சாவகச்சேரி மருத்துவமனையின் முன்னாள் அத்தியட்சகர் மருத்துவர் அர்ஜுனா தனக்கு வந்த பிரச்சினைகளை வெளிப்படுத்தியவிதம் சரியா? அதில் அவர் முன் வைக்கும் குற்றச்சாட்டுகள் சரியா? அல்லது,அந்த மருத்துவமனையின் நலன்புரி சங்கம் வெளியிட்ட அறிக்கை சரியா? அல்லது அது தொடர்பாக அந்த மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் கூறுவது சரியா? அல்லது மருத்துவர் அர்ஜுனாவைப் பாதுகாப்பதற்காக அங்கு திரண்ட மக்கள் கூறுவது சரியா?போன்ற விவாதங்களுக்குள் இறங்குவது இக்கட்டுரையில் நோக்கமன்று.
மாறாக, தங்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சினை என்று வரும்பொழுது மக்கள் இப்படியெல்லாம் தெருவில் இறங்க முடியும் என்பதற்கு இது ஒரு ஆகப் பிந்திய உதாரணம். சமூக வலைத்தளங்களின் காலத்தில், யூ டியூபர்களின் காலத்தில் மக்கள் தங்கள் குரலை ஓங்கி ஒலிப்பதற்கு அதிகரித்த வாய்ப்புகள் உண்டு என்பதைக் காட்டிய ஆகப் பிந்திய சம்பவம் அது
அதில் யூடியூப்கள் நடந்து கொண்ட விதம் சரியா? ஊடகங்கள் நடந்து கொண்ட விதம் சரியா? அல்லது சமூகவலைத் தளங்களில் அந்த செய்தி பரிமாறப்பட்ட விதம், கையாளப்பட்ட விதம், விவாதிக்கப்பட்ட விதம்,போன்றன சரியா? என்ற விவாதங்களுக்குள் இறங்குவதும் இக்கட்டுரையின் நோக்கமன்று. மாறாக, சமூக வலைத்தளங்களின் காலத்தில் ஒரு தனிநபர் தனது நிலைப்பாட்டை எப்படி மக்கள் மயப்படுத்தலாம்?மக்களைத் தன்னை நோக்கித் திரட்டலாம்? என்பதற்கு இது ஆகப் பிந்திய உதாரணம்.
குறிப்பிட்ட தனிநபரின் நிலைப்பாடு சரியா பிழையா என்பதற்கெல்லாம் அப்பால் அது மக்களுடைய பொது புத்திக்குள் ஏற்கனவே ஒரு குறையாக; ஒரு பிரச்சினையாக இருக்கும் விவகாரத்தோடு தொடர்புடையதாக இருக்கும் பொழுது, மக்கள் அதற்காக ஒன்று திரள்வார்கள் என்பதற்கு இது ஆகப்பிந்திய உதாரணம்.
அது ஒரு விதத்தில் தானாகத் திரண்ட ஒரு கூட்டம்.அப்பகுதியைச் சேர்ந்த,ஒரு முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்–அவர் ஊடகங்களோடு தொடர்புடையவர்–அந்த விவகாரத்தை கையில் எடுத்து தன்னை பிரபல்யப்படுத்திக் கொண்டார் என்று சில விமர்சனங்கள் உண்டு. தொடக்கத்தில் இருந்தே அவர்தான் குறிப்பிட்ட மருத்துவருக்கு அடுத்தபடியாக ஊடகங்களில் அதிகமாக தெரிந்தார்.அந்த விடயத்தைத் அவர் உணர்ச்சிகரமாக அணுகினார்.அதனால் இடையில் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.எனினும்,குறிப்பிட்ட மருத்துவரை பாதுகாப்பதற்காகவும் அவருக்கு ஆதரவாகவும் அங்கு திரண்ட மக்கள் கூட்டத்தை அவர்தான் முழுமையாகத் திரட்டினார் என்று மிகைப்படுத்திக் கூறவும் முடியாது.
