கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. வெள்ளைப் பேப்பரில் சிவப்பு மையால் எழுதப்பட்ட ஒரு சுவரொட்டி. “தேசமே பயப்படாதே” என்று அதில் எழுதப்பட்டிருந்தது. யாருடைய சுவரொட்டி அது என்பதற்கு எந்தக் குறிப்பும் இருக்கவில்லை. அது ஒரு விதத்தில் அனாமதேயச் சுவரொட்டி. எந்த தேசம் யாருக்கு பயப்படுகிறது என்ற விளக்கம் எதுவும் அங்கே இல்லை. இப்படித்தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகவும் ஒரு சுவரொட்டி சில வாரங்களுக்கு முன் ஒட்டப்பட்டது. முதலில் ஒரு சுவரொட்டியில் நற்செய்தி வருகிறது என்று எழுதப்பட்டிருந்தது. அது ஆவிக்குரிய கிறிஸ்தவ சபைகள் வெளியிடும் பிரசுரங்களை ஞாபகப்படுத்தியது. அடுத்தடுத்த நாள் ரணில்தான் செய்வார் என்ற பொருளில் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டது. முதலாவது சுவரொட்டி ஒரு புதிர் போல காணப்பட்டது. இரண்டாவது சுவரொட்டி அந்த புதிருக்குப் பதிலாகக காணப்பட்டது. அந்நாட்களில் பன்னாட்டு நாணய நிதியத்தின் அடுத்தகட்ட கடன் உதவியைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் பெருமளவுக்கு வெற்றியடைந்திருந்தன.அந்தப் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு உரையாற்ற இருந்தார். நாட்டைப் பொருளாதார நெருக்கடியில் இருந்து நான் படிப்படியாக மீட்டு வருகிறேன் என்பது தான் அவருடைய நாட்டு மக்களுக்கான நற்செய்தியாக இருந்தது.
மேற்கண்ட இரண்டு சுவரொட்டிகளைத் தவிர கடந்த வாரத்தில் மற்றொரு சுவரொட்டி யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்டது. அதுவும் ஒரு பெரிய சுவரொட்டி. அதில் “எங்கள் தோழர் அனுர” என்று எழுதப்பட்டிருந்தது. அதில் அனுர குமார திசாநாயக்கவின் பெரிய படம் ஒன்றும் அச்சடிக்கப்பட்டிருந்தது.
இப்படியாக யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கைக் கட்சிகள் சுவரெட்டிகளை மாறி மாறி ஒட்டத் தொடங்கி விட்டன. மேற்கண்ட சுவரொட்டிகள் நிச்சயமாக ஜனாதிபதி தேர்தலில் நோக்கியவைதான். தமிழ் மக்களின் மனங்களில் இடம் பிடிப்பதற்கு மூன்று தென்னிலங்கை வேட்பாளர்களும் கடுமையாக முயற்சித்து வருகிறார்கள். ஆனால் தமிழ்மக்கள் அந்த சுவரொட்டிகளை ஆர்வத்தோடு பார்க்கின்றார்களா? ஆர்வத்துடன் பார்க்கிறார்களோ இல்லையோ பார்க்கிறார்கள். அதே சமயம் அதை கடந்தும் போகின்றார்கள். தமிழ் மக்களின் கவனம் இப்பொழுது அதிகமாக மருத்துவர் அர்ச்சுனாவின் மீதுதான் குவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்மக்கள் தாங்களாக கவனத்தைக் குவிக்கிறார்கள் என்பதை விடவும் சமூக வலைத்தளங்களும் யுடியுப்களும் தமிழ் மக்களின் கவனத்தை அர்ஜுனாவை நோக்கி குவிமையப்படுத்துகின்றன.ஆனால் யாழ்ப்பாணத்தில் உள்ள ஸ்தாபிக்கப்பட்ட அச்சு ஊடகங்கள் அர்ஜுனாவை நோக்கி ஒப்பீட்டளவில் அதிகம் கவனத்தைக் குவிக்கவில்லை.
