ஜனாதிபதி தேர்தலை நோக்கி தமிழ் குடிமக்கள் சமூகங்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பானது கடந்த 14 ஆம் தேதி மட்டக்களப்பில் கூடியது. மட்டக்களப்பில் ஊரணியில் அமைந்துள்ள அமெரிக்க மிஷன் திருச்சபையின் மண்டபத்தில் நடந்த இந்த சந்திப்பில் தமிழ்ப் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு குடிமக்கள் சமூகங்கள், மக்கள் அமைப்புகள் போன்றவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். 100பேர்களுக்கும் குறையாத பிரதிநிதிகள் அங்கே காணப்பட்டார்கள். சந்திப்பு தமிழ்மக்கள் பொதுச் சபையின் உள்ளக சந்திப்பு. இதில் தமிழ்மக்கள் பொதுச்சபையை தொடர்ந்தும் பலப்படுத்துவது தொடர்பாக உரையாடப்பட்டது. சந்திப்பின் பின் நிகழ்ந்த ஊடகச் சந்திப்பின் போது அது தொடர்பாக விளக்கப்பட்டது.
அந்த விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால், தமிழ்மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பு தமிழ் மக்களை ஒரு தேசமாக கட்டியெழுப்புவதை இலட்சியமாகக் கொண்டது என்று அழுத்தமாக கூறப்பட்டது. அந்த நோக்கத்தை முன்வைத்து அந்த அமைப்பானது தன்னை தொடர்ந்து பலப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தமிழ் மக்களின் ஆகக்கூடிய வாக்குகளைத் திரட்டிக் கொடுக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் பொதுச்சபை கேட்டிருக்கின்றது. அவ்வாறு பொது வேட்பாளருக்கு கிடைக்கக்கூடிய அதிக வாக்குகளானவை தமிழ்மக்கள் மீண்டும் ஒரு அணியில் திரண்டு விட்டார்கள் என்று வலிமையான செய்தியை வெளி உலகத்துக்கு கொடுக்கும். அதைவிட முக்கியமாக தென்னிலங்கைக்கு கொடுக்கும். அதைவிட முக்கியமாக தமிழ் கட்சிகளுக்குக் கொடுக்கும்.
ஜனாதிபதி தேர்தலை நோக்கித் தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிநிதிகளும் தமிழ் தேசிய கட்சிகள் மத்தியில் இருந்து ஏழு கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது என்று ஏற்கனவே வவுனியாவில் நடந்த ஒரு சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது. இந்த பொதுக் கட்டமைப்புக்குரிய புரிந்துணர்வு உடன்படிக்கையானது கடந்த ஆறாம் தேதி கையெழுத்திடப்பட இருந்தது. ஆனால் சம்பந்தரின் மறைவையொட்டி அந்த நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது. அந்த உடன்படிக்கை விரைவில் காய்ச்சாத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த உடன்படிக்கைக்கு பின் உருவாக்கப்படும் பொதுக் கட்டமைப்பானது கட்சிகளையும் மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளையும் சம அளவில் கொண்டிருக்கும். இருதரப்பும் சம பங்காளிகள், சம அந்தஸ்தை கொண்டவர்கள் என்ற அடிப்படையில் இணைந்து முடிவெடுப்பார்கள்.
அந்த பொதுகட்டமைப்பின் கீழ் மேலும் உபகட்டமைப்புகள் உருவாக்கப்படும். உபகட்டமைப்புகள் ஒரு ஜனாதிபதி தேர்தலை நோக்கமாகக் கொண்டு முதலில் உருவாக்கப்படும். அதன்படி யார் பொது வேட்பாளர் என்பதைத் தீர்மானிப்பதற்கு ஒரு உபகட்டமைப்பு, தேர்தல் விஞ்ஞாபனம் எது என்பதைத் தீர்மானிக்க உபகட்டமைப்பு,நிதி நடவடிக்கைகளை முகாமை செய்ய ஒரு உபகட்டமைப்பு, பரப்புரை நடவடிக்கைகளை முகாமை செய்ய ஒரு உபகட்டணைப்பு… என்று பல்வேறு உபகட்டமைப்புகள் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்படும் என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உப கட்டமைப்புகளுக்கு ஊடாக தமிழ்பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தமிழ்மக்கள் பொதுச்சபை ஏற்கனவே அறிவித்திருந்தது.
