கதிரோட்டம் – 19-07-2024
யாழ்ப்பாணத்தை மீண்டும் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பிப் பாருங்கள். விடுதலைப் போராட்டமும் மக்களின் எழுச்சியும் ஒரு பக்கம் வீச்சாக எழுந்து நிற்க, கற்றவர்களும் மற்றவர்களும் ஒன்றாகவே சிந்தித்து கஸ்டங்களைப் பொறுத்துக் கொண்டு எவ்வளவுதான் இராணுத்தின் கொடுமைகளும் கொலைகளும் இடம்பெற்றாலும் இதயங்களில் ‘நமக்கான ஒரு நாடு எப்போதென்றாலும் கிட்டினால் தற்போது அனுபவிக்கும் கஸ்டங்களை பொறுத்துக்கொள்வோம்’ என்று வாழ்ந்த காலப்பகுதி.
அப்போதும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச நிர்வாகம் குறைந்தளவு வளங்களுடன் இயங்கிக்கொண்டு தான் இருந்தது. யாழ்ப்பாணத்தை நிர்வகிக்கும் அரசாங்க அதிபராக பஞ்சலிங்கம் பணியாற்றினார்.அவரிடத்தில் கண்டிப்பும் கடமை உணர்வும் இருந்தது. யுhழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளராக சி.வி. கே. சிவஞானம் அவர்கள் பொறுப்பேற்று நீண்ட காலம் தன் பணியில் நேர்மையாகவும் கண்டிப்பாகம் சேவையாற்றினார். அந்த காலப்பகுதியில் தான் யாழ்ப்பாணத்தில் பிரதான வைத்தியசாலையாக விளங்கும் பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக விளங்கிய நர்ச்சினாக்கினியர் பணியாற்றினார்.
அவர் கூட யாழ்ப்பாண வைத்தியசாலை எதிர்கொண்ட சவால்களைச் சமாளித்து போராடிய வண்ணம் பணி செய்தார். இந்த மூன்று உயர் அதிகாரிகளுக்கும் உதவியாக ஆங்காங்கே பல கனிஸ்ட அதிகாரிகள் பணிசெய்து ‘மக்கள் சேவை’ ஆற்றினார்கள்.
அந்த காலப்பகுதியில் வட பகுதியின் அரச நிர்வாகப் பகுதியை மக்களும் ஊடகங்களும் உற்று நோக்கிய வண்ண்ம் இந்த அதிகாரிகளின் சேவையை பாராட்டிய வண்ணம் இருந்தார்கள். ஆனால் அவர்களும் பல எதிர்ப்புக்களையும் அச்சுறுத்தல்களையும் பல திசைகளிலிருந்தும் எதிர் கொண்டார்கள். ஆனால், தங்கள் பணிசெய்யும் முறையிலிருந்து விலகிச் செல்லவில்லை. இதை அவதானித்தவர்களாகவும் அவர்களின் சேவை மனப்பான்மைக்கு சாட்சியாகவும் பலர் உலகெங்கும் வாழ்கின்றார்கள்.
இவ்வாறானவர்கள் பணி செய்த எமது தாய் மண்ணில் தற்போது என்ன நடைபெறுகின்றது? மக்களின் உயிர் காக்க வேண்டியவர்களாக கணிக்கப்படும் ‘வைத்திய சிறுந்தகைகள’;- மக்கள் விரோதிகளாக மாறிவிட்டார்கள். இதற்கு காரணம் பொருளாசைதான் என்பதை அவர்களின் செயற்பாடுகளைக் கவனித்து வந்த சக வைத்தியப் ‘பெருந்தகையான’ அர்ச்சனா அவர்கள் வெளியுலகத்திற்கும் ஊடகப் பெருவெளிக்கும் கொண்டு வந்துள்ளார்.
ஆனால் அவரது ‘உண்மை’யை பொய்யாக்குவதற்கு பெருந்திரளாக கூட்டுச் சேர்ந்திருக்கும் வைத்தியர்கள், சட்டத்தரணிகள் மற்றும் அவர்கள் போன்ற பொருளாசை கொண்டவர்களோடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து கொண்டு நீதிக்கு எதிராக விரோத யுத்தம் நடத்துகின்றார்கள்.
