வைக்கத்திலுள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.8.14கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையின் மூலம் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் மற்றும் புதிய நூலகம் அமைக்கும் பணிகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்திலுள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில், ரூ.8.14 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையின் மூலம் நடைபெற்றுவரும் புனரமைப்பு பணிகள் மற்றும் புதிய நூலகம் அமைக்கும் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 1924ஆம் ஆண்டு வைக்கத்தில் உள்ள கோயிலைச் சுற்றிலும் அமைந்துள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு இருந்த தடைகளை நீக்கக் கோரி நடந்ததுதான் வைக்கம் போராட்டம். இதற்காக அப்பகுதி தலைவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
முக்கிய தலைவர்கள் கைதான நிலையில் போராட்டத்தை தொடர்ந்து, தந்தை பெரியார் அவர்கள் வைக்கம் சென்று அந்தப் போராட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்தினார். அதன் நினைவாக, 1985 ஆண்டு கேரளா அரசு வழங்கிய நிலத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வைக்கத்தில் தந்தை பெரியார் நினைவகம் அமைக்கப்பட்டது. மேலும், அங்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நூலகம், அவர் பயன்படுத்திய பொருட்கள், அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்கள், வைக்கப்பட்டிருந்தது. நினைவகம் கட்டப்பட்டு நீண்ட ஆண்டுகள் ஆனதால், அதனை இன்றைய காலகட்டத்திற்கு, ரூ.8.14 கோடி மதிப்பீட்டில் புனரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்கள். ஏறத்தாழ 95 சதவீதம் பணிகள் முடிவடைந்துவிட்டன.
விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு, வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்குள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது. என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.