இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் முதல்வர் சுக்விந்தர் சுகுவின் மனைவி கமலேஷ் தாக்குர் வெற்றி பெற்றுள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. முதல்வராக சுக்விந்தர் சுகு பதவி வகிக்கிறார். இங்கு சுயேச்சைகளாக இருந்த எம்எல்ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடைபெற்றது. அவர்கள் அனைவரும் பாஜக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இடைத்தேர்தலில் 65.42% வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இடைத்தேர்தலில் தெஹ்ரா தொகுதியில் முதல்வர் சுக்விந்தரின் மனைவி கமலேஷ் தாக்குர் போட்டியிட்டார். அதனால் இந்தத் தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. இந்நிலையில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஹோஷியார் சிங்கை விட 9,399 வாக்குகள் அதிகம் பெற்று கமலேஷ் வெற்றி பெற்றார். தேர்தலில் கமலேஷ் மொத்தம் 32,737 வாக்குகளும், சிங் 23,338 வாக்குகளும் பெற்றனர்.
.கடந்த 2012-ம் ஆண்டு தொகுதி மறுவரையின் கீழ் தெஹ்ரா தொகுதி உருவாக்கப்பட்டது. அதன்பிறகு நடைபெற்ற தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்று வந்தது. பாஜக.வின் கோட்டையாக கருதப்பட்ட தெஹ்ரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் சுக்விந்தரின் மனைவி கமலேஷ்வெற்றி பெற்றதால், அக்கட்சியினர்இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
முன்னதாக இந்தத் தொகுதியில் தனது மனைவி கமலேஷ் வெற்றிக்காக, முதல்வர் சுக்விந்தர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து முதல்வர் சுக்விந்தர் கூறும்போது, ‘‘மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும், தற்போது மாநிலத்தில் காங்கிரஸ் வலுப்பெற்றுள்ளதை இந்த இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன’’ என்றார்.