அரச மருத்துவமனைகளை தமிழர்கள் தர்மாஸ்பத்திரி என்று அழைப்பார்கள். அவை உண்மையாக தர்மாஸ்பத்திரிகள் அல்ல.மக்களின் வரிப்பணம்தான் அங்கே தர்மமாகத் திரும்பிவருகிறது.மக்களின் வரிப்பணம்தான் அங்கு வேலை செய்யும் மருத்துவத்துறை பணியாளர்களுக்குச் சம்பளமாக வழங்கப்படுகிறது. அதே வரிப்பணத்தில் திரட்டிய பணம்தான்,இலவச மருந்தாக,இலவச சிகிச்சையாகவும் கிடைக்கின்றது. அரச மருத்துவமனைகளில் வேலை செய்யும் எல்லாருக்கும் சம்பளம் கிடைக்கின்றது. யாரும் இலவசமாக சேவை செய்யவில்லை.எனினும்,ஒரு தொகுதியினர் வாங்கும் சம்பளத்தைவிட அதிகமாக வேலை செய்கிறார்கள்.எனவே எதுவும் தர்மமாக கிடைக்கவில்லை. மக்களிடம் வசூலித்த வரியை அரசாங்கம் திருப்பித் தருகிறது என்பதுதான் சரி.
எனினும்,அரச மருத்துவமனைகளை தர்மாஸ்பத்திரிகளாகக் கருதும் ஒரு சமூகம், அதில் வேலை செய்யும் மருத்துவர்களை தர்மவான்களாகவும் உயர்வானவர்களாகவும் உயிர்காக்கும் உத்தமர்களாகவும் பார்க்கின்றது. அதனால்தான் மருத்துவர்களுக்கு எல்லாவற்றிலும் முன்னுரிமை தரப்படுகின்றது.
உதாரணமாக வீதியில் வேகக் கட்டுப்பாட்டை மீறி வாகனத்தை செலுத்தும் மருத்துவர்களை பெரும்பாலும் காவல்துறை தண்டிப்பது குறைவு.சீதனச் சந்தையிலும் மருத்துவருக்கு மவுசு அதிகம்.இவ்வாறு மருத்துவர்களை உயர்வாகப் போற்றும் ஒரு சமூகத்தில், மருத்துவர்கள் மீதும் மருத்துவத் துறை மீதும் குற்றச்சாட்டுகள் வரும்பொழுது அவை பெரிதாக்கப்படுகின்றன. மிக உயர்வாக மதிக்கப்படும் ஒன்றின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் மிகக் கீழ்த்தரமானவைகளாக அமைவதுண்டு.
இதுதான் சாவச்சேரியிலும் நடந்தது.மருத்துவர் அர்ஜுனா உள்வீட்டு விவகாரங்களை வெளியே கொட்டிவிட்டார்.அவர் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக அவ்வாறு சிஸ்டத்தின் மீது ஏற்கனவே உள்ள விமர்சனங்களையும் கோபத்தையும் திட்டமிட்டுத் திருப்பி விட்டார் என்ற ஒரு விமர்சனமும் உண்டு.எதுவாயினும் அவர் மூட்டிய சிறு பொறி பெரு நெருப்பாக மாறும் அளவுக்கு சமூகத்தில் மருத்துவத்துறை சார்ந்து அதிருப்திகளும் சந்தேகங்களும் கேள்விகளும் இருந்திருக்கின்றன என்பதைத்தான் சாவகச்சேரியில் மக்கள் காட்டிய எதிர்ப்பு நமக்கு உணர்த்துகின்றது.
