பிரபல யூடியூபரான சவுக்கு சங்கரை தமிழக காவல்துறை பல்வேறு வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சவுக்கு சங்கர் தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது சவுக்கு சங்கரால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதா? பொது அமைதிக்கு எந்த வகையில் பாதிப்பு ஏற்படுத்துகிறார்? போன்ற கேள்விகளை உச்சநீதிமன்றம் அரசு நோக்கி எழுப்பியது. இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக பல்வேறு முறைகேடான தகவல்களை பதிவிட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குண்டர் சட்டம் போடப்பட்டது என வாதங்களை முன்வைத்தார். அரசு தரப்பு குற்றச்சாட்டை மறுத்த சவுக்கு சங்கர் தாயார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய அதே நீதிபதி, குண்டர் சட்டத்தில் கைது செய்தது தவறு என தீர்ப்பு வழங்கியுள்ளார் எனக் குறிப்பிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க தொடங்கிவிட்டதால் விரைந்து விசாரணையை முடிக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.