யாழ்ப்பாணத்தில் மாணவிகள் தங்கி இருந்த இல்லம் ஒன்று அவர்கள் குளிக்கும் காட்சிகள் பதிவானதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தது. பொதுவாக யாழ்ப்பாணத்தில் பெண்கள் மற்றும் அனாதரவற்ற சிறுவர்களைப் பராமரிக்கவென பல பராமரிப்பு இல்லங்கள் காணப்படுகின்றன. யுத்தத்தின் பின்னர் வடமாகாணத்தில் பல்லாயிரம் சிறுவர்கள் அனாதைகளாகவும், பல பெண்கள் தமது கல்வியைத் தொடர முடியாமலும் காணப்படுகின்றனர்.
இத்தகைய நபர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் புலம்பெயர்ந்த தமிழர்கள், மற்றும் தொண்டு நிறுவனங்கள், ஆலயங்கள் என்பவற்றின் உதவியுடன் பல இல்லங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே இத்தகைய சிறுவர் இல்லங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேபோல் விடுதலைப் புலிகளின் காலத்தில் செஞ்சோலை சிறுவர் இல்லம் போன்ற பல பராமரிப்பு இல்லங்கள் காணப்பட்டன. அவை அனைத்தும் சிறுவர் பராமரிப்பு இல்லங்கள் என்றும் பெண்கள் பராமரிப்பு இல்லங்கள் எனவும் அழைக்கப்பட்டன.
இவ்வாறு செயற்பட்டு வரும் இல்லங்களில் பெண்கள், சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகள் தொடர்பாக சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டியது கட்டாயமானதாகும். அனுமதியற்ற முறையில் செயற்பட்டு வரும் இல்லங்கள், போதிய வசதி இன்றி காணப்படும் இல்லங்கள் அனைத்தும் மூடப்படவேண்டியது கட்டாயமானதாகும். ஆனால் அனுமதி பெற்று செயற்படுகின்ற சிறுவர் – பெண்கள் பராமரிப்பு இல்லங்களில் இடம்பெறும் வன்முறைகள், கொடுமைகள் அனைத்தும் உரிய முறையில் ஆராயப்பட்டு அவற்றுக்கு சரியான தீர்வினை பெற்றுக் கொடுக்கவேண்டியது உயர் அதிகாரிகளின் கடமையாகும்.
அந்த விடுதியில் 10 குளியலறைகள் காணப்படுகின்றபோதிலும், அவை அனைத்தும் விடுதிப் பராமரிப்பாளர்களின் பயன்பாட்டுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளன. சிறுமிகளுக்கு வெளிப்புறமாக நீர் நிரப்பப்பட்ட தொட்டியொன்றே குளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சிறுமிகள் குளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதியே கண்காணிப்புக் கமராவால் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தாம் குளிக்கும் இடத்துக்கு மேற்புறமாக கண்காணிப்புக் கமரா பொருத்தப்பட்டிருப்பதை அவதானித்த சிறுமிகள். அதுதொடர்பில் தமது பெற்றோருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். விடயம் தொடர்பில் சிறுமிகளின் பெற்றோர் இல்லத்துடன் தொடர்புகொண்டு கேட்டபோது, பாதுகாப்புக் காரணங்களுக்காக வீதியைப் பதிவு செய்வதற்காகவே கமரா பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மேற்படி முறைப்பாட்டின் படி மேற்கொள்ளப்பட்ட அறிக்கையின் பிரகாரம் தெல்லிப்பழையில் இயங்கும் பெண்கள் இல்லத்தினையும் மற்றொரு சிறுவர் இல்லத்தினையும் உடனடியாக மூடிவிடுமாறு வட மாகாண ஆளுநரால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி
இதேவேளை, வடக்கு மாகாணத்தில் இயங்கும் சிறுவர் இல்லங்கள் தொடர் மேற்பார்வை செய்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பதிவுசெய்யாமல் இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களையும் உடனடியாக மூடுவதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வெளி மாகாணங்களில் உள்ள சிறார்களை வரவழைத்து வடக்கு மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் தங்க வைக்க அனுமதி வழங்க வேண்டாம் எனவும், அவ்வாறு தங்க வைக்கப்பட்டிருப்பின் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு முக்கிய விடயம் ஒன்று தொடர்பாக நாம் நோக்கும் போது சிறுவர் இல்லத்திலோ அல்லது மகளிர் இல்லத்திலோ காணப்படும் அனைத்து தரப்பினரும் ஒட்டுமொத்தமாக திருப்பி அனுப்பிவிட முடியாது. இங்கு தாய் தந்தையர்களை இழந்த பல பிள்ளைகளும் இங்கு காணப்படுகின்றார்கள். அவ்வாறு பெற்றோர் இல்லாத அல்லது சிறுவர்களை பராமரிக்க முடியாது சிறுவர் இல்லங்களில் விடப்பட்டுள்ள சிறுவர்கள் அனைவரின் நிலை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அத்துடன் சிறுவர் நிலையங்களை மூடிவிடுவதன் மூலம் இத்தகைய முயற்சிகளுக்கு நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியாது. வீடுகளுக்குச் செல்ல முடியாத பிள்ளைகளுக்கு பாதுகாப்பான இடம்ஒன்றை அரசாங்க அதிகாரிகள் பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்படுகளை செய்வதுடன் அவர்களின் எதிர்கால பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அத்துடன் சிறுவர் இல்லங்கள் போன்ற பொது இடங்களில் பாதுகாப்புக்கு சிசிடிவி கமரா பொருத்தும் போது பிரதேச செயலகம் அல்லது உரிய அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று சரியான இடத்தில் அவை பொருத்தப்படுகின்றனவா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
அரசாங்க அதிகாரிகள் பொதுமக்களின் வரிப் பணத்திலிருந்தே சம்பளத்தைப் பெற்றுக் கொள்கின்றார்கள் எனவே, அவர்கள் தமது கடமைகளை உரிய முறையில் மக்களுக்கு வழங்குவதன் மூலம் இவ்வாறான செய்பாடுகளுக்கு முடிவு கட்டலாம்.