மிகக்குறிப்பாக மருத்துவர் அர்ஜுனா சிஸ்டத்தின் மீது எழுப்பும் கேள்விகளுக்கு இதுவரை யாரும் உத்தியோகபூர்வமாகப் பதில் சொல்லவில்லை. அதேசமயம் அவருடைய ஆஸ்பத்திரியில் வேலை செய்த சக மருத்துவர்கள் பெருமளவுக்கு அவருக்கு எதிராகவே காணப்படுகிறார்கள்.அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அர்ச்சுனாவுக்கு சாதகமாகக் கதைத்திருக்கிறார். கடந்த ஒன்பதாம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அவர் அர்ஜுனாவின் பக்க நியாயங்களை எடுத்துக் கூறியிருக்கிறார்.விவகாரம் ஒரு சர்சையாக மாறியபொழுது அமைச்சர் மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்றிருக்கிறார்.இது தொடர்பாக அரசாங்கம் ஒரு விசாரணைக் குழுவை உருவாக்கி விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்கிறார்.
ஆனால், மருத்துவமனையின் நோயாளன் நலன்புரிச் சங்கம் மக்களுடைய குற்றச்சாட்டுகளோடு நிற்பதாக தெரியவில்லை.அவர்கள் வெளியிட்ட அறிக்கையானது அர்ச்சுனாவுக்கு எதிராகக் காணப்படுகின்றது.
இதில் அர்ஜுனா சொல்வது சரியா அல்லது நோயாளர் நலன்புரி அமைப்பு சொல்வது சரியா? அல்லது யாழ் மாவட்ட மருத்துவ நிர்வாகிகள் சொல்வது சரியா? என்பவற்றுக்கெல்லாம் அப்பால், மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் கொதிப்பு வெற்றிடத்தில் இருந்து வரவில்லை என்பதனை இங்கு சுட்டிப்பாகக் கவனிக்க வேண்டும்.
அதற்கு ஆழமான காரணங்கள் உண்டு.தர்மாஸ்பத்திரிகள் மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தர்மாஸ்பத்திரிகளாக இல்லை என்ற விமர்சனம் மக்கள் மத்தியில் ஏற்கனவே உண்டு. வணிகமயப்பட்ட தனியார் மருத்துவத் துறை தொடர்பான விமர்சனங்களும் அதற்குள் அடங்கும்.இலங்கையில் தனியார் மருத்துவத் துறையுடன் இணைந்து செயல்படும் பெரும்பாலான மருத்துவர்கள் அரச மருத்துவமனைகளிலும் வேலை செய்பவர்கள்தான்.இதுவும் விமர்சனங்களுக்குக் காரணம்.தனியார் ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் சிலர் “தர்மாஸ்பத்திரிகளில்” தமக்குரிய தொழில் தர்மத்தோடு நடந்து கொள்வதில்லை என்று மக்கள் நம்புகிறார்கள்.இந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் தோன்றும் விமர்சனங்களின் விளைவாகவே சாவகச்சேரியில் ஆஸ்பத்திரிக்கு முன் மக்கள் திரண்டார்கள்.
யாழ்ப்பாணத்தில் தென்மாராட்சி பிரதேசம் என்பது ஒப்பிட்டளவில் நிலப்பரப்பால் பெரியது. ஆனால் ஒப்பீட்டளவில் ஐதான குடியிருப்புகள்தான். எல்லா வளங்களையும் கொண்ட ஒரு மருத்துவமனை தங்கள் மத்தியில் இருந்த போதிலும் அது பொருத்தமான விதங்களில் பயன்படுத்தப்படவில்லை என்ற கோபம் அந்த மக்களை வீதியில் இறக்கியிருக்கிறது.எனவே அந்தக் கோபம் வெற்றிடத்தில் இருந்து வரவில்லை. தங்களுடைய பிரச்சினைகளைப் பேச முற்பட்ட ஒரு மருத்துவரை எனையவர்கள் தனிமைப்படுத்துகின்றார்கள், தண்டிக்க முற்படுகிறார்கள் என்பது மக்களை மேலும் கோபத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.