இப்பொழுது ஒரு கேள்வி எழுகின்றது.அப்படியென்றால் தமிழ்மக்கள் பொதுச்சபையும் கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்கிய பின் தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்புக்கு என்ன நடக்கும்?
மட்டக்களப்பு ஊரணியில் நடந்த சந்திப்பின் பின், ஊடகச் சந்திப்பின்போது அது தெளிவாக கூறப்பட்டது.மக்கள் அமைப்பாக தமிழ்மக்கள் பொதுச்சபையானது தொடர்ந்து இயங்கும் என்று அங்கு தெரிவிக்கப்பட்டது. தமிழ்மக்கள் பொதுச்சபைக்குள் பல்வேறு வகைப்பட்ட மக்கள் அமைப்புகள் உண்டு. அவற்றுள் நேரடியாக அரசியலில் ஈடுபடக்கூடாது என்று தமது யாப்பு விதிகளில் எழுதி வைத்துள்ள சிவில் சமூகங்களும் உண்டு. தூதரகங்களைச் சந்திக்கும் சிவில் சமூகங்கள் உண்டு. ஐநா போன்ற அமைப்புகளோடு இடையூடாடும் சிவில் சமூகங்கள் உண்டு.தவிர ஏற்கனவே கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதிலிருந்து விலகி வந்த செயற்பாட்டாளர்களும் அந்த அமைப்புக்குள் உண்டு. அதாவது தமிழ்மக்கள் பொதுச்சபையானது பல்வேறு செயற்பாடுகளைக் கொண்ட,பல்வேறு விதமான ஒழுக்கங்களைக் கொண்ட குடிமக்கள் சமூகங்கள் மற்றும் மக்கள் அமைப்புகளின் கூட்டிணைவு ஆகும்.அங்கே ஒரு பல்வகை உண்டு. அது தொடர்ந்து பேணப்படும் என்று அன்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழ் மக்கள் பொதுச்சபைக்குள் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பிரதிநிதிகள், ஏழு தமிழ்த்தேசியக் கட்சிகளோடு இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் அதேசமயம், தமிழ்மக்கள் பொதுச்சபையானது தொடர்ந்து ஒரு மக்கள் அமைப்பாகச் செயல்படும் என்றும் அங்கே தெரிவிக்கப்பட்டது.
இது மிக முக்கியம். கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்து ஒரு பொது கட்டமைப்பை உருவாக்குவது என்பது. தமிழ்த் தேசிய அரசியலில் இது ஏற்கனவே காணப்பட்ட ஒரு போக்கு. 2015இல் இருந்து தொடங்கி 2019 வரையிலும் முனைப்பாக இயங்கிய தமிழ் மக்கள் பேரவையும் அவ்வாறு ஒரு ஹைபிரிட் ஆன கட்டமைப்பாகத்தான் இருந்தது.
ஆனால் தமிழ்மக்கள் பேரவைக்கும் இப்பொழுது யோசிக்கப்படும் உத்தேச பொதுக் கட்டமைப்புக்கும் இடையில் உள்ள பிரதான வேறுபாடு என்னவென்றால், இங்கு மக்கள் அமைப்புக்கள் சிவில் சமூகங்கள் போன்றன தங்களை முதலில் ஒரு கட்டமைப்பாக வளர்த்தெடுத்திருக்கின்றன. கட்டமைப்பின் சில பிரதிநிதிகள் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவார்கள். அதற்கு ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை எழுதப்படும் என்று கூறப்படுகின்றது அந்த உடன்படிக்கை எழுதப்படுமாக இருந்தால் அது தமிழ் தேசிய அரசியலில் ஒரு புதிய தோற்றப்பாடாக இருக்கும் ஏனென்றால் மக்கள் அமைப்புகளும் கட்சிகளும் இணைந்து ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை எழுதுவது என்பது இதுதான் முதல் தடவை.
தமிழ் மக்கள் பேரவைக்குள் மக்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சமூகத்தில் பிரமுகர்களாகக் காணப்பட்டவர்களும் அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து ஒரு அமைப்பாகச் செயற்படடார்கள். அதில் நேரடியாக அரசியலில் ஈடுபடும் கட்சிகளும் அரசியல்வாதிகளும் இருந்தார்கள். அதேசமயம் நேரடியாக அரசியலில் ஈடுபடாத மக்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சமூகப் பிரபல்யங்களும் இருந்தார்கள். இந்த இரண்டு தரப்புகளில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டவர்கள் இணைத்தலைவர்களாக பதவி வகித்தார்கள். ஆனால் இங்குள்ள முக்கியமான விடயம் என்னவென்றால்,இந்த இரண்டு தரப்புக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை எழுதப்படவில்லை.
