மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை செய்யபட்டுள்ளார். இது தொடர்பாக மாநகர காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை மாநகர் தல்லாகுளம் காவல்நிலைய எல்லையிலுள்ள சொக்கிகுளம் வல்லபாய் தெரு பகுதியில் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். இந்நிலையில், காலை அந்த பகுதியில் நாம் தமிழர் கட்சி வடக்கு தொகுதியின் துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயதங்களுடன் விரட்டியுள்ளனர். அப்போது, பாலசுப்பிரமணியன் கூச்சலிட்டபடி ஓடிய நிலையில் அந்த கும்பல் அவரை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பித்துள்ளனர். இதையடுத்து, பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பாலசுப்பிரமணியனை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பாலசுப்பிரமணியன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் அவரது உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக எடுத்துச் சென்றனர். தல்லாகுளம் காவல்துறையினர் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட பாலசுப்ரமணியன் மீது சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்னையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.