இது மருத்துவமனைகளுக்கும் மருத்துவர்களுக்கு மட்டும் பொருந்தும் ஒரு விடயம் அல்ல. சாதாரண மக்கள் மத்தியில் காணப்படும் அதிருப்திகளும் கேள்விகளும் ஆத்திரங்களும் பொருத்தமான தருணங்களில் வெடித்து கிளம்புகின்றன.பொதுப் புத்தியில் ஆழமாகப் பதிந்திருக்கும் விமர்சனங்கள்,வெறுப்பு போன்றவற்றுக்கு யாராவது ஒருவர் தலைமை தாங்கும்பொழுது அல்லது யாராவது ஒருவர் அதில் சிறு பொறியைப் பற்ற வைக்கும் பொழுது அது திரட்டப்பட்ட எதிர்ப்பாக வெளி வருகிறது.
மருத்துவர் அர்ஜுனா முகநூலையும் சமூக வலைத்தளங்களையும் உச்சமாகப் பயன்படுத்தினார். எப்பொழுதும் லைவ்வில் நின்றார்.அதைத்தான் தன்னுடைய பலம் என்றும் நம்பினார்.
பொதுவாக தமிழ் சமூகத்தில், அதாவது அரச மருத்துவமனைகளை தர்மாஸ்பத்திரிகளாக கருதும் ஒரு சமூகத்தில், மருத்துவர்கள் தங்களுக்குரிய உயர்ந்த ஸ்தானத்தை எப்படி பாதுகாக்கலாம்? எப்படி ஒதுங்கியிருக்கலாம் என்றுதான் சிந்திப்பார்கள். தமிழ்ச் சமூகத்தில் மருத்துவர்களுக்கு என்று ஒரு தனிக்குணம் உண்டு என்று நம்புமளவுக்கு அவர்கள் தங்களை எப்பொழுதும் தங்களுக்குரிய சௌகரிய வலையத்துக்குள் பத்திரமாக வைத்துக் கொள்வார்கள்.
ஆனால் அர்ஜுனாவைப் போல விதிவிலக்கான சிலர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி லைவ்வில் வருகிறார்கள். பல மாதங்களுக்கு முன் கண்டாவளையைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் அவ்வாறு சர்ச்சைகளுக்குள் சிக்கினார்.
அர்ஜுனாவின் பலம் அவர் எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் லைவ்வில் நின்றது.ஆனால் அதுவே அவருக்கு பலவீனமாகவும் மாறலாம்.அவர் தொடர்ச்சியாக மக்கள் முன் தோன்றினார். அதன்மூலம் அவர் தொடர்ச்சியாக தன்னுடைய பிரச்சினைகளை அப்டேட் பண்ணினார். அதன்மூலம் அவர் தொடர்ச்சியாக மக்களோடு உரையாடினார்.
இவ்வாறு யாரெல்லாம் தங்களோடு தொடர்ச்சியாக உரையாடுகிறார்களோ. தங்களைச் சரணடைகிறார்களோ, அவர்களை மக்கள் மதித்திருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு. தங்களுக்காக ஒருவர் தண்டிக்கப்படுகிறார் என்று கருதிய மக்கள் அவருக்கு ஆதரவாக மருத்துவமனைக்கு முன் திரண்டார்கள்.சமூக வலைத்தளங்களின்மூலம் அவர் தன்னை ஒரு கதாநாயகனாக, கலகக்காரனாக வெற்றிகரமாக ஸ்தாபித்துக் கொண்டார். அதற்கு யூ டியூபர்கள் அதிகம் உதவினார்கள்.
அர்ஜுனா நல்லவரா கெட்டவரா என்ற விவாதம் இக்கட்டுரையின் பேசு பொருளுக்கு அவசியமானது அல்ல.அவர் தெரிந்தோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ ஒரு கலகத்தைச் செய்திருக்கிறார். அதன் விளைவு
மருத்துவத் துறை சார்ந்து புதிய கேள்விகளை மக்கள் மத்தியில் எழுப்பியிருக்கிறது.ஏற்கனவே உள்ள கேள்விகளையும் சந்தேகங்களையும் கோபத்தையும் அதிகப்படுத்தியிருக்கிறது.இது எதிர்காலத்தில் மருத்துவத்துறையில் மாற்றங்களை ஏற்படுத்துமா?