தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் மையத்தில் கடந்த 12ம் தேதி மிக பிரமாண்டமான வகையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் உலக தலைவர்கள், உலக அளவிலான பிரபலங்கள், இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். அதனை தொடர்ந்து திருமணத்தையொட்டி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மணமக்களுக்கு ஆசி வழங்கும் விழாவான ‘சுப ஆசீர்வாத்’ நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியிலும் ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். இதில், பிரதமர் மோடி பங்கேற்று மணமக்கள் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்டை வாழ்த்தினார். அப்போது மணமக்கள் பிரதமர் மோடியின் காலில் விழுந்து வணங்கினார்கள். திருமண வரவேற்பு விழாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை முகேஷ் அம்பானி வாசலில் வந்து வரவேற்று அழைத்து சென்றார். மேலும், ‘சுப ஆசீர்வாத்’ நிகழ்ச்சியில் நடிகர் அமிதாப்பச்சன், தனது மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மகள் சுவேதா பச்சன் ஆகியோருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதே போல நடிகர் ஷாருக்கான் தனது மனைவி, மகளுடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
நடிகர்கள் சஞ்சய் தத், ஜாக்கி ஷெராப், வெங்கடேஷ், நடிகைகள் மாதுரி தீட்சித், ஹேமமாலினி, காஜல் அகர்வால், திஷா பதானி, ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் அட்லீ, தயாரிப்பாளர் கரண் ஜோஹர் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.