இப்படிப்பட்ட ஒரு பின்னணியில், கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடந்த ஒரு நிகழ்வுடன் தமிழ் ஊடகங்களின் கவனம் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி ஒப்பீட்டளவில் அதிகமாக குவிக்கப்படுகின்றது. கடந்த திங்கட்கிழமை தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்புக்கும் தமிழ்த் தேசிய கட்சிகள் ஏழிற்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை எழுதப்பட்டது. கட்சிப் பிரமுகர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், ஊடகங்கள் உள்ளடங்கலாக நூற்றுக்கும் குறையாத பார்வையாளர்கள் அங்கே இருந்தார்கள்.ஏழு கட்சிகளின் தலைவர்களும் ஏழு சிவில் சமூகப் பிரதிநிதிகளும் அந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்கள். தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான பொதுக்கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதே அந்த உடன்படிக்கையின் நோக்கமாகும்.அப்படி ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நடந்து வருகின்றன.
அந்த முயற்சிக்கு தெற்கிலும் எதிர்ப்பு உண்டு. வடக்கிலும் கிழக்கிலும் எதிர்ப்பு உண்டு. தென்னிலங்கையில் பிரதான வேட்பாளர்களில் ஒருவராகிய ரணில், யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பொழுது விக்னேஸ்வரனை சந்தித்தார். சந்திப்பில் தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு ஒரு பொது வேட்பாளரை நிறுத்துமா? என்று கேட்டிருந்தார்.அக்கேள்வியின் உட்பொருள் தமிழ் கட்சிகளால் அது முடியாது என்பதுதான். அதே சமயம் சஜித் பிரேமதாசதான் அதைப் பற்றிப் பொருட்படுத்தப் போவதில்லை என்று ஒரு தமிழ் ஊடகவியலாளருக்கு தெரிவித்திருந்தார்.அனுர குமரவும் அதை ஒரு விடயமாக எடுத்துக்கொண்டு தன் மேடைகளில் பேசுவது கிடையாது. ஆகமொத்தம் மூன்று பிரதான தென்னிலங்கை வேட்பாளர்களும் அந்த விடயத்தை பொருட்படுத்தத் தேவையான ஒரு விடயமாகக் கருதவில்லை.அதேசமயம் அதற்கு எதிராக ஒரு பகுதி சிங்கள விமர்சகர்கள் எழுதினார்கள். தவிர “கொழும்பு டெலிகிராஃப் “எனப்படும் இணையதளத்தில் பேராசிரியர் ரட்னஜீவன் கூல் பொது வேட்பாளருக்கு எதிராக எழுதியிருந்தார்.
அதேசமயம் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினர் அதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். வடக்கில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் எதிர்க்கிறார்கள். கிழக்கில் பிள்ளையான் மற்றும் முஸ்லிம் கட்சிகள் எதிர்கின்றன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப் பக்கிரிக்கப் போவதாகக் கூறுகின்றது.அதே சமயம் தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது இந்திய உளவுப் பிரிவின் புரொஜக்ட் என்றும் அது விமர்சித்து வருகின்றது.
சுமந்திரன் அதனை ஒரு கோமாளிக் கூத்து என்று சொன்னார். அதற்கு எதிராக ஒரு கூட்டத்தைக் கூட்டி மிகவும் உணர்ச்சி பொங்க உரை நிகழ்த்தினார். அதன் பின் அமெரிக்கத் தூதரகம் ஒழுங்குபடுத்திய ஒரு நிகழ்வில், தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் கட்சித் தலைவர்களையும் விமர்சகர்களையும் ஏள்ளிநகையாடியிருக்கிறார். அவருக்கு ஆதரவான “காலைக்கதிர்“; “காலை முரசு” போன்றஊடகங்கள் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் தரப்புகளை விமர்சித்துச் செய்திகளையும் ஆசிரியர் தலையங்கங்களையும் பத்திகளையும் எழுதி வருகின்றன. சில இணையதளங்கள் தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் தரப்புகளை “சில குழுக்கள்” “சில தனி நபர்கள்” என்றெல்லாம் தரம் தாழ்த்தி எழுதின. சில யூ டியுப்கள் “பத்தி எழுத்தாளர்கள்” என்ற வார்த்தையை, அந்தஸ்து குறைந்த ஒரு வார்த்தையாகப் பயன்படுத்தின. இந்த முயற்சிகளுக்கெல்லாம் எங்கிருந்து காசு வருகிறது என்ற சந்தேகத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பின. ஏதோ ஒரு தூதரகம் அல்லது ஏதோ ஒரு வெளிநாட்டின் உளவுப்பிரிவு அல்லது கொழும்பில் உள்ள ஏதோ ஒரு கட்சி, அல்லது புலம்பெயர்ந்த தமிழ் தரப்பில் உள்ள ஏதோ ஒரு தரப்பு அதன் பின்னணியில் இருக்கலாம் என்ற ஊகங்களையும் சந்தேகங்களையும் சில சமூக ஊடகங்கள் திட்டமிட்டு உருப்பெருக்கின.
