அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த நபர் டொனால்ட் டிரம்ப்-ஐ சுட்டார். இந்த சம்பவத்தால் பரபர சூழல் உருவானது.
துப்பாக்கி சூடு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் அதிபர் டிரம்ப் காதில் இருந்து இரத்தம் சிந்தியது. இதைத் தொடர்ந்து டிரம்ப்-ஐ பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றிக்கொண்டு அவரை அங்கிரிந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக எஃப்பிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக துப்பாக்கி சூடு நடத்தியவர் 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 70 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள பகுதியில் வசித்து வந்துள்ளார் என்று எஃப்பிஐ தெரிவித்தது. துப்பாக்கி சூடு நடத்திய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்-ஐ பாதுகாவலர்கள் சம்பவ இடத்தில் வைத்தே சுட்டுக் கொன்றனர். இவர் ஏன் டிரம்ப்-ஐ சுட முயன்றார் என்பது பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சியால் நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். இத்தகைய செயல்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும். அவர் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.