“அரசியல் நீரோட்டத்தில் நிர்வாகத் திறன் கொண்டவர்கள், முகாமைத்துவ அறிவு கொண்டவர்கள், பன்மொழிப் புலமை கொண்டவர்கள், சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள், மக்களுக்காக பாடுபடுபவர்கள், மக்களின் துன்ப துயரங்களை அறிந்தவர்கள், காசுக்கு விலைபோகாதவர்கள் ஆகியோரே உள்ளீர்க்கப்பட வேண்டும்.”
தமிழ் மக்களின் உரிமைக்காக பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்தது. அந்தவகையில் தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம் தற்போது இல்லாத போதிலும் தமிழ் மக்கள் மத்தியில் தற்போதும் தமது உரிமைக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டே வருகின்றன.
அந்தவகையில் ஆயுதப் போராட்டம் பலமாக இருந்த காலப்பகுதியில் அரசியல் ரீதியாக நாம் எமது உரிமைகளை பேரம்பேசி பெற்றுக் கொள்ளும் நோக்குடனும் சர்வதேச அரசியல் செயற்பாடுகளையும் கருத்தில் கொண்டு பல்வேறு கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. எனினும் ஆரம்பகாலத்தில் பல கட்சிகள் இணைந்து உருவாக்கப்பட்டாலும் பின்னர் சிலர் பல்வேறு காரணங்களுக்காக விலகிச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், தமிழ் மக்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களுக்கான கட்சி என தொடர்ச்சியாக நம்பப்பட்டு வந்தது. எனினும், கட்சியில் இருந்த பலர் தமது சுயஇலாபத்திற்காகவும், அரசுக்கு முண்டுகொடுக்கும் முகமாகவும் செயற்பட்டு வந்தமையினால் பலர் கட்சியிலிருந்து விலகிச் சென்றதுடன் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவினை குறைத்து பிற கட்சிகளின் மீது நாட்டம் காட்டத் தொடங்கினார்.
ஆரம்ப காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தேர்தல்களின் ஊடாக அதிக ஆசனங்களைக் கைப்பற்றி வந்தது. எனினும் காலப்போக்கில் அது படிப்படியாகக் குறைவடைந்து வந்துள்ளதுடன், தற்போது தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு கட்சி உறுப்பினர்கள் மட்டுமே காணப்படும் நிலைக்கு வந்துள்ளது.
ஒவ்வொரு கட்சிக்கும் என பல கொள்கைகள், விதிமுறைகள், கோட்பாடுகள், விழுமியங்கள் காணப்படுகின்றபோதிலும், தற்போதைய கால ஓட்டம் – தொழில்நுட்ப மாற்றம் – உலக நடப்பு என்பவற்றுக்கு ஏற்ப கட்சிகள் தமது கொள்கைகளைப் புறந்தள்ளிச் செயற்படுதல் வேண்டும்.
கூட்டமைப்பின் தலைவராக செயற்படுவோரில் பெரும்பகுதியினர் தற்போது வயது முதிர்ந்தவர்களாகவே காணப்படுகின்றனர். அவர்களுக்கு அனுபவம் உள்ளது, அவர்களாலேயே சிறப்பாக செயற்பட முடியும் என சிலர் கூற முனையலாம். ஆனால் தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில் அனுபவசாலிகளைக் காட்டிலும் பல அறிவாளிகள் – மதிநுட்பவாதிகள் – தந்திரசாலிகள் காணப்படுகின்றார்கள் அவர்களையும் கட்சியில் இணைத்துக் கொண்டு பயணிப்பதே சாலச் சிறந்ததாகும்.
இதற்கென காணப்படும் கட்சிக் கொள்கைகளைப் புறந்தள்ளிவிட்ட காலத்தின் தேவைக்கேற்ப சிறந்த நபர்களை கட்சிக்குள் உள்வாங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இரா. சம்பந்தனால் கொண்டுவரப்பட்ட மதிநுட்ப வாதியான சுமந்திரன் தற்போது கூட்டமைப்பின் ஆரோக்கிய செயற்பாட்டுக்கு பொருத்தமற்றவராக காணப்படுவதுடன் ஒத்துக் போகும் தன்மையை கொண்டிராததுடன், தனது தந்திரங்கள் குறுக்குவழியில் பயன்படுத்தி கட்சியின் தலைமைத்துவத்தை தான் கைப்பற்றுவதற்காக போராடி வருகின்றார். இது கட்சிக்கோ அல்லது சமூகத்திற்கோ ஆரோக்கியம் அற்ற செயற்பாடாக காணப்படுகின்றது.
இப்படியானவர்களை புறந்தள்ளிவிட்டு தற்போது வடக்குக் கிழக்கில் உள்ள நிர்வாகத் திறன் கொண்டவர்கள், முகாமைத்துவ அறிவு கொண்டவர்கள், பன்மொழிப் புலமை கொண்டவர்கள், சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள், மக்களுக்காக பாடுபடுபவர்கள், மக்களின் துன்ப துயரங்களை அறிந்தவர்கள், காசுக்கு விலைபோகாதவர்கள் அரசியல் நீரோட்டத்திற்கு உள்ளீர்க்கப்பட வேண்டும்.
