும் மக்கள் அவரைத் தெரிவு செய்திருப்பன் என்பது சம்பந்தனுக்கு தெரியாதது ஒன்றும் அல்ல.
இதேவேளை, சம்பந்தனின் அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கருதிய பலர் இன்று சம்பந்தனின் மரண வீட்டில் தங்களை மிகச் சிறந்த ஆளுமையாளர்களாகக் காட்டிக் கொள்ள முயல்கின்றனர், தங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்ள சம்பந்தனின் மரண வீட்டையும் தங்களது சாதகமாக பயன்படுத்தி பலர் அரசியல் செய்ய முற்படுவதையும் காணலாம்.
என்ன செய்வது தமிழ் மக்கள் நம்பிக்கை கெட்ட சோகத்தோடு, கருடபுராணம் கூறும் நியமம் நடந்தாகும் என்ற நம்பிக்கையோடு அமைதி கொள்கின்றனர்.
சத்தியன் – கனடா