நம் தாய் மண்ணில் ………
பாமர மக்களின் வாழ்க்கைக்கு வறுமை தடையாக!…
கற்றவர்கள் கடமைகளை மீறுகின்றார்கள்!….
அரச அதிகாரிகள் அதிகார துஸ்பிரயோகம் செய்கின்றார்கள்!;
கதிரோட்டம் 05-07-2024
இவ்வாரத்தில் உலகெங்கிலும் இருந்து எமக்கு கிடைத்துள்ள பல செய்திகள் மற்றும் தகவல்களைப் படிக்கும் உள்ளம் பூரிப்படைவதிலும் பார்க்க மனது தளர்கின்றது. பதட்டம் அதிகரிக்கின்றது.
கனடாவில் ரொறன்ரோ பெரும்பாகத்தில் கனடியத் தமிழ் மக்களுக்காக ‘தமிழச் சமூக மையம்’ ஒன்றை நிறுவுவதற்கான பணிகளில் ஐம்பதுக்கும் மேற்படி தமிழ் அன்பர்கள் தங்கள் நேரத்தையும் ஆற்றலையும் பயன்படுத்தி இயங்கிவருகின்றார்கள். பெருமளவு நிதியைச் சேகரிப்பதற்காக திட்டங்கள் தீட்டி சுமார் 25 மில்லியன் கனடிய டாலர்களை திரட்டுவதற்கான பணிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.
ஆனால் இலங்கை என்னும் மாங்கனித் தீவில் வடக்கிலும் தெற்கிலும் குழப்ப நிலைதான். தனது வாழ்வின் இறுதிவரை தென்னிலங்கை அரசியல்வாதிகளோடு முரண்படாமலும் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கசுவும் பிடிக்காமலும், தமிழரசுக் கட்சி என்ற நீண்ட கால அரசியல் கட்சியை காப்பாற்ற முடியாதவராய் இயற்கை மரணத்தைத் தழுவிய இரா. சம்பந்தரின் இறுதிக் கிரியைகளை அரசாங்கத்தின் செலவில் செய்வதற்காக கொழும்புத் தலைமை தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. நான்கு திசைகளிலிருந்தும் அரச உத்தரவுகள் பறந்த வண்ணம் உள்ளன. தங்கள் நன்றிக் கடனைத் தீர்ப்பதற்காக ஜனாதிபதி அலுவலகம் முதல் பிரதமர் அலுவலகம் வரை சிரத்தை எடுத்து சம்பந்தர் அவர்களை வழியனுப்பி வைக்கக் காத்திருக்கின்றார்கள்.
மறுபக்கத்தில் ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைத்து, அந்தப் பதவியின் மூலம் தனக்கு கிடைக்கும் அதிகாரத்தையும் ஆடம்பர வாழ்க்கையையும் தொடர நினைத்து திட்டங்கள் தீட்டும் ரணில் விக்கிரமசிங்கவின் ‘ஆசை’ நிறைவேறுவதற்கு பக்க பலமாக நின்று செயற்படும் அவரது தமிழ்-சிங்கள- இஸ்லாமிய ‘சகாக்கள்’ தங்களுக்கு கிட்ட வேண்டிய சன்மானங்களுக்காகவும் காத்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.
அதற்கும் மேலான துயரம் தரும் செய்திகள் நம் தமிழர் தாயகமான வடக்கில் அரங்கேறியுள்ளன. பணம் மீது கொண்ட வெறியினால் எமது சமூகத்தில் கற்றவர்கள் அல்லது உயர்ந்தவர்கள் என்று மதிக்கப்படும் வைத்தியர்களும் சட்டத்தரணிகளும் ‘துணிந்து’ செய்யும் அநியாயங்களும் அராஜகங்களும் அரங்கேறிய வண்ணம் அங்கு ‘அசிங்கமான’ சம்பங்கள் இடம் பெற்றுவருகின்றன.
பாமர மக்கள் படித்தவர் என்று மதிக்கும் கூட்டம் பணத்திற்காக சண்டை போடுவதை அங்கு சாதாரண மக்கள் ஓரமாய் நின்று பார்த்து வியந்தும் சிரித்தும் வீதிகளைக் கடக்கின்றார்கள். வைத்தியப் பெருந்தகைகள் ‘சிறு சண்டியர்கள்’ போல தாக்குதல்களை நடத்தும் அளவிற்கு அங்கு சம்பாத்தியம் தொடர்பான போட்டிகள் தோன்றியுள்ளன என்பது தெளிவாகின்றது.
இறுதியாக இதயத்தை தாக்கும் இன்னும் ஒரு செய்தி. யாழ்ப்பாண நகரத்திலிருந்து வடக்கில் அமைந்துள்ள இடத்தில் இயங்கிவரும் பெண்கள் காப்பகம் ஒன்றில் விசமிகளின் செயலால் பாதிக்கப்பட்டுள்ள அந்த பெண்களுக்கான காப்பகத்தை உடனடியாக மூடும் வண்ணம் உத்தரவு இட்டுள்ள மற்றுமொரு பெண் அதிகாரியான வடக்கு மாகாணத்தின் ஆளுனர் அவர்கள் அந்த காப்பகத்தில் உள்ள இளம் பெண்களை அரசாங்கம் பொறுப்பெடுத்து அந்தச் அபலைப் பெண்களுக்கு நம்பிக்கை ஊட்டவல்லை நடவடிக்கைகளை எடுப்பதாக இன்னும் எமக்கு செய்தி ஒன்றும் வந்து சேரவில்லையே?
இவ்வாறான பல துன்பியல் நாடகங்கள் எழுந்து நின்று தாண்டவமாடும் நமது தமிழ் மண்ணை நாம் எவ்வாறு அழைப்பது இனிமேல்?