உண்மையில் வடக்குக் கிழக்கில் பல ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர்கள், பாடசாலை அதிபர்கள், முகாமைத்துவம் சார்ந்தவர்கள், பிரபல கணக்காளர்கள், எழுத்தாளர்கள் என பலர் தமது பதவிக் காலத்திலேயே சமூகத்தின் மீது அக்கறை கொண்டு செயற்பட்டு வந்துள்ளார்கள். அவ்வாறான நபர்களுக்கு இடம்கொடுப்பதன் மூலம் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் – ஏற்படும்.
ஆனால் அண்மையில் ஏற்பட்ட சம்பவங்களை எல்லாம் பார்க்கும் போது அவை எவையும் நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகளை இல்லாது செய்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜூன் 30 ஆம் திகதி இயற்கை எய்தினார். இவர் தனது இறுதிக் காலம் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வந்துள்ளார். சம்பந்தன் தனது கடைசிக் காலத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடர்கள் பலவற்றில் கலந்து கொள்ளவில்லை. அவர் தனது உடல்நிலை காரணமாக இவ்வாறு செயற்படுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு எந்த அனுகூலங்களையும் பெற்றுக் கொடுக்கவில்லை.
இரா. சம்பந்தன் இயற்கை எய்திய பின்னர் அவரது இடத்திற்கு திருகோணமலையில் போட்டியிட்டு அடுத்த இடத்தைப் பெற்றுள்ள கதிரவேலு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் நீண்டகாலம் கனடாவிலேயே வசித்து வந்துள்ளார். 2020 ஆம் ஆண்டு முதல் இவர் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவராக செயற்பட்டு வருகின்றார். திருகோணமலை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி ஒரு ஆசனத்தினை மட்டுமே பெற்றுக் கொண்டது. அதன் படி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற இரா. சம்பந்தன் நாடாளுடன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு அடுத்த படியாக குகதாசன் 16,770 வாக்குகளைப் பெற்றிருந்தமையினால் சம்பந்தனின் இடத்திற்கு இவர் 02.07.2024 அன்று நியமிக்கப்பட்டதுடன் கடந்த 09.07.2024 அன்று நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அத்துடன் நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் செய்த பின்னர் அவர் தனது இருக்கைக்கு உதவியாளர் ஒருவரின் உதவியுடன் அழைத்துச் செல்லப்பட்ட போது தவறி விழுந்து விட்டார்.
இச் சம்பவத்தினை உற்றுநோக்கும் போது இரா. சம்பந்தன் அவர்களைத் தொடர்ந்து மீண்டும் ஒரு சக்கர நாற்காலியுடன் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்லும் நிலை ஏற்படலாம். எனவே, தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பு எப்பொழுதும் சக்கர நாற்காலியில் உறுப்பினர்களை அழைத்துச் செல்லும் போல் தெரிகின்றது.
இந் நிலை மாற்றப்பட வேண்டும். கடந்த 2022 ஆண் ஆண்டு காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டமானது இதனையே வலியுறுத்தி நிற்கின்றது. அதன்படி நாடாளுமன்றத்திற்கு செல்லும் உறுப்பினர்கள், அவர்களின் செயற்பாடுகள் என்பவற்றுடன் நாடாளுமன்றத்தில் இளமையான – துடிப்பான – அரசியல் அறிவு உடைய புதிய உறுப்பினர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதாகும்.
வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பு தமது எதிர்கால சந்ததியினர் சிறப்பாக வாழ்வதற்கு ஏற்ற சூழல் என்று ஏற்பட வேண்டும் என்பதாகும். ஏனெனில் நாம் கடந்து வந்த பாதை கடினமானது. எனவே அத்தகைய நிலை தமது எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படக் கூடாது என்பதாகும். இத்தகைய நிலை தோற்றம் பெற வேண்டுமாயின் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் சிறப்பாகவும் – ஆரோக்கியமாகவும் – மதிநுட்பமாகவும் செயற்பட வேண்டும் என்பதாகும். இதற்கு தற்போதைய கூட்டமைப்பின் செயற்பாடுகள் ஒருபோதும் பெருத்தமானது – போதுமானது அல்ல. எனவே, கூட்டமைப்புக்குள் புதிய இரத்தம் – நுட்பம் உட்பாச்சப்பட வேண்டும் என்பதாகும்.
அத்தகைய ஒரு சிறந்த காலம் விரைவில் ஏற்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். இதற்கெல்லாம் எதிர்காலத்தில் இடம்பெறும் தேர்தல் தொடர்பான அறிவிப்பும் அதில் போட்டியிட உள்ள நபர்களின் தன்மையும் பதிலாக இருக்கும்.
மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதனைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதுடன் இதே நிலை தொடருமாக இருந்தால் வடக்கு கிழக்கு மக்கள், தமது புதிய தலைமைத்துவத்தை தெரிவுசெய்ய புதிய முறை – புதிய கட்சி – புதிய உறுப்பினர்களை தேர்வுசெய்ய ஆர்வம் காட்டுவதுடன் மட்டுமன்றி சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல், முறையற்ற செயற்பாடுகளுக்கு எதிராக அணிதிரண்டு போராடியது போன்று கூட்டமைப்புக்கு எதிராகவும் தமது போராட்டத்தை முன்னெடுப்பதை தடுக்கமுடியாது போகலாம்.
சத்தியன்- கனடா