சிவகாசி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் கார்த்திக் பாண்டியன் கொலை ஆணவக் கொலை இல்லை எனவும் வெட்டிக் கொல்லப்பட்டவரும் பெண்ணின் குடும்பத்தாரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என விருதுநகர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘விருதுநகர் மாவட்டம், அய்யம்பட்டி கிராமம், மாரி முத்து என்பவரின் மகன் கார்த்திக் பாண்டியன் (27) என்பவரும் மகாத்மா காந்தி நகரில் வசித்து வரும் பொன்னையா என்பவரின் மகள் நந்தினி (22) என்பவரும் காதல் திருமணம் செய்து அய்யம்பட்டி கிராமத்தில் வசித்து வந்துள்ளனர். இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நந்தினியின் சகோதரர்கள் பாலமுருகன், தனபாலமுருகன் மற்றும் அவரது நண்பர் சிவா ஆகியோர் நேற்று லெட்சுமி நகர், கண்ணன் சூப்பர் மார்க்கெட் அருகில் நந்தினி வேலை பார்க்கும் கடை அருகில் வைத்து கார்த்திக் பாண்டியனை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகள் மூவரும் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவத்தை ஆணவக்கொலை என்று தவறாக சிலர் செய்தி வெளியிட்டு வருகின்றனர். இது ஆணவக்கொலை அல்ல. இறந்தவரும் அவர் காதல் திருமணம் செய்த பெண்ணும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். மேலும் சமீபத்தில் அவர்களது மற்றொரு சகோதரியும் காதல் திருமணம் செய்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த அவரின் சகோதரர்கள் இந்த கொலையை செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வருகிறது. எனவே தவறான உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.