எனினும் ஊடகப் பரப்பில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவான ஊடகங்கள்தான் ஒப்பீட்டுளவில் அதிகமாகக் காணப்படுகின்றன. தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னுறுத்தும் தரப்புகளின் மத்தியில் தமிழில் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதும் பெரும்பாலானவர்கள் காணப்படுகிறார்கள்.
இப்படிப்பட்டதோர் பின்னணியில், கடந்த திங்கட்கிழமை தந்தை செல்வா கலையரங்கில் மதியம் 12 மணிக்கு கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையானது, பொது வேட்பாளர் என்ற விடயம் கட்டமைப்பு சார்ந்து அடுத்த கட்டத்துக்கு நகரத் தொடங்கி விட்டது என்பதனை தெளிவு படுத்தியது. அதை ஒரு பகிடி என்று கூறிப் பரிகசித்தவர்கள்; அதை முன்னெடுப்பவர்களை” கொமெடி பீஸ்“களாக வருணித்தவர்கள்; குழுக்கள், பத்தி எழுத்தாளர்கள் என்றெல்லாம் விமர்சித்தவர்கள்; உளவாளிகள், உளவாளிகளின் உழவாளிகள், ஏஜென்ட்கள் என்றெல்லாம் விமர்சித்தவர்கள்.. அனைவரும் அது அப்படி ஒரு வளர்ச்சிக்குப் போகக்கூடாது என்று எதிர்பார்த்தவர்கள்தான். அல்லது அது அப்படி ஒரு வளர்ச்சிக்கு வராது என்று எதிர்பார்த்தவர்கள்தான்.ஆனால் இப்பொழுது நிலைமை அடுத்த கட்டத்துக்கு நகரத் தொடங்கிவிட்டது.
இப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கும் பொதுக் கட்டமைப்பானது 14 பேர்களைக் கொண்டது.ஏழு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் 7 சிவில் சமூக பிரதிநிதிகளும் அதில் உண்டு. அப்படி ஒரு கட்டமைப்பு, அப்படி ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை இதற்கு முன் ஈழத் தமிழர்களின் நவீன அரசியலில் உருவாக்கப்பட்டதில்லை.
அந்த உடன்படிக்கையானது,அதில் எதிர்காலத்தில் இணையக் கூடிய கட்சிகளுக்காக தொடர்ந்து திறந்திருக்கும் என்று அந்த நிகழ்வில் கூறப்பட்டது.விரைவில் பொது வேட்பாளர் யார்? அவருடைய தேர்தல் விஞ்ஞாபனம் எது? போன்ற விடயங்கள் வெளித் தெரிய வரலாம்.
தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் சாராம்சத்தில்,தமிழ்ப் பொது நிலைபாடுதான்.தமிழ்ப் பொது நிலைப்பாடு என்பது, நபர்கள் சார்ந்தது அல்ல; கட்சிகள் சார்ந்தது அல்ல. அது தமிழ் ஒற்றுமையின் குறியீடு. தமிழ்ப் பொது நிலைப்பாட்டின் குறியீடு. அதைத் தனி நபர் மையப்படுத்தி அல்லது கட்சி மையப்படுத்தி சிந்திக்கத் தேவையில்லை.
