கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மிகவும் பழமையான கோவில் ஆகும். இந்த கோவிலின் உள் பிரகாரத்தில் வடக்கு பக்கம் மிகவும் பழமையான புனிதமான தீர்த்த கிணறு உள்ளது. இந்த கிணறு கடற்கரையில் இருந்து 50 அடி தூரத்தில் உள்ள போதும் உப்பு நீராக இல்லாமல் நல்ல குடிநீராக அமைந்து உள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த தீர்த்த கிணற்றில் இருந்துதான் தினமும் அம்மனுக்கு அபிஷேகத்துக்குரிய புனித நீரை கோவில் மேல் சாந்தி அல்லது கீழ் சாந்தி குடத்தில் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். கோவில் மூலஸ்தானத்துக்கு முன்பு உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் இருந்து பூமிக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதை வழியாகத் தான் கோவில் மேல் சாந்திகள் இந்த தீர்த்த கிணற்றுக்குள் சென்று அபிஷேகத்துக்குரிய புனித நீர் எடுத்து வருவதற்கான வழி உள்ளது. மேலும் அம்மனுக்கு பூஜைக்கு பயன்படுத்துவதற்குரிய புனித நீரும் இந்த தீர்த்த கிணற்றில் இருந்து தான் எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அம்மனுக்கு தினமும் காலையில் நைவேத்தியத்திற்காக படைக்கப்படும் வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், அரவணை பாயாசம், பால் பாயாசம், பொங்கல் போன்றவைகளை தயாரிப்பதற்காகவும் இந்த தீர்த்த கிணற்றில் இருந்து தான் தண்ணீர் மடப்பள்ளிக்கு எடுத்து கொண்டு செல்லப்படுவது வழக்கம். பக்தர்கள் காணிக்கையாக போடும் பணம் மற்றும் காசுகள் இந்த தீர்க்கக் கிணற்றின் மேலே உள்ள கருங்கற்களால் ஆன தளத்தில் குவிந்து கிடக்கின்றன. இந்த நிலையில் கோவிலில் ஆய்வு செய்ய வந்த கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் இந்த தீர்த்த கிணற்றை பார்வையிட்டார். அப்போது தீர்த்த கிணற்றில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், காசுகளை எண்ண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிணற்றை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த தீர்த்த கிணற்றுக்கு செல்லும் சுரங்க பாதையில் மின்விளக்கு வசதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த தீர்த்த கிணற்றில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், காசுகள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் திறந்து எண்ண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.