எனினும் இந்தச் சம்பவத்தில் சமயத் தொண்டாற்றும் நபர் ஒருவரின் பெயர் குறிப்பிட்டு யாழ்ப்பாணத்தில் இயங்கும் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது. இது சில சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது.
அண்மையில் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என தமிழ் தரப்பில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. வட-கிழக்கில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளும் தொண்டு நிறுவனங்களும் சமூக ஆர்வலர்களும் இணைந்து இத்தகைய தீர்மானத்தை எடுத்து அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சியின் சில உறுப்பினர்கள் இத்தகைய நடவடிக்கைக்கு எதிரான கருத்தினை முன்வைத்து வருகின்றார்கள்.
அவர்களின் கருத்தின்படி தமிழ் மக்களால் நிறுத்தப்படும் பொது வேட்பாளரால் வெற்றிபெற முடியாது எனவும் எனவே, தென்னிலங்கையில் போட்டியிடும் சிங்கள வேட்பாளர்களின் ஒருவரையே ஆதரிக்க வேண்டும் என்றும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள். இது ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலாகவே பொதுமக்களால் பார்க்கப்படுகின்றது. அத்துடன் அவர்கள் தென்னிலங்கையை திருப்த்திப் படுத்தவும் அங்கு தமக்கு வேண்டப்பட்ட நபரின் வெற்றிக்காக பாடுபட்டு அவரிடமிருந்து தமக்கான நலன்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்தைக் கொண்டவர்கவே காணப்படுகின்றனர்.
எனினும் மேலும் சில கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் தமிழ்மக்களின் எதிர்ப்பினைக் காட்ட முடியாது என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கு முன்னரும் ஒருதடவை ஜனாதிபதித் தேர்தலைப் தமிழ்மக்கள் புறக்கணித்ததன் மூலம் பல துன்பங்களை எதிர்கொண்தனையும் மறந்து விட முடியாது.
அத்துடன் அண்மைய செய்திகளின் படி சில உறுதிப்படுத்தப்படாத விடயங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தமிழ் மக்கள் சார்பாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள பொது வேட்பாளர்களின் பெயர்ப்பட்டியல் சில கசிந்துள்ளன. அதில் மேற்படி சிறுவர் இல்லத்தின் பொறுப்பாளர் தேர்தலுக்கு முன்னிறுத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றன. இது உறுதிப்படுத்தப்படாத விடயமாக காணப்படுகின்ற போதிலும் இவ்விடயம் பத்திரிகை ஒன்றில் செய்தியை வெளியிட்ட செய்தியையும் ஒப்பிட்டு நோக்குமிடத்து இது எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல்களினை நோக்கமாகக் கொண்ட செயற்பாடாக காணப்படுமே என சந்தேகிக்ககத் தோன்றுகின்றது.
எது எவ்வாறான போதிலும் எதிர்காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு முன்வைக்கப்பட்ட பின்னரே இச் சம்பவத் தொடர்பான உண்மைகள் வெளிவரும் சாத்தியக் கூறுகள் உள்ளன.
அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளினால் எதிர்காலத்தில் சிறுவர்கள் பெண்பிள்ளைகளுக்கு கிடைக்க இருக்கின்ற சில சலுகைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது போகலாம்.
எனவே, ஒவ்வொரு விடயம் தொடர்பாகவும் பல்வேறு கோணத்தில் ஆராய்ந்து அடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன் சிறுவர் இல்லங்களும் பராமரிப்பு நிலையங்களும் அரசாங்கத்தின் பொறுப்பில் சரியான நிர்வாகத்தின் கீழ் இயங்குமாக இருந்தால் அதன் மூலம் பின்தங்கிய அல்லது பெற்றோர் இல்லாத பிள்ளைகளின் எதிர்காலத்தினை சிறந்த முறையில் வளர்த்தெடுக்க முடியும்.
சண்முகம்- மொன்றியால்- கனடா