இந்த விடயத்தில் பலரும் முதலில் கேட்பது யார் அந்த பொது வேட்பாளர்? அவரை ஏன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை? என்பதுதான். அவர் யார் என்பதை கூறுங்கள் நாங்கள் ஆதரவை காட்டுகிறோம் என்று கூறுபவர்கள் அநேகர் உண்டு.இந்தக் கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன? தமிழ் அரசியல் கடந்த தசாப்தங்களாக நபர்களை மையப்படுத்தி அல்லது கட்சிகளை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டதுதான் காரணம்.
ஆனால் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒரு குறியீடு என்றும்,இப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கும் பொதுக் கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்பட இருக்கும் உபகுழுக்களில் ஒன்று அந்த வேட்பாளர் யார் என்பதை விரைவில் கண்டுபிடிக்கும் என்றும் ஏற்கனவே கூறப்பட்டு விட்டது. எனினும் கட்டமைப்புக்கு ஊடாக அல்லது கட்டமைப்பு சார்ந்து சிந்திக்காத ஓர் அரசியல் போக்கின் விளைவாக, தனி நபர்களை மையப்படுத்தி அல்லது கட்சிகளை மையப்படுத்தி சிந்திக்கும் ஓர் அரசியல் போக்கின் விளைவாக,யார் அந்த வேட்பாளர் என்ற கேள்வி எப்பொழுதும் மேலெழுகின்றது.அதற்குரிய கட்டமைப்பு இனிவரும் வாரங்களில் அதற்கு விடை கூறும்.
இவ்வாறாக கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்ப் பரப்பில் ஓர் அரசறிவியல் கருத்தாக, சில கட்டுரையாளர்களின் கருத்துருவாக்கமாக,சில கட்சிகளின் விருப்பமாக, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்கள் பேரவையின் தெரிவாகக் காணப்பட்ட ஒரு விடயம், இம்முறை அதாவது 15 ஆண்டுகளின் பின் செயல் வடிவம் பெறும் ஒரு நிலைமை தோன்றியிருக்கிறது. அதற்கு 15 ஆண்டுகள் எடுத்திருக்கிறது என்பது தமிழ் அரசியலில் செயலூக்கமின்மையை மட்டும் காட்டவில்லை. அதைவிட முக்கியமாக,தமிழரசியல் கடந்த 15 ஆண்டுகளாக எதிர்த் தரப்புக்கு பதில் வினையாற்றும் ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது என்பதனையும் காட்டுகின்றது.தமிழ்ப் பொது வேட்பாளர் என்று தெரிவு அந்த அரசியல் போக்கை செயல்முனைப்பு உள்ளதாக மாற்றக் கூடியது.
இப்பொழுது உருவாகியிருக்கும் தமிழ் ஐக்கியமானது, அதன் அடுத்த அடுத்த கட்ட வளர்ச்சிகளுக்கு போகுமாக இருந்தால் அது எதிர்காலத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற ஒரு விடயத்தையும் கடந்து நீண்ட கால நோக்கில் தமிழ் அரசியலை சரியான தடத்தில் ஏற்றும் ஒரு கட்டமைப்பாக வளர்ச்சி பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கும் கூட்டானது,ஏழு கட்சிகளோடானது. தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்ட ஏழு கட்சிகள்.
அரசியல் என்பது சாத்தியக கூறுகளின் கலை.சாத்தியக் கூறானவற்றில் இருந்துதான் எதையும் தொடங்கலாம். ஐக்கியமும் உட்பட. சாத்தியமானவற்றில் இருந்து தான் சாத்தியமற்றவற்றைச் சாதிக்கலாம். எவ்வளவு உயரத்துக்கு வானத்தில் கோபுரம் கட்ட விரும்பினாலும் நிலத்தில் கிடைக்கக்கூடிய நிலப்பரப்பில்தான் அத்திவாரத்தை போட வேண்டும். அப்படி ஒரு அத்திவாரம்தான் இப்பொழுது போடப்பட்டிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?