இலங்கையிலிருந்து ந.லோகதயாளன்.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறும் என இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெள்ளிக்கிழமை 26ம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பல்வேறு குழப்பங்கள் நிறைந்த கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கையில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலிற்காக ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் தினமாகவும் அந்த வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக் குழுவின் தவிசாளர் ஏ.எல்.ரட்ணாயக்கா மற்றும் நான்கு சக உறுப்பினர்களும் ஒப்பமிட்டு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வந்த நிலையிலும் ஜனாதிபதித் தேர்தல நடக்கும் என்ற உறுதியான நம்பிக்கை இலங்கை வாழ் மக்கள் மத்தியில் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது