நெல்லையில் தொழில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்து வரும் ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் சுய தொழில் முனைவோருக்காக ரூ. 961 கோடியே 58 லட்சம் மானியத்துடன் சுமார் ரூ. 2,818 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 ஆயிரத்து 324 இளைஞர்கள் தொழில் முனைவோராக உருவாக்கப் பட்டுள்ளனர். நேரடியாகவும், மறைமுகமாகவும் 3 லட்சம் நபர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்ற கடந்த 10 ஆண்டுகளில் 55 ஆயிரத்து 230 நபர்கள் மட்டுமே தொழில் முனைவோராக உருவாக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் முன்னோடி திட்டமாக தமிழக அரசால் கடந்த ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோருக்காக தொடங்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் மூலம் ரூ. 159.40 கோடி மானியத்துடன் ரூ.302.86 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டு 1369 தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர்.
பின்தங்கிய தென் மாவட்டங்களில் ரூ. 262.13 கோடி மானியத்துடன் ரூ. 769.27 கோடி வங்கி கடன் உதவியுடன் 9,594 தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டை போல் வரும் பிப்ரவரி மாதம் தமிழக முதலமைச்சர் தலைமையில் உலக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் சிறு குறு நிறுவன துறையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள பேட்டை நூற்பாலை மற்றும் வள்ளியூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை ஆகியவை முழுமையாக கையகப்படுத்தி அங்கும் புதிய தொழில் தொடங்க இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். புதிய தொழில் முனைவோரை உருவாக்குவதில் அரசு கண்ணும் கருத்துமாக உள்ளது. அதிகாரிகளை ஊக்குவித்து இளைஞர்களை புது தொழில் முனைவராக உருவாக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.