மீண்டும் மீண்டும் கைதுகள் இடம்பெறுகின்ற வேளையில் கூட, இந்திய மீனவர்கள் தாங்களாகவே ஒரு உள்நோக்கத்துடன் இவ்வாறு வருகின்றார்களா என்ற சந்தேகம் ஏற்படுகின்ற தாக வடக்கு மாகாண கடத் தொழிலாளர் இணையத்தின் தலைவரும் அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர்ருமான என்.வி.சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
20-07-2024 அன்று அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக எமது கடலில் இந்திய இழுவை படகுகளின் ஆக்கிரமிப்புக்கள் முன்பு ஒரு காலமும் இல்லாத வகையில் கூடுதலாக உள்ளதை நாங்கள் கண்களூடாக பார்க்கக் கூடியதாக உள்ளது.
இந்திய மீனவர்களை இலங்கையில் கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா இராமேஸ்வரத்தில் அங்குள்ள மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விடயத்திலே இந்திய மத்திய அரசும் கவனம் செலுத்தவில்லை. இதில் மத்திய அரசு கூடிய கவனம் செலுத்தி படகுகளையும் மீனவர்களையும் விடுதலை விடுவிக்க வேண்டும் என்று மீனவர்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக தொப்புள்கொடி உறவுகளால் தொடர்ச்சியாக எமக்கு இழைக்கப்படும் துன்பங்களும், துயரங்களும், வேதனைகளுமாகவே இவற்றை நாம் பார்க்கின்றோம். புரிந்தும் புரியாதது போல் நடந்து கொண்டு, இந்தியாவில் இருந்து எமது பகுதிக்குள் வந்து தாமும் துன்பத்துக்குள் சிக்கிக் கொண்டு எங்களையும் வாழ விடாமல் துன்பத்துக்குள்ளே தள்ளுகின்றார்கள்.
நீங்கள் உங்களது கடற்பரப்பில் இருக்கின்ற மீன்களை பிடித்து வாழ்வாதாரத்தை ஈட்டிக் கொள்ளுங்கள். அல்லது மத்திய, மாநில அரசுடன் கதைத்து உங்களுக்கு தேவையான வாழ்வாதாரத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.
இரண்டு அரசாங்கங்களும் சேர்ந்து மீன்பிடிப்பதற்கு உங்களுக்கு அனுமதி தந்தாலும் கூட எமது உயிர் இருக்கின்றவரை நாம் நமது வளத்தை அடுத்த நாட்டிற்கு கையளிக்கவோ, வளங்களை சூறையாடிச் செல்லவோ நாங்கள் விட மாட்டோம். எமது உயிரை கொடுத்தாவது அந்த வளங்களையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முயற்சிப்போம்.
மடமைத்தனமாக அரசாங்கத்தை வற்புறுத்தி போராட்டத்தை நடத்துவதை கைவிடுங்கள். அனைவரும் ஒன்றுகூடி ஒரு பேச்சு வார்த்தை நடாத்தி, இரண்டு பகுதியும் வாழக்கூடியதாக ஒரு நிலைப்பாட்டை எட்ட வேண்டும் என்றார்.