அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த மாதமே அமெரிக்கா செல்லவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அடுத்ததடுத்து பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் முதலமைச்சர் பங்கேற்க வேண்டியிருந்ததால், அவரது அமெரிக்க பயணம் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் அமெரிக்கா செல்வதற்கு முன்பு கட்சியிலும், அமைச்சரவையிலும், ஆட்சி நிர்வாகத்திலும் பல அதிரடி மாற்றங்களை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிய வந்துள்ளது.
மிக முக்கியமாக அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. மேலும் இதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும் தெரிய வந்துள்ளது. எனவே உதயநிதி துணை முதலமைச்சராவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அடுத்த மாதம் (ஆகஸ்ட்) இரண்டாவது வாரம் முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதற்கு முன்னதாகவே உதயநிதி துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவது குறித்த அறிவிப்பும், அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். அதன்படி அமைச்சரவையில் பல இலாகாக்கள் வைத்துள்ள அமைச்சர்களிடம் இருந்து இலக்காக்கள் பிரித்து புதியவர்களுக்கு அளிக்கப்படும் என்றும், மேலும் அமைச்சரவையில் பல இளமையான புதிய முகங்கள் இடம்பெறுவார்கள் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனவே கட்சியில் உள்ள இளவயது எம்எல்ஏ க்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.