விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவிற்கே உண்மையான வெற்றி என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.அன்புமணி 56,261 வாக்குகள் பெற்றிருக்கிறார். முடிவு எப்படி இருந்தாலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை பா.ம.க. தலைவணங்கி ஏற்கிறது. ஆளுங்கட்சி சார்பில் பணமும், பரிசுகளும் வாரி இறைக்கப்பட்ட போதிலும், அவற்றை புறக்கணித்து விட்டு 56,261 வாக்காளர்கள் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்திருப்பது ஜனநாயகத்திற்கும், பா.ம.க.வின் மக்கள் பணிக்கும் கிடைத்த வெற்றி ஆகும். அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதியில் உண்மையான வெற்றி பாட்டாளி மக்கள் கட்சிக்கு தான் கிடைத்திருக்கிறது. பணத்தை வாரி இறைத்து திமுக பெற்ற வெற்றி தற்காலிகமானது.
2026 தேர்தலில் பா.ம.க. மாபெரும் வெற்றியை பெறுவது உறுதி. விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு 56,261 வாக்குகள் பெற்ற பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விக்கிரவாண்டி தேர்தலில் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட பா.ம.க. மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், களப்பணி ஆற்றிய பா.ம.க மற்றும் கூட்டணி கட்சிகளின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.