ஆனால் தமிழ் மக்கள் பொதுச்சபையானது ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை எழுதப்போவதாகக் கூறுகின்றது. கட்சிகளுக்கும் மக்கள் அமைப்புக்கும் இடையிலான ஒரு உடன்படிக்கை. அப்படி ஒரு உடன்படிக்கை தமிழ்த் தேசிய அரசியலில் இதுவரையில் எழுதப்பட்டதில்லை. முதல் தடவையாக அவ்வாறு ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை எழுதப்பட இருக்கின்றது. கடந்த ஆறாம் தேதி அது எழுதப்பட்டிருந்திருக்க வேண்டும். எனினும் சம்பந்தரின் மறைவினால் அது பிற்போடப்பட்டது.அப்படி ஒரு புரிந்துணர் உடன்படிக்கை எழுதப்படுமாக இருந்தால் அது தமிழ் அரசியலில் ஒரு புதிய தோற்றப்பாடாக இருக்கும்.
அந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையானது எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்பொழுது அந்த கட்டமைப்புக்குள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இணையவில்லை. தமிழரசுக் கட்சியும் இணையவில்லை.அனந்தியின் கட்சியும் இணையவில்லை. இக்கட்சிகள் எதிர்காலத்தில் இணையலாம் என்ற எதிர்பார்ப்பு அப்பொதுக் கட்டமைப்புக்கு உண்டு. குறிப்பாக மாவை சேனாதிராஜா அண்மையில் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில், தமிழ்ப்பொது வேட்பாளருக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து இருக்கின்றார்.
தமிழ்ப் பொதுச்சபை எதைக் கூறுகின்றதோ,அதைத்தான் அவர் பிரதிபலித்தார். தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவதன் மூலம் புதிய மக்கள் ஆணை ஒன்றைப் பெறுவது என்ற விடயத்தை விடவும், தமிழ் மக்களை ஒன்றாகத் திரட்டுவது என்ற விடயம் முக்கியமானது என்று அவர் அதில் அழுத்திக் கூறுகின்றார்.தற்பொழுது கட்சியின் தலைவராக அவர்தான் காணப்படுகின்றார். எனவே அவருடைய நிலைப்பாடு இங்கு முக்கியமானது. கடந்த ஜனவரி மாதம் கட்சிக்குள் நடந்த தேர்தலின் பின் கட்சி இரண்டு அணிகளாக தெளிவாகப் பிரிந்து விட்டது. அதில் சுமந்திரனை ஆதரிக்கும் தரப்பு தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற நிலைப்பாட்டுக்கு எதிராகக் காணப்படுகின்றது. அதேசமயம் சுமந்திரனுக்கு எதிரான சிறீதரனின் அணியானது தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கின்றது.ஆனால் கட்சியின் முடிவைத்தான் தங்கள் ஏற்றுக்கொள்வோம் என்றும் அவர்கள் கூறிக் கொள்கிறார்கள். கட்சியின் முடிவு என்று பார்த்தால் மத்திய குழுவில் பெரும்பாலானவர்கள் பொது வேட்பாளருக்கு எதிராகக்காணப்படுகின்றார்கள். தமிழ்ப் பொது வேட்பாளரை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்ற வாக்கெடுப்புக்கு விட்டால், மத்திய குழு எதிராக வாக்களிக்கும் நிலைமைகள்தான் அதிகமாகக் காணப்படுகின்றன.
இப்படிப்பட்டதொரு பின்னணியில் மாவை சேனாதிராஜா தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பது கட்சிக்குள் மாற்றங்களை ஏற்படுத்துமா? சிறீதரனும் மாவையும் ஒன்றாகச்சேர்ந்து பொது வேட்பாளர் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்துவார்களாக இருந்தால் எதிர்காலத்தில் என்ன நடக்கும்?
