கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவனான 14 வயது சிறுவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவனது உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவனுக்கு நிபா காய்ச்சல் அறிகுறி தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வு மையத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு நடத்தப்பட்ட சோதனையிலும் இது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிறுவன் தனிமைபடுத்தப்பட்டு கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அந்த சிறுவன் கவலைக்கிடமானதை தொடர்ந்து மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வந்தது. சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் உயிரிழந்தார். இந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.