இவ்வாறான விடயங்களும் விபரங்களும் எமது தாய் மண்ணிலிருந்து மிகவும் விரைவாக ஊடகங்கள் வாயிலாக உலகத் தமிழர்களின் காதுகளுக்கும் கண்களுக்கும் அருகில் கொண்டு செல்லப்படுகின்றன.
இவ்வாறான நிலையில், அந்த மண்ணில் இடம்பெறும் அநியாயங்களுக்கு எதிராக ‘போர்க்கொடி’ எடுத்திருக்கும் வைத்தியப் பெருந்தகையான அர்ச்சனா அவர்களை அவரது இருப்பிலிருந்து நீக்குவதற்கு பல ‘மோசடி’ வைத்தியர்களும் நீதிக்கு விரோதமாகச் செயற்படும் சட்டத்தரணிகளும், மக்களின் துயரங்களை எப்போதும் கணக்கில் எடுக்காமல் சுகபோக வாழ்க்கை வாழும் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற பிரதிநிதிகளும் ஒன்று பட்டு திரண்டிருக்கின்றார்கள்.
இதற்கு ஆதாரமாக யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதரா வைத்தியசாலை முன்னாள் பொறுப்பதிகாரி வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் பிரபல சட்டத்தரனி கு.குருபரன் வாதிட்டுள்ளார் என்ற தகவலும் உலகெங்கும் பரவி நிற்க நியாய விரும்பிகள் திகைத்து நிற்கின்றார்கள். எமது தாய் மண்ணில் சமூக நீதியின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட வேண்டும் என்று போராடியவர்களின் சிந்தனைகளுக்கு மாறாக தற்போது ;மோசடி’ வைத்தியர்களும் நீதிக்கு விரோதமாகச் செயற்படும் சட்டத்தரணிகளும், மக்களின் துயரங்களை எப்போதும் கணக்கில் எடுக்காமல் சுகபோக வாழ்க்கை வாழும் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற பிரதிநிதிகளும் ஒன்று பட்டு திரண்டிருக்கின்றார்கள் என்பது வெளிச்சமாகத் தெரிகின்றது.
வைத்தியப் பெருந்தகை அர்ச்சுனா அவர்கள் தனது முகநூலில் வைத்தியர்களையும் வைத்திய உயர் அதிகாரிகளையும் குற்றம் சாட்டி பல பதிவுகளை வெளியிட்டுள்ளார். சாவகச்சேரி வைத்தியசாலையில் நடைபெற்ற ஊழல்களையும் முறைகேடுகளையும் தனது பதிவுகளில் துணிச்சலுடன் வெளியிட்டிருந்தார்.
எனினும் வைத்தியர் அர்ச்சுனாவை அச்சுறுத்தும் விதமாக இருப்பதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் மற்றும் கருத்துக்கள் வெளியாகியிருந்தன. இதற்கு பின்னணியில் எமது தாய் மண்ணின் ;மோசடி’ வைத்தியர்களும் பணத்தாசை கொண்ட சட்டத்தரணிகளும், தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற பிரதிநிதிகளும் அடங்குகின்றார்கள் என்பதை அறிகின்ற போது எமது ‘மண்ணில்’ ஏற்பட்ட மாற்றம் எவ்வாறான பாதிப்புக்களை கொண்டு வரப்போகின்றது என்று மக்களை நேசிப்பவர்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளார்கள். ஆனால் அனைத்தையும் ‘சுவைத்து’ வாழ்ந்தவர்கள் சமர் செய்து அநீதியை நிலை நாட்டுவோம் என்று ஒன்றாகச் சேர்ந்துள்ளார்கள்
எவ்வாறாயினும் எமது மண்ணில் நீதி வெற்றிபெற வேண்டும் என்று சிந்திப்பவர்களோடு நாமும் தொடர்ச்சியாக இணைந்தே இருப்போம் என்பதையும் எழுதி வைக்கின்றோம்!