தமிழரசுக் கட்சி தமிழ்ப் பொதுக் கட்டமைப்புக்குள் இணையுமோ இல்லையோ, ஜனாதிபதி தேர்தலுக்கான ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தும் தன் முயற்சியில் தமிழ்மக்கள் பொதுச்சபை பின்வாங்காது என்று தெரிகிறது. தங்களோடு இணையும் கட்சிகளை வைத்து அவர்கள் அந்த நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என்று தெரிகிறது. அதற்கு ஆதரவாக மக்கள் அமைப்புகளை மேலும் தங்களோடு இணைக்கும் பணிகளை அந்த அமைப்பு முன்னெடுத்து வருகின்றது.
மக்கள் அமைப்புக்கள் மேலும் பெரிய அளவில் தமிழ் மக்கள் பொதுச்சபைக்குள் இணைந்து அதை பலப்படுத்தும் பொழுது,தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக மக்கள் அபிப்பிராயம் திரளும்.அந்த அபிப்பிராயத்துக்கு தமிழ் கட்சிகள் வினையாற்ற வேண்டிவரும். இப்பொழுது தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்க்கும் அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய தேவை ஏற்படும். ஏனென்றால் மக்கள் ஒன்றாகும் போது கட்சிகள் வேறாகி நிற்க முடியாது.
கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டவர்கள்தான் இப்பொழுது தமிழ்மக்கள் பொதுச்சபைக்குள்ளும் காணப்படுகின்றார்கள். ஒரு செயற்பாட்டாளர் பகிடியாகக் கூறுவதுபோல கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை செய்த அதே காலப்பகுதியில். யாழ்ப்பாணம் பளைப் பகுதியில் ஒரு காணியை வாங்கி அங்கே தென்னங்கன்றுகளை நட்டிருந்தால் இப்பொழுது தென்னை காய்க்கத் தொடங்கியிருக்கும் என்பது உண்மைதான்.ஏனென்றால் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் கடந்த 15 ஆண்டுகளிலும் பெருமளவுக்குத் தோல்வி கண்டுவிட்டன. மாறாக கூட்டுக்களும் கட்சிகளும் சிதைந்துகொண்டே போகின்றன.இந்தச் சிதைவைத் தடுக்கவேண்டும் என்பதுதான் தமிழ்மக்கள் பொதுச்சபையின் மிகத்தெளிவான இலக்கு ஆகும்.
கட்சிகளை ஒருங்கிணைக்க முடியவில்லை.கட்சிகள் தங்களுக்கிடையே ஒன்றுபடும் நிலைமைகளும் பிரகாசமாக இல்லை. கடந்த 15 ஆண்டுகளிலும் பெரிய கூட்டுகள் உடைந்து சிறிய கூட்டுக்கள் உருவாகியிருக்கின்றன. பெரிய கட்சிகள் உடைந்து கட்சிக்குள் அணிகள் தோன்றியிருக்கின்றன. எனவே கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ்மக்கள் ஒன்றுபடவில்லை.சிதறிக் கொண்டு போகின்றார்கள்.சில மக்கள் போராட்டங்கள்,மக்கள் எழுச்சிகள்,ஒடுக்கு முறைக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்றவற்றில் மக்கள் கட்சிகளைக் கடந்து ஒன்றுபட்டிருக்கிறார்கள். ஆனால் அவை தொடர்ச்சியான ஒன்றுபடல்கள் அல்ல.
இப்படிப்பட்டதோர் துப்பாக்கியமான அரசியல் சூழலில்,கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டுக் களைத்துப்போன குடிமக்கள் சமூகங்களைச் சேர்ந்தவர்கள்தான் இப்பொழுது மக்களை ஒன்றுபடுத்தும் பணியில் நேரடியாக இறங்கியிருக்கின்றனர்கள். மக்களை ஒன்றுபடுத்தினால் கட்சிகளை ஒன்றுபடுத்தலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.இதுவரை காலமும் மேலிருந்து கீழ்நோக்கி அவர்கள் முயற்சித்தார்கள்.அதாவது கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு பெரிய கூட்டை உருவாக்க முயற்சித்தார்கள். ஆனால் இப்பொழுது கீழிருந்து மேல்நோக்கி,அதாவது மக்களை ஒன்றிணைப்பதன்மூலம் கட்சிகளை ஒன்றிணைக்கலாமா என்று முயற்சிக்கின்றார்கள்.அவ்வாறு மக்கள் ஒன்று திரளுவார்களாக இருந்தால் கட்சிகள் ஒன்று திரளத்தானே வேண்டும்?