தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தல் முடிந்து நாங்கள் 40-க்கு 40 இடங்களில் வெற்றி பெற்ற சில நாட்களிலேயே விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்தே தி.மு.க. அரசுக்கு, இந்தியாவிலேயே இதுவரை எந்த ஆட்சிக்கும் இடைத்தேர்தல் நேரத்தில் வராத சவால்கள் வந்தது. விக்கிரவாண்டி தொகுதிக்கு மிக அருகாமையில் இருக்கிற கள்ளக்குறிச்சியில் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்தது. அதை பா.ஜ.க.வினர் பூதாகரமாக்கி பிரளயமே ஏற்பட்டு விட்டதை போல, அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நடைபெற்றதை மறைத்து விட்டு இங்கு மிகப்பெரிய நாடகத்தை நடத்தி தி.மு.க.வின் வெற்றியை குலைத்துவிட வேண்டும் என்ற திட்டத்தோடு செயல்பட்டார்கள்.
தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு கொலை நடந்தது. அதற்கு அரசியல் சாயம் பூசி அதையும் இந்த தேர்தலில் மிகப்பெரிய பிரச்சனையாக்க முயற்சித்தார்கள். இந்த 2 மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 ஆண்டு காலம் நேர்மையாக ஆட்சி நடத்தியதை மக்கள் ஏற்றுக்கொண்டு மக்களாகிய நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம் என்று நிரூபித்துக் காட்டியுள்ளனர்.
இந்த நேரத்தில் இவ்வளவு பெரிய மகத்தான வெற்றியை தேடிக்கொடுத்த விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு தி.மு.க. வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரவு பகலாக உழைத்து வாக்கு சேகரித்தார். அவர் அரசியலில் கால் வைத்த பிறகு அரசியலில் எங்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்து வருகிறது. இதன் மூலம் இன்னொரு வெற்றியும் தி.மு.க.வுக்கு கிடைத்திருகிறது. இந்த ஒரு மாதமாக பல தரப்பினரும் சேர்ந்து மனகுடைச்சல் கொடுத்தார்கள். அவை அத்தனையையும் தாங்கிக்கொண்டு உழைத்த தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.